மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை: திமுக சார்பில் இன்னொரு வழக்கு!

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை:  திமுக சார்பில் இன்னொரு வழக்கு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 2 ஆம் தேதி தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், அந்த அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று (டிசம்பர் 4) புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27,30 தேதிகளில் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீருவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அதிமுகவும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகின்றன. தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமியா அல்லது எடப்பாடி பழனிசாமியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, “திமுகவுக்கு உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு பயம்” என அதிமுக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வெளியே இப்படி விவாதங்கள் நடந்தாலும், அதிமுக சார்பிலே சிலர் திமுக வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை வாங்குமாறு கேட்டுக் கொண்டதாக மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் தேர்தலை நிறுத்துங்கள்: திமுகவுக்கு அதிமுக விட்ட தூது! என்ற தலைப்பில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில், “மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பில் தெளிவாகத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், எந்த தேதியில் நடைபெறும் என்பதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் முதல் கட்டத்தில் நடைபெறுமா அல்லது இரண்டாவது கட்டத்தில் நடைபெறுமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தான் திமுக வழக்கறிஞர்களிடம் எடுத்துச் சென்ற அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள், ‘தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிலேயே குழப்பங்கள் உள்ளன என்று கூறி நீதிமன்றத்தை அணுகுங்கள். இதனை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்” என்று அந்த செய்தியில் சுட்டிக் காட்டியிருந்தோம்.

ஏற்கனவே கடந்த நவம்பர் 29ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகிய திமுக, “உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பு தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த பணிகளை நிறைவு செய்த பின்னரே தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும்” என்று மனுதாக்கல் செய்தது. மேலும் புதிய மாவட்டங்களில் வரையறைகள் முடியாத நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கூடாது என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திமுகவின் முறையீட்டை அடுத்து இந்த மனுக்களை அவசர வழக்காக டிசம்பர் 5 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், “ஊரகப் பகுதிகளில் மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மறு சீரமைப்புப் பணிகள் முடியும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது” என்று திமுகவின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தல் அறிவிப்பு பற்றிய குழப்பத்தையும் திமுக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு, 5 புதிய மாவட்டங்களின் வாக்காளர்கள் தொடர்ந்த வழக்குகள் ஆகியவற்றோடு இந்த புதிய மனுவும் நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்கிறார்கள் திமுக வழக்கறிஞர்கள்.

நாளை இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பதை அறிய திமுகவினரை விட, அதிமுகவினர்தான் அதிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019