மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

இந்தியா-பாகிஸ்தான் போர்?

இந்தியா-பாகிஸ்தான் போர்?

நாடாளுமன்றம் விரும்பினால், இந்திய அரசு உத்தரவை வழங்கினால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இஸ்லாமாபாத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கைப்பற்ற இந்திய ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய ராணுவத்தின் புதிய தளபதியான மனோஜ் முகுந்த் நாரவனே தெரிவித்துள்ளார்..

ஜனவரி 15 ம் தேதி இராணுவ தினத்திற்கு முன்னதாக தனது வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று (ஜனவரி11) பேசிய அவர்,

"சியாச்சின் பனிப்பாறையில் ராணுவம் விழிப்புடன் இருக்கும், ஏனெனில் அரசியல் ரீதியாக முக்கியமான அந்தப் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 1994 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம் விரும்பினால், அந்த பகுதியும் நம்முடையதாக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டால் நிச்சயமாக நாங்கள் அதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இந்திய ராணுவத்தின் நடத்தை என்பது அரசியலமைப்பிற்கான அதன் விசுவாசம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் முக்கிய மதிப்புகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படும். வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்துவதற்காக ராணுவம் தன்னை மறுசீரமைத்து வருகிறது” என்ற நாரவனே,

“முப்படைகளுக்கும் இணைந்து ஒரு தலைவர் பதவியை உருவாக்கியிருப்பது தரைப்படை, விமானப்படை, கப்பல் படை ஆகிய மூன்று சேவைகளை ஒருங்கிணைப்பதில் மிகப் பெரிய படி. இது ஒரு வெற்றியாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று அவர் கூறினார்.

“ராணுவம் என்ற வகையில், நாங்கள் இந்திய அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருக்கிறோம் என்று சத்தியம் செய்கிறோம். அது அதிகாரிகளாக இருந்தாலும், ஜவான்களாக இருந்தாலும் சரி, நாங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்துள்ளோம், அதுவே எல்லா நேரங்களிலும் எங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். நாங்கள் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளோம்” என்றும் ராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.

அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என்று இந்திய ராணுவத் தளபதி அறிவித்துள்ளதற்கு பாகிஸ்தான் பதில் அளித்துள்ளது.

இந்தியாவின் எந்தவொரு செயலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் முழுமையாக தயாராக உள்ளது என்று ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கபூர் தெரிவித்துள்ளார்.

“இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இந்திய தலைமைத் தளபதி அளித்த அறிக்கைகள், இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுக் கொந்தளிப்பில் இருந்து திசை திருப்பும் வழக்கமான சொல்லாட்சி ஆகும்" என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். .

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் போர் வருமா என்று வளைகுடா பற்றி உலக நாடுகள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்திய ராணுவத் தளபதியின் கூற்றும், அதற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் பதிலும் இந்திய -பாகிஸ்தான் போரை தோற்றுவிக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் பற்றிய விவாதத்தின் போது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுடையதே. அது ஒரு நாள் இந்தியாவுடையதாகும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon