மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

தேசிய போலீஸா? என்ஐஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்கு!

தேசிய போலீஸா? என்ஐஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்கு!

தேசியப் புலனாய்வு முகமை என்ற அமைப்பு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2008இல் ஏற்படுத்தப்பட்டது. இப்போதைய பாஜக அரசில் அதற்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அமைப்புக்கு நாடாளுமன்ற மக்களவை ஜூலை 15ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ஐஏ என்பது கூட்டாட்சி அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 131ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

சத்தீஸ்கர் மாநில அரசு இன்று (ஜனவரி 15) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “என்ஐஏ சட்டம் நாடாளுமன்றத்தின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது. அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் IIஇன் பிரிவு 2இன் டி போலீஸ் என்பது மாநில அரசாங்கத்தின் கையில் இருக்கும் அதிகாரத் துறை. எனவே, போலீஸில் அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குவது அரசியலமைப்பிற்கு எதிரானது. என்ஐஏ என்பதன் மூலம் மாநிலத்தின் போலீஸ் துறையின் அதிகாரங்களை மீறும் ஒரு விசாரணை நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அரசியலமைப்பு வரையறுத்த உறவுகளை என்ஐஏ சீர்குலைக்கிறது.

அரசியலமைப்பின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள மாநில இறையாண்மை பற்றிய கருத்தை என்ஐஏ தெளிவாக நிராகரிக்கிறது. மாநிலத்தின் அதிகார எல்லைக்குள் செய்யப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரத்தை முற்றிலுமாக பறிக்கிறது” என்கிறது சத்தீஸ்கர் அரசு.

மேலும், “என்ஐஏ சட்டத்தின் பிரிவு 6 (4), 6 (6), என்ஐஏ சட்டத்தின் பிரிவு 7, 8 மற்றும் 10 இன் கட்டளைகள் அரசியலமைப்பு திட்டத்திற்கு முரணானவை. பொதுவாக, காவல் துறையினரால் விசாரிக்கப்படும் எந்தவொரு மாநிலத்தின் பிராந்திய அதிகார எல்லைக்குள் எழும் விஷயங்களை என்ஐஏ விசாரிக்கும் என்பது அட்டவணை 7இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரம். இந்தச் சட்டம் ஒரு தேசிய போலீஸை உருவாக்குகிறது. இது மாநிலத்தின் உரிமைகளை பாதிக்கிறது. எனவே என்ஐஏ சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்கப்பட வேண்டும்” என்று மனுவில் வலியுறுத்தியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு.

இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏவுக்கு எதிராக சிவில் வழக்கு தாக்கல் செய்த முதல் மாநிலம் சத்தீஸ்கர் ஆகும். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் எப்போது விசாரிக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை.

இந்த வாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது முக்கிய வழக்கு இது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதி என்ஐஏவுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அரசு தாக்கல் செய்திருக்கிறது.

டெல்லியில் என்ஐஏவின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நிலையில் லக்னோ, ஜம்மு, கௌஹாத்தி, கொல்கத்தா, மும்பை, ரெய்பூர், ஹைதராபாத், கொச்சி என எட்டு இடங்களில் என்ஐஏவின் கிளை அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன.

தமிழகத்தில் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon