மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

 பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளை (ஜனவரி 14) தொடங்கி நான்கு நாட்களுக்குப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடை , பொங்கல் வைப்பதற்குப் பானை, கரும்பு, ஆடு மாடுகளுக்குக் கயிறு, வண்ணப் பொடிகள், கரும்பு, மஞ்சள் கொத்து, மா இலை எனச் சந்தைகளில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி செல்கின்றனர்.

இதனிடையே ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் ஸ்மார்ட் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு கோடியே 97 லட்சம் பேர் அரிசி பெறக்கூடிய ஸ்மார்ட் அட்டைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு கோடியே 85 லட்சம் பேருக்குப் பொங்கல் பரிசு நேற்றுடன் விநியோகிக்கப்பட்டது. 94.71 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெற்றுக் கொண்டதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.

கடந்த 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்ட கார்டுகளுக்கு இன்று (ஜனவரி 13) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலையுடன் பொங்கல் பரிசு பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில் இந்த காலக்கெடுவைத் தமிழக அரசு நீட்டித்துள்ளது.

வெளியூர் சென்றவர்கள், முறையான ஆவணங்களைக் கொடுக்காமல் இருந்தவர்கள் என இதுவரை வாங்க முடியாதவர்களுக்காக வரும் ஜனவரி 21ஆம் தேதி மாலை 6 வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon