மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

வன்னியர் அறக்கட்டளை ராமதாஸ் அறக்கட்டளையாக மாறிய மர்மம்!

வன்னியர் அறக்கட்டளை ராமதாஸ் அறக்கட்டளையாக மாறிய மர்மம்!

வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் இருந்த அறக்கட்டளையை ஜனவரி 10 ஆம் தேதி முன் டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றியிருக்கிறார் பாமக நிறுவனர்.

இதுபற்றி முதல் தகவலை ஜனவரி 10 ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் பெயர் மாறிய வன்னியர் சங்க அறக்கட்டளை என்ற தலைப்பில் வெளியிட்டோம். ஆயிரக்கணக்கான வன்னியர்களிடம் நன்கொடைகள் பெற்று அமைக்கப்பட்ட இந்த கல்வி அறக்கட்டளை இப்போது டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு வன்னியர் பிரமுகர்களும் பாமக காவு கொள்ளும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.இந்தப் பெயர் மாற்றம் ஏன் என்று விசாரித்தபோது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகம் முழுவதிலும் இருக்கும் வன்னியர் சமூகத்திற்கு சொந்தமான பல அறக்கட்டளைகளை ஒன்றுசேர்த்து ஒருங்கிணைத்து வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது அச்சமுதாயப் பிரமுகர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் இந்த கோரிக்கைக்கு பாமக எப்போதும் அழுத்தம் கொடுத்ததில்லை.

2009 லேயே திமுக ஆட்சிக் காலத்தில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது திமுக கூட்டணியில் பாமக செல்வாக்காக இருந்ததால் இந்த வாரியம் பெரிதாக செயல்படவில்லை.

அதன் பின் பல்வேறு வன்னியர் சங்கங்களின் தொடர்ச்சியான அழுத்தத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி வியாழக் கிழமை வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், “வக்ஃப் வாரியம் என்பது எப்படி இஸ்லாமியர்களுக்கான பொதுச் சொத்துகளை நிர்வகிக்கும் வாரியமாக செயல்படுகிறதோ, அதே வழியில்தான் இந்த வன்னியர் பொதுச் சொத்து நல வாரியமும் செயல்படும்” என்றி அறிவித்தார். இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், “கடந்த திமுக அரசிலேயே இந்த வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு வன்னியகுல க்‌ஷத்ரிய பப்ளிக் டிரஸ்ட் அண்ட் எண்டோன்மெண்ட் ஆக்ட் -2018 இன்படி, ‘வன்னியர், வன்னிய, வன்னிய கவுண்டர், கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னி குல க்‌ஷத்ரியா என்ற பெயர்களைத் தாங்கியிருக்கும் அனைத்து டிரஸ்டுகளும் வன்னிய பொதுச் சொத்து நலவாரியத்துக்கு உட்பட்டதாகும். பழங்காலங்களில் இந்த டிரஸ்டுகள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்துக்காக செயல்படுவதை இந்த டிரஸ்ட் உறுதி செய்யும் என்று அந்த சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் 2019 பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி அமைக்கப்பட்டது. வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ..ஏ.எஸ். அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டன. உறுப்பினர் செயலாளராக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப்படுத்துதல் துறை சிறப்பு டி.ஆர்.ஓ.வான பிருந்தா தேவியும், சிறப்பு பார்வையாளராக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வுபெற்ற பொறியாளரான ஆர்.தியாகராஜனும் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் 18 மாவட்டங்களில் வன்னியர்கள் பெயரில் அமைந்திருக்கும் டிரஸ்டுகளை தமிழக அரசு பட்டியலிட்டது. இதுபற்றிய அறிவிப்பில் மேலும் வன்னியர்களுக்கான சமுதாய டிரஸ்டுகள் ஏதும் இருந்தால் அவற்றை வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் வன்னியர் கல்வி அறக்கட்டளையை தமிழக அரசு கைப்பற்ற சட்ட ரீதியான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. இப்போது அதிமுக-பாமக கூட்டணியில் இருப்பதால் வன்னியர் கல்வி அறக்கட்டளை பற்றி அரசு ஏதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சில வன்னிய பிரமுகர்கள், ‘வன்னியர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட வன்னியர் கல்வி அறக்கட்டளையை சட்டப்படி அரசு வன்னிய பொதுச் சொத்து நல வாரியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு மனுவும், அதையடுத்து நீதிமன்றம் செல்லத் திட்டமும் வைத்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் நடப்பது பாமகவுக்குத் தெரிந்தது.

அதனால் தொடர்ந்து இதே பெயரிலேயே டிரஸ்ட் நீடித்தால் சட்ட ரீதியாக அரசின் வசம் போக வாய்ப்பிருக்கிறது. ஏறகக்குறைய பல நூறு கோடிகள் சொத்துகள் கொண்ட வன்னியர் கல்வி அறக்கட்டளை அரசின் வசம் போகாமல் தடுப்பதற்காகத்தான் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி டாக்டர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று மாற்றப்பட்டிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் என்ற பெயரில் வன்னியர் என்ற பதம் இல்லாததால் இதை அரசு இப்போது கைப்பற்ற முடியாது. அதிமுக அரசின் புரிந்துணர்வு இல்லாமல் இந்த பெயர் மாற்றம் நடந்திருக்க முடியாது.

ஆனாலும் இந்த பெயர் மாற்றம் வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்பட்டிருந்தால் அதையும் சட்ட ரீதியாக சேலஞ்ச் செய்யலாம் என்கிறார்கள் பாமகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கும் வன்னிய பிரமுகர்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 13 ஜன 2020