மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

அமித் ஷா குரலில் பேசிய விமானப் படை அதிகாரி கைது!

அமித் ஷா குரலில் பேசிய விமானப் படை அதிகாரி கைது!

ஆளுநரிடம் நண்பருக்குத் துணைவேந்தர் பதவி கிடைக்க உள் துறை அமைச்சர் அமித் ஷா குரலைப் போன்று போனில் பேசிய விமானப் படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

டெல்லி விமானப் படை தலைமையகத்தில் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் குல்தீப் பாகேலா. இவரின் நண்பர் சந்திரேஷ்குமார் சுக்லா. மத்தியப் பிரதேச மாநிலத்தில் டென்டல் வேர்ல்டு என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவருக்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஆக வேண்டும் என்பது நீண்ட கால விருப்பம்.

இதற்காக விண்ணப்பித்த நிலையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டார். தேர்வு முடிந்ததும் தனக்கு இந்தப் பதவி கிடைக்காது என்று புரிந்துகொண்ட சந்திரேஷ்குமார் இதுகுறித்து குல்தீப்பிடம் தெரிவித்துள்ளார். தனக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குல்தீப் 2014இல் மத்தியப் பிரதேச முன்னாள் ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் ஏடிசியாகப் பணியாற்றியவர். எனவே அந்தத் தைரியத்தில்தான் குல்தீப் இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதாவது ஆளுநர் மாளிகைக்கு சந்திரேஷ்குமார் மற்றும் குல்தீப் இருவரும் கான்பிரன்ஸ் காலில் இருந்துகொண்டு போன் செய்துள்ளனர். சந்திரேஷ்குமார் முதலில் தான் அமித் ஷாவின் உதவியாளர் என்று போனில் ஆளுநர் மாளிகை அதிகாரியிடம் பேசியுள்ளார். பின்னர் குல்தீப் அமித் ஷா குரலில் பேசி தனது நண்பருக்குத் துணைவேந்தர் பதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இந்த அழைப்பு மத்திய உள் துறையிடமிருந்து வந்ததா என சரிபார்க்கச் சொல்லி ஆளுநர் தனது அலுவலர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து உள் துறை அமைச்சகத்திடம் விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அமித் ஷா குரலில் குல்தீப் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவர் மீதும் 419, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி அசோக் அவஸ்தி கூறுகையில், “சந்திரேஷ்குமார் சுக்லா, மூத்த தலைவர்கள் யாராவது தனது பெயரை சிபாரிசு செய்தால் தனக்குத் துணைவேந்தர் பதவி கிடைக்கும் என்று கூறியதால், குல்தீப் மத்திய அமைச்சர் அமித் ஷா குரலில் பேசியுள்ளார்” என்று கூறினார்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon