மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

கழிவறையில் பாரதியார் புகைப்படம்: சர்ச்சையும் நீக்கமும்!

கழிவறையில் பாரதியார் புகைப்படம்: சர்ச்சையும் நீக்கமும்!

திருச்சியில் உள்ள ஸ்மார்ட் கழிவறையில் பாரதியார் புகைப்படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அப்படம் நீக்கப்பட்டது.

நாட்டில் பல்வேறு நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்காகக் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிச் செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சியும் தேர்வு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் திருச்சி கே.அபிஷேக புரம் கோட்ட அலுவலகம் வெளியே ஸ்மார்ட் கழிவறை கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் முதன் முறையாக அமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கழிவறை 8 அடிநீளம், 7 அடி அகலம் கொண்டது. கழிவறைக்கு வெளியே சிசிடிவி, வண்ண விளக்குகள் மற்றும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை தானே சுத்தம் செய்யும் கருவி என நவீன வசதிகளுடன் இந்த கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. கழிவறையை யாராவது சேதப்படுத்த முயற்சித்தால் அங்குள்ள சென்சார்கள் சம்பந்தப்பட்ட பொறியாளருக்குத் தகவல் அனுப்பும். இத்தகைய வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த கழிவறையை அண்மையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மற்றும் சிறுபான்மை நலத் துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் இந்த கழிவறையில் ஆண்கள் பகுதியில் அடையாளமாக ’ஆண்கள்’ என்று குறிப்பிட்டு பாரதியாரின் படம் ஒட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகப் புகழ்பெற்ற கவிஞரை இழிவுபடுத்தியதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பாரதியார் புகைப்படத்தை வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் இது பாரதியாரின் புகைப்படம் இல்லை என்று திருச்சி மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இது பொது மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது. இதையடுத்து பாரதியார் புகைப்படத்தைத் திருச்சி மாநகராட்சி நீக்கியுள்ளது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon