மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - ராமதாஸ்: அதிகரிக்கும் இடைவெளி - அந்தரத்தில் கூட்டணி!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி - ராமதாஸ்: அதிகரிக்கும் இடைவெளி - அந்தரத்தில் கூட்டணி!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“அதிமுக கூட்டணிக்குள் அதிக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியிருந்தது பாமகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான். ஆனால், அந்த உறவில் ஒரு பெரிய இடைவெளி விழுந்திருப்பதாக இரு தரப்பிலுமே கன்ஃபார்ம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவுடன் பல கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் முதலில் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது பாமகவுடன்தான். அதிமுக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் ஆகியோரையும் கடுமையாக விமர்சனம் செய்த அன்புமணியின் வார்த்தைகளை எல்லாம் மறந்து, ராமதாஸும் எடப்பாடியும் மிகுந்த நெருக்கம் பாராட்டினார்கள்.

ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்துக்கு விருந்துக்கு வருமாறு அதிமுகவினரை அழைத்தார். அழைப்பை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்கள் விருந்துக்குச் சென்றனர்.

அதன் பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் பாமகவின் பங்கு பெரிதாகப் பேசப்பட்டது. தேர்தல் முடிவு வந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மாலை நேரத்தில் சென்றார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதன் பின் சில நாட்களுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் சிகிச்சை பெற்றுவந்தபோதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சென்று நலம் விசாரித்துட்டு வந்தார்கள். அந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது பாமகவுக்கு எதிராக சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், அதனால் டாக்டர் ராமதாஸ் வேதனை அடைந்திருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.

வன்னியர் என்ற அடையாளத்தை வைத்தே பாமகவை ஒடுக்க முதல்வர் எடப்பாடி முயற்சி செய்கிறார் என்பதுதான் பாமகவின் வருத்தத்துக்குக் காரணம். கடலூர் மாவட்டத் தலைநகரில் ராமசாமி படையாச்சியாருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி மணி மண்டபம் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. விழாவுக்கு பாமகவுக்கு அழைப்பும் கொடுத்தார்கள்.

மாவட்ட எம்.பி. என்ற முறையில் திருமாவளவன் பெயரை அழைப்பிதழில் அச்சடித்த மாவட்ட நிர்வாகம், ராஜ்யசபா எம்.பி. என்ற வகையில் அன்புமணியை விழாவுக்கு அழைத்திருக்கலாம். ஆனால், முறைப்படி அழைக்கவில்லை. இந்த நிலையில்தான் அப்போலோவில் சிகிச்சையில் இருந்த ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணியை அவ்விழாவுக்கு அனுப்பினார். ஆனால் விழாவுக்குச் சென்ற ஜி.கே.மணிக்கு எவ்வித முக்கியத்துவமும் தரப்படவில்லை. மேலும் அண்மையில் வன்னியர் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட பு.தா.அருள்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்தத் தகவல்கள் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் சென்றன.

முன்னதாகவே சென்னையில் நடந்த பாமக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, ‘யார் என்ன சொன்னாலும், நினைத்தாலும் பரவாயில்லை. ஆட்சியை நாமே பிடிப்போம். அதற்குத் தயாராக வேண்டும்’ என்று பேசினார். இதுவும் அதிமுக தலைமைக்குச் சென்றது.

இன்னொரு பக்கம் படையாச்சியார் பேரவை சார்பில் கடலூரில் ராமசாமி படையாச்சியார் மணி மண்டபம் திறந்த முதல்வருக்கு, துணை முதல்வருக்கும் பாராட்டு, நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. படையாச்சியார் பேரவையின் நிறுவனத் தலைவரும், ராமசாமி படையாச்சியாரின் மகனுமான எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், படையாச்சியார் பேரவை மாநிலத் தலைவர் திருவாரூர் எம்.பி. காந்தி ஆகிய இருவரும்தான் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருமே இப்போது பாஜகவில் இருக்கின்றனர் என்பதுதான் முக்கியமான விஷயம். ராமதாஸ் பாஜகவின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். எம்.பி காந்தி பாஜகவின் மாநில ஓபிசி அணி துணைத் தலைவராக இருக்கிறார்.

படையாச்சியார் பேரவை வைத்த கோரிக்கையின் மூலமாகவே வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை மீட்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க, தமிழக அரசு வாரியம் அமைத்தது. இந்த விஷயத்துக்காக அந்த பாராட்டு விழாவில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்துக்கு பாமகவுக்கு அழைப்பு இருக்காது என்று தெரிகிறது. இந்தத் தகவலும் பாமகவுக்கு சென்றிருக்கிறது.

இதற்கிடையில் ராமசாமி படையாச்சியாரின் மகன்கள் மந்திரிகுமார், எஸ்.எஸ்.ராமதாஸ் ஆகியோரை கம்போடியா நாட்டில் ராஜராஜ சோழனுக்கு நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள அரசு செலவில் அனுப்பும் எடப்பாடியின் நடவடிக்கையும் பாமகவுக்குப் பிடிக்கவில்லை. அதாவது வன்னிய மக்களிடம் பாமக இல்லாமலேயே செல்வாக்கு பெற வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறார் எடப்பாடி. அதற்கு சரியான தோதாக ராமசாமி படையாச்சியார் படம் சட்டமன்றத்தில் திறப்பு, மணி மண்டபம் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் அமைந்துவிட்டன.

இதையெல்லாம் கேள்விப்பட்ட ராமதாஸும் அன்புமணியும் கொதித்துப் போயிருக்கிறார்கள். ’நம்ப வைத்து கழுத்து அறுக்கிறார்களே துரோகிகள், வன்னியர்களைத் திரட்டி எப்படி நன்றி கூட்டம் நடத்துவார்கள்? எந்த வன்னியர்களும் அந்த விழாவுக்கு கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது’ என்று திட்டமிட்டுள்ளதாம் பாமக. விரைவில் அதிமுகவுக்கு எதிராக பாமக அறிக்கை போர் நடத்த, அதற்கு அதிமுகவும் பதிலடி கொடுக்கும் காலமும் வரக் கூடும் என்கிறார்கள் இரு தரப்பிலும் இருக்கும் மேல் மட்ட நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019