மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

ஜேஎன்யு மாணவியைச் சந்தித்து பினராயி விஜயன் ஆதரவு!

ஜேஎன்யு மாணவியைச் சந்தித்து பினராயி விஜயன் ஆதரவு!

ஜேஎன்யு வளாகத்தில் வன்முறையில் தாக்கப்பட்ட மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷி கோஷை, முதல்வர் பினராயி விஜயன் நேற்று டெல்லி கேரள இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஜேஎன்யு பல்கலையில் கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதில் மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷி கோஷ் உட்பட 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பல்கலை வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்களைக் கம்பிகளால் தாக்கிய அந்த மர்மக் கும்பல் குறித்து டெல்லி காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. உண்மையான குற்றவாளி யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் வன்முறையில் ஈடுபட்டதாக மாணவர் சங்கத் தலைவி ஆய்ஷி கோஷ் புகைப்படத்தையே டெல்லி காவல் துறை வெளியிட்டது.

இந்த நிலையில் ஆய்ஷி கோஷை டெல்லி கேரள இல்லத்தில் சந்தித்துப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், மாணவியிடம் நலம் விசாரித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது ஆய்ஷி கோஷுக்குப் புத்தகம் ஒன்றை பினராயி விஜயன் பரிசளித்தார். “இந்த நாடு முழுவதும் ஜேஎன்யு மாணவர்களின் பின்னால் உள்ளது. நீதிக்காகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவளிப்போம்” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தாக்குதலில் காயமடைந்த மாணவர்களின் நலன் குறித்து விசாரித்ததாகவும், அவர்களுக்கு ஆதரவைத் தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார். மாணவர்களின் கொள்கை உறுதியின் மேல் நம்பிக்கை உள்ளது. அவர்களின் போராட்டம் ஒருபோதும் வீண் போகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon