மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 17 ஜன 2020

குரூப்-4 முறைகேடு: மீண்டும் தேர்வு நடத்திய டிஎன்பிஎஸ்சி!

 குரூப்-4 முறைகேடு: மீண்டும் தேர்வு நடத்திய டிஎன்பிஎஸ்சி!

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்தவர்களிடம் டிஎன்பிஎஸ்சி மீண்டும் இன்று (ஜனவரி 13) தேர்வை நடத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பைக் கடந்த ஆண்டு வெளியிட்டுத் தேர்வை நடத்தியது. 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய 35 பேர் முதல் 100 இடங்களுக்குள் தேர்வானது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்வதற்காக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேரில் சென்று இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் விசாரணைக்காக டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வெழுதி, விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் இன்று பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். டிஎன்பிஎஸ்சி தலைவர் சுதன், செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தேர்வுக்குத் தயாரான விதம், விடைத்தாள், சான்றிதழ் சரிபார்ப்பு குறித்தெல்லாம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டார்களா? ராமநாதபுர மாவட்டத்தைத் தேர்வு செய்தது ஏன்? என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் வைத்தே அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அறிவியல், பொது அறிவு, கணிதம் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

மதியம் ஒரு மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் தேர்வர்களிடம் சுயவிவர குறிப்புகள் எழுதி வாங்கிக் கொண்டு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். தேவைப்பாட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். விசாரணை முடிவடைந்த நிலையில் இதுவரை முறைகேடு தொடர்பான எந்த விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. இன்றைய விசாரணையின் போது தேர்வர்கள் சிலர் முகமூடி அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon