மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

ஆவின்: பொங்க வைப்பாரா புதிய நிர்வாக இயக்குனர்?

ஆவின்:  பொங்க வைப்பாரா புதிய நிர்வாக இயக்குனர்?

தமிழ்நாடு அரசின் பால் நிறுவனமான ஆவின் - புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருக்கிறார் வள்ளலார் ஐ..ஏ.எஸ். அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த பல்வேறு சவால்களை இவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் ஆவினின் புதிய நிர்வாக இயக்குனர் வள்ளலாரிடம் அடுக்கடுக்கான கோரிக்கைகளை நேரில் சென்று முன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர். இதன் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி தலைமையில் வள்ளலாரை நேற்று (டிசம்பர் 3) சந்தித்த நிர்வாகிகள்,

“. கடந்த 2017மார்ச் மாதம் 8ம் தேதி வரை ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் பாலிவால் அவர்கள் எங்களது நீண்ட நாள் கோரிக்கையின் ஒருபகுதியாக 1000ம் லிட்டர் பால் விற்பனை செய்யும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனத்தோடு நேரடியான வர்த்தக தொடர்புகளை வழங்கி உத்தரவிட்டார். அதன் காரணமாக அவருக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த 34மொத்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை சுமார் 150ஐ தொட்டதோடு, ஆவின் பால் விற்பனையும் கணிசமாக உயர்ந்து, ஆவின் நிறுவனம் நல்ல லாபத்தையும் ஈட்டியது.

ஆனால் அவருக்கு பின் ஆவின் நிர்வாக இயக்குனராக வந்த சி.காமராஜின் தவறான நடவடிக்கைகளால் 150க்கு மேல் இருந்த மொத்த விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டில் சுமார் 64ஐ தொட்டு கடைசியில் அதுவும் 51ஆக குறைந்தது. இதனால் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்ட பிறகு அது வரை இருந்து வந்த மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) முறையை ரத்து செய்து விட்டு "C/F ஏஜென்ட்" என்கிற "சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்" முறையை கொண்டு வந்து அவருக்கு சாதகமான வெறும் 11பேருக்கு அந்த உரிமத்தை வழங்கி அவர்களுக்கு தனியாக ஒரு லிட்டருக்கு 75பைசா கூடுதலாக லாபத்தொகையை வழங்கி உத்தரவிட்டார். (அந்த 11பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேரும் மற்றும் அதிகார பலமிக்க, பணபலமிக்க சிலரும் அடக்கம்)

அது மட்டுமின்றி இந்த "C/F ஏஜென்ட்" என்கிற "சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்" நடைமுறையால் ஆவின் பால் விற்பனை ஒரு லிட்டர் கூட உயராமல் விற்பனை கணிசமாக குறைந்த நிலையில் ஆவின் நிறுவனத்திற்கு கூடுதலாக நாளொன்றுக்கு சுமார் 5லட்சம் ரூபாய் வீதம் மாதத்திற்கு சுமார் 1.5கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது தான் மிச்சம்.

இதுவே பொதுமக்களோடும், சில்லறை வணிகர்கள், தேனீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களோடும் நேரடி தொடர்பில் இருந்து வரும் பால் முகவர்களுக்கு ஆவின் நிறுவனத்தோடு நேரடி வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்தித் தந்து, சுமார் 18ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் இருந்த ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கியிருந்தால் விற்பனையும் கணிசமாக உயர்ந்திருக்கும். ஆவின் நிறுவனமும் நல்ல லாபத்தை ஈட்டியிருக்க முடியும்.

எனவே ஆவின் நிறுவனத்திற்கு கடுமையான நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் கொண்டு வந்த "C/F ஏஜென்ட்" என்கிற "சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்" முறையை உடனடியாக ரத்து செய்வதோடு, தனியார் பால் நிறுவனங்களைப் போல் பால் முகவர்களுக்கு நேரடியான வர்த்தக தொடர்புகளை தந்திடவும், ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை உழைப்பிற்கேற்ற ஊதியம் என்கிற அடிப்படையில் வழங்கிடவும் ஆவண செய்ய வேண்டுகிறோம்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், ஆவின் பால் பண்ணைகளில் இருந்து அதிகாலை 2.00மணிக்குள் மொத்த விநியோகஸ்தர்களின் அனைத்து வாகனங்களும் ஆவின் பாலினை ஏற்றிக் கொண்டு சென்றிட வேண்டும், 2.00மணிக்கு மேல் எந்த விநியோகஸ்தர் வாகனமும் பால் பண்ணைக்குள் இருக்கக்கூடாது என கடுமையான உத்தரவை பிறப்பித்து அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுகிறோம்.

ஏனெனில் ஆவின் பால் விநியோகம் செய்து வரும் பணபலமிக்க, ஆள்பலமிக்க பழைய, பெரிய மொத்த விநியோகஸ்தர்கள் பால் பண்ணைகளில் இருக்கும் ஒருசில அதிகாரிகளை கைக்குள் வைத்து கொண்டு புதியவர்கள், சிறிய மொத்த விநியோகஸ்தர்களின் வாகனங்களை மிகவும் காலதாமதமாக பால் ஏற்றிச் செல்ல வைக்கின்றனர். இதனால் அவர்கள் கடுமையான நெருக்கடிக்கும், மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகி ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே இந்த நிலை மாற்றப்படவேண்டும்”என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019