மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

பொங்கல் திருநாள்: தலைவர்களின் வாழ்த்து!

பொங்கல் திருநாள்: தலைவர்களின் வாழ்த்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அறுவடை திருநாளாம் பொங்கல் விழா உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் இன்று (ஜனவரி 15) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தை மாதம் என்பது அறுவடைக் காலம். மக்களைக் காப்பாற்ற நெல் மணிகளை வழங்குகிறது நிலம். புத்தரிசி கொண்டு புதுப்பானையில் புதிதாக்கப்பட்ட வீட்டில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று உள்ளமும் உதடும் மகிழ்ச்சி பொங்க, பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கும் உன்னதமான பண்பாட்டு விழாதான் பொங்கல் திருநாள். இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்

பொங்கல் விழா நம்மை எல்லாம் தலைநிமிரச் செய்யும் தமிழர் விழா. குடும்பம், குடும்பமாக, அன்புடன் வளர்க்கும் பசுவும், கன்றும் ஒருசேர தங்கள் அன்புக்குரல் எழுப்பிட எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம். எந்நாளும் நாங்கள், உங்கள் நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரர்களாக, உங்களுக்காகவே உழைப்போம். தமிழ்நாட்டை உயர்த்தி வைப்போம் என்பதே எங்களது பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியாகும்.

திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் அதுவே தமிழர்களது வாழ்க்கையை வளப்படுத்தும் உற்சாக மொழியாக இருக்கிறது. சாதி,மதப் பாகுபாடு இல்லாத தமிழர் திருநாள் அது. தை முதல்நாள் இயற்கையை வணங்கும் பொங்கல் திருநாள். சாதி மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணர்வைப் பெறும் வகையில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தளைக்க சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். மனித சமூகத்தைப் பிளவுபடுத்தும் சக்திகளை மறையச் செய்வோம். இயற்கையையும் பிற உயிரினங்களையும் காப்போம். இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றுவோம். பொங்கலைக் கொண்டாடுவோம். புத்துணர்வு பெறுவோம்.

பாமக நிறுவனர், ராமதாஸ்

தை தீர்வுகளின் மாதம் ஆகும். அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் கூறினார்கள். அதற்கேற்ற வகையில் தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கும், தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களுக்கும் இந்த ஆண்டு தைத்திருநாள் தீர்வுகளை வழங்கும்.

தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் வசந்தம் வீச தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் வகை செய்யட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர், வைகோ

எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம். தமிழக மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் கொண்டாடப்படுகிற அனைத்து பண்டிகைகளிலும் மிகச் சிறப்பாக தமிழ் மக்களின் பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் இரண்டறக் கலந்த ஒரு பண்டிகை என்று சொன்னால் அது பொங்கல் பண்டிகைதான். இன்று தமிழ் மக்கள் படுகிற துன்பத்தில் இருந்து விடுபட்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதே தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாகும். அந்த வகையில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். தை பிறந்து விட்டது. தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற பொங்கல் திருநாளில் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

சிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்

தைப்பொங்கல் சாதி, மதம் கடந்த திருநாள். இயற்கையையும் உழைப்பையும் போற்றுகிற உழவர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பண்பாட்டு அடிப்படையில் பொங்கல் விழா கொண்டாடும் இத்தருணத்தில், மத அடிப்படையில் மக்களை கூறுபோடும் அடாவடி நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது.

இதை முறியடிக்க இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாகப் போராடுவது அவசியமாகும். ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம்’ என்ற உறுதியோடு அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உழைக்கும் உழவர் மக்களின் நீண்ட நெடுநாள் நம்பிக்கை. ஆனால் ஆட்சியா ளர்களின் தவறான கொள்கைகளால் நாட்டிற்கு நல்வழி என்பது கேள்விக் குறியாகி விட்டது. கோலம் போடும் எளிய ஜனநாயக எதிர்ப்பை கூட ஏற்கமுடியாத அராஜகம், உள்ளாட்சியில் ஜனநாயக முறைகேடுகள், மாநில உரிமைகளை விட்டு கொடுக்கும் தன்மைகள் என மத்திய - மாநில அரசுகளின் தவறான கொள்கைகளை எதிர்த்து போராட அனைவரும் இப் பொங்கல் தினத்தில் சபதமேற்போம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர், காதர் மொய்தீன்

‘தை’ புத்தாண்டில் தைத் திங்களில் தமிழகத்தவர் பொங்கல் கொண்டாடும் பொன்னான பண்பாடு மிகவும் தொன்மையானது. இந்தப் பண்பாடு இன்று நேற்று வந்ததன்று. கடலும், மலையும் தோன்றிய காலந்தொட்டே, கல்தோன்றி மண்தோன் றாக் காலத்தே தோன்றிய மூத்த குடி யினரான தமிழர் பின்பற்றி வந்திருக்கும் பண்பாடு. தமிழ்ப் புத்தாண்டில் தமிழின் - தமிழரின் - தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையும் ஒளிர்ந்து வருகிறது. அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

விசிக தலைவர், திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் பொங்கலைக் கொண்டாடவில்லை எனினும், மக்களின் பாரம்பரியமான இந்தப் பண்பாட்டுத் திருவிழாவில் அவர்களோடு இணைந்து கலந்து இயங்குவது இன்றியமையாததாகும். உழவர் பெருங்குடிகளான உழைக்கும் மக்களின் உன்னதமான திருவிழா பொங்கல். ஆனாலும் அதன் பண்பாட்டுக்கூறுகளில் சனாதனத்தைத் திணிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது. அதாவது பொங்கலை இந்து மதம் சார்ந்த பண்டிகையாகக் கொண்டாடும்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் மதசார்பற்ற ஒரே திருவிழா தமிழர் திருநாள்தான். அத்தகைய புரிதலோடு இவ்விழாவில் மக்களோடு இணைந்து பங்கேற்க வேண்டுகிறேன்.

தவாக தலைவர், வேல்முருகன்

பொங்கல் ஒரு மதச் சார்பின்மைத் திருநாளுமாகும். தைப்பொங்கல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல; தமிழர்களின் மரபார்ந்த விழாவாகும். சங்க இலக்கியமே தைப்பொங்கலைப் போற்றுகிறது.இத்தகைய தைப்பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த எம் நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 15 ஜன 2020