மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

அழகிரியின் அறிக்கை: அமைச்சர் நடத்திய மேஜிக்!

அழகிரியின் அறிக்கை: அமைச்சர் நடத்திய மேஜிக்!

“அரசியலில் இதுபோன்ற மேஜிக்குகள் நடப்பது இயல்பானது. இதற்கெல்லாம் ஆச்சரியப்பட தேவையில்லை”

-அதிமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர் ஜனவரி 11 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி, துணைத் தலைவரான காங்கிரசைச் சேர்ந்த உமா ஆகியோரோடு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு உதிர்த்த கருத்துதான் இது.

அப்படி என்ன மேஜிக் நடந்தது என்கிறீர்களா?

புதுக்கோட்டை உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் மொத்தம் 22 பேரில் திமுக 11, காங்கிரஸ் 2 என மொத்தம் 13 இடங்களைப் பிடித்தது. அதிமுக கூட்டணியில் அதிமுக 8 தமாகா 1 என மொத்தம் 9 இடங்களையே பிடித்தது. மற்ற அமைச்சர்களின் மாவட்டங்களில் எல்லாம் அதிமுக ஸ்வீப் செய்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவுக்கு தெளிவான மெஜாரிட்டி கிடைத்தது மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே அதிமுகவில் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தனக்கு நம்பிக்கையான சிலரை மட்டும் அழைத்த விஜயபாஸ்கர், ‘எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணலாம். ஆனால் திமுக மாவட்ட சேர்மனா வந்துவிடக் கூடாது’ என உத்தரவிட்டு டீலிங்கைத் தொடங்கிவிட்டார். மறைமுகத் தேர்தல் நடக்கும் 11 ஆம் தேதி வரை விஜயபாஸ்கர் இந்த விஷயத்தை அதிமுக மாவட்ட நிர்வாகிகள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.

மறைமுகத் தேர்தல் தினமான ஜனவரி 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்துக்கு திமுகவின் 11, காங்கிரசின் 2 என மொத்தம் 13 கவுன்சிலர்களையும் ஒரே வேனில்தான் அழைத்துச் செல்கிறார்கள். திமுக சார்பில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கலைவாணி தனக்குதான் வெற்றி, இன்னும் சில மணி நேரங்களில் தான் மாவட்ட ஊராட்சித் தலைவர் என்ற கெத்தோடு உள்ளே சென்றார். விதிமுறைகளின்படி உள்ளே செல்போன் எடுத்து செல்லக் கூடாது. எனவே எல்லாருடைய செல்போன்களும் வெளியிலேயே அணைத்து வைக்கப்பட்டுவிட்டது. திமுக கூட்டணியின் 13 கவுன்சிலர்களும் ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்துக்கொண்டு உள்ளே செல்கிறார்கள். அதிமுக தரப்பில் 9 கவுன்சிலர்களும் கொஞ்ச நேரத்தில் வந்தார்கள்.

தேர்தல் நடந்தது. 22 பேரும் வாக்களித்தார்கள். மதியம் 12 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி வெற்றிபெற்றிருக்கிறார். அவர் 12 ஓட்டுகள் வாங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலைவாணி 9 ஓட்டுகள் வாங்கியுள்ளார் என்று முடிவு அறிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டு திமுகவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 13 கவுன்சிலர்கள் பெற்றிருந்த நிலையில் நாம் எப்படித் தோற்றோம்? ஒருவேளை துணைத் தலைவர் பதவியை காங்கிரசுக்குக் கொடுக்க மறுத்ததால் இப்படி செய்துவிட்டார்களா? அப்படிப் பார்த்தாலும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 2 பேர்தானே? மூன்றாவதாக திமுக ஓட்டும் அதிமுகவுக்கு விழுந்திருக்கிறதே?” என்று மாவட்ட திமுக முழுதும் விவாதம் வெடித்தது. அலுவலகத்துக்கு வெளியே போலீஸ் பேரி கார்டுக்கு பக்கத்தில்தான் அவர்களை கூட்டி வந்த வேன் நின்றிருந்தது.

மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தல் அதே இடத்தில் மதியம் 3 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் 13 பேரும் மீண்டும் அதே வேனில் ஏற்றப்பட்டனர். அங்கிருந்து வேன் எங்கேயோ சென்றது.

‘யார் மாத்தி ஓட்டுப் போட்டது? உண்மைய சொல்லுங்க’ என்று ஒவ்வொருவரிடமும் மாவட்ட திமுக நிர்வாகிகள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. திமுகவினருக்கு அதிர்ச்சியும் குழப்பமும் தாங்க முடியவில்லை. காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்தான் இதை செய்திருப்பார்கள் என்று யூகித்தாலும், அடுத்து துணைத் தலைவர் தேர்தல் நடக்க இருப்பதால் அவர்களை நேரடியாகவும் திட்ட முடியவில்லை. மொத்தம் 13 பேருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்து மீண்டும் மாலை 3 மணிக்கு துணைத் தலைவர் தேர்தலுக்கு அதே வேனில் அழைத்து வந்தார்கள். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் அலுவலக வாசலில் வைத்து, ‘இதுலயும் மாத்தி ஓட்டுப் போட்டுடாதீங்க’ என்று எச்சரிக்கையோடுதான் உள்ளே அனுப்பப்பட்டனர்.

13 பேரும் உள்ளே சென்றுவிட்டனர். அதிமுக கவுன்சிலர்களும் உள்ளே சென்றனர். அப்போது திமுக சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுத் தோற்ற கலைவாணி மீண்டும் துணைத் தலைவர் தேர்தலுக்கும் மனு செய்தார். அப்போதுதான் காங்கிரஸ் கவுன்சிலரான உமா திடீரென, ‘நான் துணைத் தலைவர் பதவிக்கு நிற்கிறேன்’ என்று அதிகாரியிடம் வேட்பு மனுவை வாங்கி பூர்த்தி செய்து அதிகாரியிடம் கொடுத்தார். அப்போதுதான் திமுக கவுன்சிலர்களுக்கு தெரிந்தது. உமாதான் இதற்கான அச்சாணி என்று. ஆனால் வெளியே சொல்ல முடியவில்லை. ஏனெனில் செல்போன்கள் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. தேர்தல் முடியும் வரை வெளியே செல்லக் கூடாது. சொல்லிவைத்தாற்போல அதிமுக தரப்பில் யாரும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில் உமாவும், கலைவாணியும் தலா 11 வாக்குகள் பெற குலுக்கல் முறையில் உமா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரும்பான்மை பெற்றபோதும் திமுக மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி, துணைத் தலைவர் பதவி இரண்டையும் பெற முடியாமல் திமுக நிர்வாகிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர். ஏற்கனவே காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியைக் கேட்டு அதை திமுக மறுத்ததால் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருவரும் அதிமுக பக்கம் ஆதரித்தனர். ஆனால் திமுகவின் ஒரு கவுன்சிலரும் அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டிருக்கிறார். இதுதான் திமுகவினரை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கவுன்சிலர்கள் யார் யார் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதலே அமைச்சர் விஜயபாஸ்கர் டீலிங்கை ஆரம்பித்துவிட்டார். முதல் நாள் வரை உண்மையில் டீலிங் முடியவில்லை. ஆனால் வாராது வந்த மாமணியாய் வந்து கை கொடுத்தது காங்கிரஸ் தலைவர் அண்ணன் அழகிரியின் அறிக்கைதான். திமுக கூட்டணி தர்மத்துக்கு எதிராக செயல்படுகிறது என்று வருத்தப்பட்டு அறிக்கை கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தங்கவேலுவை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் தொடர்புகொண்டார்கள். ‘உங்க தலைவரே அறிக்கை விட்டுட்டாரு. இனியும் திமுகவை நம்பி வீணா போயிடாதீங்க. உங்க மனைவி உமாவுக்கு துணைத்தலைவர் தர்றோம் வந்துடுங்க’ என்று கூறியிருக்கிறார்கள். மாவட்டத் தலைவர் தங்கவேலுவுக்காக இந்த டீலிங்கை பேசி முடித்தது முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவரான புஷ்பராஜ்தான்.

மதியம் 12 மணிக்கு அதிமுகவின் ஜெயலட்சுமி மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மதியம் 2 மணிக்கு புஷ்பராஜ் புதுக்கோட்டை சத்யம் ஹோட்டலில் தங்கியிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரை சென்று சந்தித்தார். அதன் பிறகு துணைத் தலைவர் தேர்தலில் உமா துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். புஷ்பராஜ் மதியம் அமைச்சரை சந்தித்தது கூட திமுகவினருக்கு தெரியவில்லை. மாலை 3 மணிவரை துணைத் தலைவர் பதவிக்கு வேறு அவர்கள் ஆசைப்பட்டிருந்திருக்கிறார்கள்.

காங்கிரசின் இரு கவுன்சிலர்களை அமைச்சர் இழுத்ததை விட ஆச்சரியமானது, திமுகவின் ஒரு கவுன்சிலரையும் சேர்த்து இழுத்ததுதான். யார் அந்த திமுக கவுன்சிலர் என்று திமுகவினருக்கே இன்னும் தெரியவில்லை” என்று சிரித்தார்கள் அதிமுகவினர். மாற்றி விழுந்த ஓவ்வொரு ஓட்டும் சில கோடிகள் வரை பெறுமானமுள்ளது என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில்.

எல்லாம் முடிந்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுகவின் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி, காங்கிரஸின் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் உமா ஆகியோருடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

அதன் பிறகே சொன்னார், ‘இந்த மேஜிக் எல்லாம் இயல்பானது’ என்று!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

திங்கள் 13 ஜன 2020