மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

சுந்தர் பிச்சையை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது: ஆல்ஃபாபெட்

சுந்தர் பிச்சையை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது: ஆல்ஃபாபெட்

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் 1998ல் தொடங்கப்பட்டது. உலகின் முன்னணி தேடுபொருளான கூகுளின் பயன்பாடு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதோ, அதே அளவுக்கு அதன் சிஇஒ சுந்தர் பிச்சையின் புகழும் அதிகரித்துள்ளது.

படிப்படியான தன்னுடைய வளர்ச்சியால் இன்றைய இளைஞர்களின் ரோல் மாடலாக இருக்கும் சுந்தர் பிச்சை தற்போது, தன்னுடைய திறமையாலும் வளர்ச்சியாலும் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் ஒரு முயற்சியில் ஆல்ஃபாபெட் நிறுவனம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது கூகுளின் தாய் நிறுவனமாக ஆக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் மூலம் வேய்னோ (தானியங்கி கார்கள்), வெர்லி (வாழ்வியல் அறிவியல்), கேலிகோ (பயோடெக் ஆராய்ச்சி), சைட்வாக் லேப்ஸ் (நகர்ப்புற தொழில்நுட்ப வளர்ச்சி) மற்றும் லூன் ( பலூன் தொழில்நுட்பம் மூலம் ஊரக இணைய வளர்ச்சி) உள்ளிட்ட பல கிளை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை.

ஏற்கனவே இந்நிறுவனத்தின் சிஇஓவாக லேர்ரி பேஜ் மற்றும் தலைவராக செர்கே ப்ரினும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய் அன்று இந்த பதவிகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்பட வைக்க வழிகள் இருக்கும் நிலையில், அதனை தங்கள் கையில் வைத்திருக்கவே நினைத்தது இல்லை. எனவே கூகுளையும், ஆல்ஃபாபெட்டின் நிறுவனத்தையும் இனி சுந்தர் பிச்சை வழிநடத்துவார். நிறுவனத்தை வழிநடத்திச் செல்ல சுந்தர் பிச்சையைக் காட்டிலும் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும், இணை நிறுவனர்களாகவும் லேர்ரி பேஜ் மற்றும் தலைவராக செர்கே ப்ரினும் தொடர்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, ” தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய சவால்களைச் சமாளிப்பதில் ஆல்பாஃபெட்டின் நீண்டகால கவனம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களிடம் நேரகாலமற்ற பணி, ஒத்துழைப்பு ஆகியவை உள்ளன. இது ஒரு வலுவான அடித்தளம். நிறுவனத்தை மேலும் கட்டிஎழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சையின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒருமுறை நியூயார்க் டைம்ஸ் ஊடகத்துக்கு, தனது இளம்வயது வாழ்க்கை குறித்துப் பகிர்ந்திருப்பார். ”தன்னுடைய குடும்பம் சாதாரமாண குடும்பம் தான். கட்டில் மெத்தை கூட கிடையாது. தினமும் தரையில் தான் படுத்து தூங்குவோம். ஆனால் படுக்கும் போது தலைமாட்டில் ஒரு சொம்பு தண்ணீர் இருக்கும். அந்த பழக்கம் இன்றும் இருக்கிறது. அப்போது மற்றவர்கள் வீட்டில் எல்லாம் ஃபிரிட்ஜ் இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்காது. கடும் அச்சத்தைத் தரும் வறட்சியை எல்லாம் சந்தித்துள்ளோம். ஒருகட்டத்தில் ஃப்ரிட்ஜ் வாங்கியதே பெரிய சாதனையாக இருந்தது. எனக்கு எளிமையாக இருக்கத்தான் பிடிக்கும். உண்மையில் இப்போது இருப்பதை விட அந்த வாழ்க்கைதான் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.

மேலும், என்னுடைய இளம் பருவம், பல்வேறு வகையிலும் எனது வாழ்க்கையின் அடுத்தடுத்த பகுதிக்குச் செல்ல வழிவகுத்ததாகத் தெரிவித்த அவர் ஐஐடி கராக்பூரில் படித்த தனது கல்லூரி அனுபவத்தையும் தெரிவித்திருந்தார். அப்போது இந்தி கற்றுக்கொள்ளச் சிரமப்பட்டதாகவும். தெரிவித்திருந்தார். முதலாம் ஆண்டு சிஜிபி மிகக் குறைவாக இருந்ததாகவும், நல்ல மதிப்பெண்களை எடுக்க அடுத்த மூன்று ஆண்டுகளில் கடுமையாக உழைத்ததாகவும் சுந்தர் பிச்சை குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புகளைப் பயின்ற, இவர் 2004ல் கூகுள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் க்ரோமை உருவாக்கியதில் சுந்தர் பிச்சையும், அவரது குழுவினரும் சிறந்த பங்காற்றினர். இந்த வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் பிச்சைக்கு அடுத்தடுத்த பொறுப்புகள் வழங்கப்பட்டு வந்தன. 2015ஆம் ஆண்டில் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். தற்போது ஆல்ஃபாபெட்டின் சிஇஓவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்பத்தைப் பற்றிய அவரது அறிவை விட, மக்களை வழிநடத்தும் மற்றும் பணியாற்றுவதற்கான திறமையே அவரை கூகுளின் மிக முக்கியமான மனிதராக ஆக்கியுள்ளது என்று கூகுள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019