மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 31 மா 2020

ஆட்குறைப்பு செய்யும் வால்மார்ட்!

ஆட்குறைப்பு செய்யும் வால்மார்ட்!

பிரபல அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் தனது அதிகாரிகள் 56 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. உலகளவு மந்தநிலை காரணமாக வால்மார்ட் இந்தியாவில் தனது மொத்த விற்பனையை விரிவாக்கம் செய்வதில் பெருமளவு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் 28 மொத்த விற்பனை நிறுவனங்களைக் கொண்டுள்ள வால்மார்ட் சில்லறை வணிகர்களிடம் மட்டுமே விற்பனையில் ஈடுபட்டுள்ளது. நுகர்வோரிடம் விற்பனையில் ஈடுபடவில்லை.

உலகில் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனம் வால்மார்ட் 2007ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தது. தற்போது உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதால், ஏற்கனவே ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல துறைகள் மந்தநிலையை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வால்மார்ட் நிறுவனமும் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளதால் இந்தியாவில் தனது மூத்த அதிகாரிகள் மட்டத்தில் உள்ள பணியாளர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு உள்ளூர் வணிகர்களைக் காப்பாற்றும் பொருட்டு உலகளாவிய நுகர்வோர் நிறுவனங்களுக்குப் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இது இந்தியாவில் தற்போது வர்த்தகம் செய்வோருக்கு பெரும் இழப்பாக இருக்கிறது என்கிறார்கள்.

இந்தியாவில் ஆன்லைன் வணிகத்துக்கு அதிக அளவு கிராக்கி இருப்பதால், கடந்த ஆண்டு 16 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃப்ளிப்கார்ட்டில் பெரும்பகுதி பங்குகளை விலைக்கு வாங்கியது வால்மார்ட். இந்தியாவில் புதிய கடைகளை உருவாக்கப் பயன்படுத்திய ரியல் எஸ்டேட் குழுக்களைக் கலைத்துவிட்டு இணையதள வணிகத்திலேயே அதிக அளவு கவனம் செலுத்த வால்மார்ட் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தலைமை அலுவலகத்தில் 600 ஊழியர்களையும், இந்தியா முழுவதும் 5,300 ஊழியர்களையும் கொண்டுள்ள தங்கள் நிறுவனத்தின் பணி நீக்கங்கள் மேலும் தொடரும் என்றே வால்மார்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது