மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

நிலாவில் விளையாட ஜோடி தேவை!

நிலாவில் விளையாட ஜோடி தேவை!

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா, விளையாட ஜோடி தேவை என்று நாம் பாடல் பாடிவருகிறோம். ஜப்பான் தொழிலதிபர் ஒருவரோ, ‘விண்ணைத் தாண்டி நிலவுக்கு சுற்றுலா செல்கிறேன், ஜோடி தேவை’ என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

தொழிற்நுட்பத்தால் எதுவுமே சாத்தியம் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் முதல்முறையாக நிலவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர், தன்னுடன் வருவதற்கு செல்வதற்க்கு வாழ்க்கை துணையை தேடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்பேஸ் எக்ஸ் எனும் அமெரிக்க நாட்டு நிறுவனம் நிலவிற்கு சுற்றுலா பயணிகளை அனுப்புவதற்காக 2002-ல் இலான் மஸ்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்களின் முதல் நிலவு பயணியாக ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா எனும் உலக கோடீஸ்வரர் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பயணத்தின்போது விண்வெளி வழித்துணையாக யாரைக் கூட்டிச் செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் மேசாவா.

சமீபத்தில் அவருடைய காதலியான நடிகை அயாமியுடன் காதல் முறிவு ஏற்பட்டதால், தனக்கான பெண்ணை தேடுவதற்காக இணையதளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

“தனிமை தன்னை ஆட்கொள்ள துவங்கி விட்டது. தற்போது ஒரே பெண்ணை காதலிக்கவேண்டும் என எண்ணுகிறேன். மேலும் என்னுடைய வாழ்க்கை துணையோடு நிலாவில் இருந்து எங்கள் காதலையும் மற்றும் உலக அமைதியையும் அறிவிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ள மேசாவா,

“எனது வாழ்க்கைத் துணைக்கான தேடலில் பங்கு கொள்ள விரும்பும் பெண்கள், திருமணமாகாத 20 வயதுக்கு மேற்பட்ட, நேர்மறையான எண்ணம் கொண்டவராக மற்றும் விண்வெளிக்கு செல்வதற்கான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17” என்று அந்நியன் பட அம்பியின் விண்ணப்ப ரேஞ்சுக்கு போகிறது இந்த விளம்பரம்.

முதற்கட்டமாக தேர்வு செய்யப்படும் பெண்கள் பிப்ரவரி மாதம் யுசாகுவுடன் விருந்து ஒன்றில் கலந்து கொள்வார்கள். இறுதியாக தேர்வு செய்யப்பட்ட பெண்ணை மார்ச் மாத இறுதியில் யுசாகு அறிவிப்பார். இதற்க்கான விண்ணப்பிக்க லிங்க் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது: https://mz.abema.tv/en.html.

விளம்பர பிரியரான யுசாகு, ஜனவரி 5ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் கணக்கை தொடர்ந்து மற்றும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேருக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 650,000 கொடுப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் 40 லட்சம் பேர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். அதற்கான முடிவு இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon