மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

ஆர்எஸ்எஸ் குறித்த பதிவு: பாடப் புத்தகத்திலிருந்து நீக்க உத்தரவு!

ஆர்எஸ்எஸ் குறித்த பதிவு: பாடப் புத்தகத்திலிருந்து நீக்க உத்தரவு!

தமிழக 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆர்எஸ்எஸ் குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்தை உடனே நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் இரண்டாம் பருவ பாடப் புத்தகத்தில் பக்கம் எண் 50இல் இந்து மதம், முஸ்லிம் மதம் குறித்து இடம்பெற்றுள்ளது. அதில் ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்கமான‌ ஆர்எஸ்எஸ் அமைப்பு சுதந்திரத்துக்கு முன்னதாக முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “பள்ளிக்கல்வித் துறையால் பதிவிடப்பட்ட ஆட்சேபனைக்குரிய இந்தப் பகுதியை உடனடியாக நீக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும், ”இதற்கு முன்னதாக மாணவர்களிடையே வழங்கப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பகுதியை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும். பின்வரும் காலத்தில் புத்தகங்கள் அச்சடிக்கும்போது இந்தப் பதிவு வராமல் கவனித்துக்கொள்வது பள்ளிக்கல்வித் துறையின் கடமை” என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த உத்தரவு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வருகின்ற 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon