மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

பாஜக அல்லாத முதல்வர்களுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

பாஜக அல்லாத முதல்வர்களுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்!

நாடாளுமன்ற வளாகத்தில் ஜனவரி 13 திங்களன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான 20 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வேண்டும் என்றும், நாடு தழுவிய தேசிய மக்கள் தொகை பதிவு (என்பிஆர்) நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவை அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு தொகுப்பாகும். இது குறிப்பாக ஏழைகள், நலிந்தவர்கள், எஸ்சி / எஸ்டிக்கள் மற்றும் மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரானதாக அமைந்துள்ளது. என்ஆர்சியைத் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த அனைத்து முதலமைச்சர்களும் என்ஆர்சிக்கு ஒரு முன்னோடியாக இருப்பதால் என்பிஆர் கணக்கெடுப்பையும் நிறுத்திவைக்க வேண்டும்” என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, “நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பரவலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வளாகங்களில் நடந்த வன்முறைகளில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது.

ஜாமியா, பிஹெச்யூ, அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஏஎம்யூ மற்றும் பிற உயர் கல்வி நிறுவனங்களில் நடந்தவற்றுக்குப் பிறகு ஜேஎன்யு மீது பாஜகவின் திட்டமிட்ட தாக்குதலை நாடு திகிலுடன் பார்த்தது. மக்களை நிர்வகிக்கவும் பாதுகாப்பை வழங்கவும் இயலாமையால் மோடி - ஷா அரசு அம்பலப்பட்டு நிற்கிறது. மக்களை குழுவாத வழிகளில் பிளவுபடுத்துவதற்காக அரசாங்கமே வெறுப்பைப் பரப்புகிறது. அரசியலமைப்பு மதிக்கப்படாமல், ஆளுகைக்கான நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று பேசிய சோனியா காந்தி மேலும்,

“சிஏஏ மற்றும் என்ஆர்சி விவகாரங்களில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த தங்களின் அறிவிப்புகளுக்கு இன்று முரணாகப் பேசுகிறார்கள். மேலும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளைத் தொடர்கின்றனர். அதே நேரத்தில் அதிகரித்துவரும் அரசு அடக்குமுறை மற்றும் வன்முறை பற்றி கண்டுகொள்ளாத அளவுக்கு உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “தோல்வியுற்ற பொருளாதாரத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்ப அரசாங்கம் தேசத்தை பிளவுபடுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்கலைக்கழகங்களுக்குச் சென்று பொருளாதாரம் மற்றும் வேலையின்மை குறித்து மாணவர்களுடன் பேசுவதற்கு பயமாக இருக்கிறது. முடிந்தால் அவர் பல்கலைக்கழக மாணவர்களுடன் விவாதம் நடத்தட்டும்” என்று சவால் விடுத்தார்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் ஜனதா தள் தலைவர் சரத் யாதவ், இடது சாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர்களான குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார்.

திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன. ஆயினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon