மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

திமுக - காங்கிரஸ்: மீண்டும் ‘துரைமுருக’ கலகம்!

திமுக - காங்கிரஸ்: மீண்டும்  ‘துரைமுருக’ கலகம்!

‘கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால் கவலையில்லை’ என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

‘உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் இட பங்கீட்டில் திமுக கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் நடத்திய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கை காரணமாகவே கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் வேலூரில் இன்று (ஜனவரி 15) செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகனிடம், திமுக கூட்டணி விலகுவது போல காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விலகிப் போகிறவர்கள் போய்விட்டுப் போகட்டும். அதனால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகுவதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. குறிப்பாக நான் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.

இதனால் ஓட்டு எதுவும் பாதிக்காதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “ஒன்றும் பாதிக்காது. ஓட்டு இருந்தால்தானே பாதிக்க? கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். ஆனால், நான் பதிலே சொல்லிவிட்டேன்” என்று காட்டமாகக் கூறினார்.

இதற்கு காங்கிரஸிலிருந்தும் எதிர்வினை எழுந்துள்ளது. துரைமுருகன் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், “வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஏன் இந்த ஞானம் வரவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “துரைமுருகன் என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்ததும் அதற்குப் பதில் சொல்கிறேன். கூட்டணிக்கும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான என்னுடைய கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் கூட்டணி கொள்கை ரீதியாக, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு கூட்டணி. யாருக்கு எதிராகவும் நான் அந்த அறிக்கையில் கருத்து தெரிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்.

இதனிடையே மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “தற்போது வரை திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. இன்னும் பிரியவில்லை. கூட்டணியில் யாருக்கும் திமுக பாரபட்சம் காட்டுவது இல்லை. கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். கூட்டணிக் கட்சிகள் வேறு முடிவை எடுத்தால் அதற்கு திமுக பொறுப்பல்ல. எங்கள் கூட்டணியில் இருக்கும் வரை அனைவரையும் மரியாதையுடன்தான் நடத்துகிறோம். இனியும் அது தொடரும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 15 ஜன 2020