மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

வழக்கு பற்றி வாய் திறக்கக் கூடாது: சிதம்பரம் ஜாமீனில் விடுதலை!

வழக்கு பற்றி வாய் திறக்கக்  கூடாது: சிதம்பரம் ஜாமீனில் விடுதலை!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த 106 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு இன்று (டிசம்பர் 4) உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சி.யின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்ட நிலையில் அவர் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் முன்னரே சிபிஐ சிதம்பரம் வீட்டு சுவரேறிக் குதித்து அவரைக் கைது செய்தது. சிதம்பரம் 2010 ஆம் ஆண்டு திறந்து வைத்த சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் அவரை வைத்து விசாரித்த சிபிஐ பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தது. அக்டோபர் 22 ஆம் தேதி சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. ஆனால் அக்டோபர் 16 ஆம் தேதி அதே வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்திருந்ததால் சிதம்பரத்தின் அடுத்த கட்ட ஜாமீன் போராட்டம் தொடர்ந்தது.

சிதம்பரம் புத்திசாலி, வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார். அவரது அறிவைப் பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிடுவார் போன்ற காரணங்களே அவரது ஜாமீன் மறுப்புக்கு காரணங்களாக மத்திய அரசின் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.

இந்நிலையில்தான் உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 4) அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நீதிபதி பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இரண்டு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு பற்றி ஊடகங்களுக்கு நேர்காணலோ, அறிக்கைகளோ வழங்கக் கூடாது, இவ்வழக்கின் சாட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்திடக் கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது ஆகிய நிபந்தனைகள் சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை ப.சிதம்பரத்தின் மீதான வழக்கு நடந்துகொண்டிருக்கும் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற ஆணைப்படி பிணைப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே திகார் சிறைக்கு சிதம்பரத்தை விடுவிக்குமாறு ஆணை வழங்கப்படும். இதையடுத்து சிதம்பரத்தை திகார் சிறை நிர்வாகம் விடுதலை செய்யும். இந்த சட்ட நடைமுறைகள் இன்றே நிறைவேற்றப்பட்டு, இன்று மாலைக்குள் சிதம்பரம் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரம் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருவார் என்று கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

”குறிப்பிட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு பற்றி மட்டும்தான் பேச உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, இந்திய பொருளாதாரம் பற்றி பேச தடை விதிக்கவில்லை. எனவே ப.சிதம்பரம் இனிமேல் மத்திய அரசின் பொருளாதார சீர்கேடுகள் பற்றி சும்மா கிழி கிழியென்று கிழிப்பார். சிறையில் இருந்தபோதே ட்விட்டர் மூலம் கிழித்தார். இனி நேரடியாகவே நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கிழிப்பார்” என்கிறார்கள் காங்கிரஸார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019