மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்கமாட்டோம்: உச்ச நீதிமன்றம்!

 சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்கமாட்டோம்: உச்ச நீதிமன்றம்!

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று 2018ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. அதோடு வரலாற்றிலேயே முதன் முறையாக கனகதுர்கா, பிந்து அம்மணி ஆகிய இரு பெண்கள் 2019ல் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 60க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிக் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

எனினும் 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சந்தோஷ் குடர், எஸ்.ஏ.நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகிய 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று காலை சபரிமலை சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அப்போது, சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்ட அம்சத்தை மட்டுமே விசாரிக்கவுள்ளோம்.

மதவழிபாட்டு தலங்களில் அதாவது கோயில் மற்றும் மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறுவது குறித்த விவகாரத்தை விசாரிப்போம். இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனை விசாரிக்கப்போவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon