மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கட்டுக்கு வந்த நெருக்கடி!

ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கட்டுக்கு வந்த நெருக்கடி!

சென்னை ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் வெங்கடாசலம் தன் சொந்த ஊரான ராசிபுரத்துக்கு சென்றிருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலத்தில் உடனடி சிகிச்சை எடுத்து அதன் பின் தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராமச்சந்திரா பல்கலை வேந்தர் வெங்கட்டுக்கு என்னாச்சு? என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்டிருந்தோம்.

தற்போது வெங்கட்டின் உடல்நிலை குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

“தனது சொந்த ஊரான ராசிபுரத்துக்கு சென்றிருந்தபோது 25 கோடி ரூபாய் தொடர்பான ஒரு செய்தி கிடைத்ததை அடுத்து வெங்கட்டுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியானது. அதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. 2013 ஆம் ஆண்டு பின்னி மில்லின் பங்குகள் 500 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைந்தன. இப்படி சில நேரங்களில் சில நிறுவனங்களின் பங்குகள் திடீரென குறைவதும் பின் அவை கைமாறுவதும், குறிப்பிட்ட சிலருக்கு கைமாறிய பின் பங்குகள் விலை மீண்டும் உயர்வதும் பங்குச் சந்தையில் நிலவும் ஒரு வணிக டெக்னிக். அந்த வகையில் பின்னி மில் பங்கு மதிப்பின் ஏற்றத் தாழ்வு குறித்து, ‘செபி’ விசாரணை நடத்தியபோது 2015 ஆம் ஆண்டு இந்த பங்கு வீழ்ச்சியின் பின்னால் வெங்கட்டும், ராஜசேகர் என்பவரும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று செபி அறிந்தது.

இதையடுத்து வெங்கட்டுக்கு 22 கோடி ரூபாய் அபராதமும், அந்த ராஜசேகருக்கு 3 கோடி ரூபாய் அபராதமும் செபி விதித்தது. ராஜசேகர் 3 கோடி ரூபாயை செலுத்திவிட்டார். ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து வெங்கட் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கே வெங்கட்டின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து 22 கோடி ரூபாயை செலுத்த வேண்டிய நெருக்கடி வெங்கட்டுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘நான் அந்த பணத்தைக் கட்டிவிடுகிறேன். இப்போது என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனக்கு கால அவகாசம் தர வேண்டும்’ என்று ஒரு மனு செய்தார் வெங்கட்.. சென்னை உயர் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டு வெங்கட்டுக்கு கால அவகாசம் வழங்கியது.

இந்தப் பிரச்சினை வெங்கட்டை அண்மைக் காலமாக பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. இந்த சூழலில்தான் வெங்கட் ராசிபுரத்தில் இருக்கும்போது அந்த 22 கோடி ரூபாய் தொடர்பாக ஒரு தகவல் கேள்விப்பட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

அதையடுத்து அவர் நெஞ்சுவலியால் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அங்கே அவருக்கு பன்றிக் காய்ச்சலும் தொற்றியிருக்கிறது. இதையடுத்து அங்கே உடனடி சிகிச்சைக்குப் பிறகு தற்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon