மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

அவனியாபுரம் : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு!

அவனியாபுரம்  : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்தச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவர் கணக்கு வழக்குகளை முறையாகச் சமர்ப்பிப்பதில்லை. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அதுபோன்று, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில், ஆதிதிராவிட சமூகத்தினர் பங்கேற்க வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலை நீடித்தால் போட்டி நடத்துவதற்கான ஆர்வமும் பங்கெடுப்பும் குறையும். எனவே அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் விழாக்குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம். துரைசாமி, டி. ரவீந்திரன், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுபோன்று அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஆட்சியர், தென்மண்டல ஐஜி, ஊராட்சி உதவி இயக்குநர் ஆகியோர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon