மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 டிச 2019

எய்ட்ஸ் விழிப்புணர்வு: இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு!

எய்ட்ஸ் விழிப்புணர்வு: இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு!

உலக எய்ட்ஸ் தினம் என்பது 1988ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதைப் பற்றிய அறிவையும் புரிதலையும் மேம்படுத்தவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. எய்ட்ஸ் என்றதும் இன்றும்கூட அருவருப்பின் உச்சமாகப் பார்க்கப்படும் நிலைதான் பொது சமூகத்தின் பெரும்பாலான மனப்பரப்பில் நிலவுகிறது.

ஆனால், இன்றைக்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னரே தனது இடைவிடாத ஆய்வின் மூலம் தமிழகத்தில் இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதைப் பரிசோதனை மூலம் உறுதிசெய்து, இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அடித்தளம் இட்டவர்கள் மூவர்.

டாக்டர் நிர்மலா, பேராசிரியர் டாக்டர் சுனிதி சாலமன், திரு. வீரப்பன் ராமமூர்த்தி. இவர்கள் மூவரும் அப்படி என்ன சாதித்தார்கள்? அதற்கு நாம் 1986ஆம் வருடத்துக்குச் செல்ல வேண்டும்.

பேராசிரியர் கொடுத்த ஆய்வுத் தலைப்பு!

அப்போது 32 வயதான டாக்டர் நிர்மலா அவர்கள் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் நுண்ணியிரியியல் (Micro Biology) மேல்படிப்பு படிக்கும் மருத்துவர். டாக்டர் சுனிதி சாலமன் இவரது துறை பேராசிரியர்.

பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஓர் ஆராய்ச்சி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதை Thesis / Dissertation என்பார்கள். டாக்டர் சுனிதி தனது மாணவிக்குக் கொடுத்த தலைப்பு ‘தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை’ (Surveillance of AIDS in Tamilnadu).

இந்த தலைப்புக் கொடுக்கப்பட்டபோது இந்தியாவில் அதுவரை அதிகாரபூர்வமாக ஒரு எய்ட்ஸ் நோயாளிகூட கிடையாது. நம்ப முடிகிறதா? அதாவது சுமார் 80 கோடி பேர் மக்கள்தொகை கொண்டிருந்த நாட்டில் ஒரு எய்ட்ஸ் நோயாளிகூட அப்போது கண்டறியப்பட்டிருக்கவில்லை. காரணம்...

தமிழகம் மீதான கற்பிதம்

அப்போது பொது மக்கள், சட்டம் இயற்றுவோர் இடையே பலமான ஒரு மூட நம்பிக்கை இருந்தது. அதாவது இந்தியா ஒழுக்கமான தேசம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மதித்து வாழும் தேசம். எனவே இங்கெல்லாம் ஒழுக்கக்கேடானவர்களுக்கு வரும் எய்ட்ஸ் நோய் வராது என்றே நினைத்தனர்; நம்பினர்.

எய்ட்ஸ் என்பது மேற்குலக நோய் என்றும் அது தன்பாலின சேர்க்கையாளர்கள் போன்ற இயற்கைக்கு எதிரான உறவுமுறைகளைக்கொண்ட மேற்குலகுக்கு மட்டும் வரும் நோய். இந்தியா அது குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அனைவரும் எந்த கவலையும் இன்றி இருந்தனர்.

இதற்கு முன் மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரில் செய்த ஆராய்ச்சியிலும்கூட எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்படவில்லை. அவையெல்லாம்விட சென்னை ஒழுக்கமான நகரமாக அப்போது பார்க்கப்பட்டது. காரணம்? மேற்சொன்ன நகரங்களில் எல்லாம் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் விலைமாதர்கள் தொழிலாகவே சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாகவே செய்து வந்த இடங்கள் இருந்தன.

மும்பையில் சோனாபூர், டெல்லியில் ஜி.பி.ரோடு, கொல்கத்தாவில் சோனா காச்சி என்று இதற்கென தனியிடம் ஒதுக்கி இருக்கும். அங்கேயே எய்ட்ஸ் இல்லை என்னும்போது தமிழகத்தில் எப்படி இருக்கும்?

இந்தியாவைப் புரட்டிய ஆய்வு

இந்தச் சூழ்நிலையில்தான் இந்த தலைப்பை டாக்டர் சுனிதி அவர்கள் தன் மாணவிக்குத் தருகிறார்.

ஆனாலும் டாக்டர் நிர்மலா, “மேடம் எப்படியும் நெகடிவ் என்றுதான் வரப்போகிறது” என்கிறார்.

அதற்குப் பேராசிரியர், “எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இருப்பினும் ஒரு முயற்சி செய்து பார்” என்கிறார். உடனே அந்த ஆராய்ச்சியைக் கையில் எடுக்க ஒப்புக்கொள்கிறார் டாக்டர் நிர்மலா.

அப்போது அவருக்கு எய்ட்ஸ் என்றால் என்ன, அது எப்படி பரவும் என்றெல்லாம் தெரியாது.

சரி... எப்படி இந்த ஆராய்ச்சியை நடத்துவது?

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் ரத்த மாதிரிகளை எடுக்க வேண்டும். இவர்கள் High Risk Population என்று அழைக்கப்படுவார்கள்.

1. விலைமாதர்கள்,

2. தன் பாலின உடலுறவு புரிபவர்கள்,

3. ஆப்பிரிக்க மாணவர்கள்.

இதுபோன்ற 200 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டும். அப்போது சென்னையில் தனியான ரெட் லைட் ஏரியா கிடையாது. அதனால் நிர்மலா நேராக சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள பால்வினை நோய்கள் பிரிவில் சிகிச்சை எடுக்க வரும் விலைமாதர்களில் இருவரை நண்பர்களாக்கிக் கொண்டார். அவர்கள் மூலம் மற்ற விலை மாதர்களின் வீட்டு முகவரியைப் பெற்றார். அப்போது விலை மாதர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் விஜிலென்ஸ் ஹோம் என்னும் இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கேஸ் சீட்டுக்கு மேல் ‘V’ Home என்று எழுதியிருக்கும். இதை ரிமாண்ட் ப்ரிசன் என்றும் கூறுவார்கள்

டாக்டர் நிர்மலாவின் விடாமுயற்சி

கிராமத்தில் வெளியில் எங்கும் செல்லாமல் வளர்க்கப்பட்ட டாக்டர் நிர்மலாவுக்கு இந்த ரிமாண்ட் ப்ரிசனுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் பேசி உள்ளே சென்று விலை மாதர்களிடம் ரத்த மாதிரி எடுப்பது பெரிய சவாலாக இருந்தது. அப்போது அவருக்கு உந்து சக்தியாக இருந்தவர் கணவர் வீரப்பன் ராமமூர்த்தி.

காலையில் பணிக்குச் செல்லும்முன் தன் மனைவியை ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு ரிமாண்ட் ஹவுஸுக்குச் சென்று விடுவார். அங்கு நிர்மலா ரத்த மாதிரிகளைச் சேகரிப்பார். இப்படியாக 80 ரத்த மாதிரிகளைச் சேகரித்து விட்டார். ரத்தம் சேகரிக்கும்போது கையுறை போடவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் கிடையாது.

டாக்டர் நிர்மலா, “விலைமாதர்களிடம் எதற்காக ரத்த பரிசோதனை எடுக்கப்படுகிறது என்று நான் கூறவில்லை. கூறினாலும் அவர்களுக்குப் புரிந்திருக்காது. காரணம், அப்போது எய்ட்ஸ் என்ற நோயைப் பற்றி மருத்துவர்களுக்கே தெரியாது” என்கிறார்.

தோள்கொடுத்த கணவர்

எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளிலிருந்து serum மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டது. இதற்காக டாக்டர் சுனிதி சாலமன் தனியாக சின்ன லேப் ஒன்று தயார் செய்திருந்தார். அதற்கு உதவியது அவரது கணவர்.

இப்படியாகத் தயார் செய்யப்பட்ட சீரம் சாம்பிள்களைக் கெட்டுப்போகாமல் ஸ்டோர் செய்யும் வசதி இல்லை. அதனால் டாக்டர் நிர்மலா அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தார்

அந்தக் காலத்தில் சென்னையில் ஹெச்.ஐ.வி கிருமியைக் கண்டறியும் ELIZA (Enzyme linked immuno sorbent assay) பரிசோதனை செய்யும் வசதி இல்லை. இதற்காக டாக்டர் சுனிதி, வேலூரில் இயங்கி வரும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் ஏற்பாடு செய்தார்.

டாக்டர் நிர்மலாவும் அவரது கணவரும் இந்த ரத்த மாதிரிகளை ஒரு ஐஸ்பாக்ஸில் போட்டுக்கொண்டு வேலூர் காட்பாடிக்குச் செல்லும் இரவு ரயில் வண்டியில் ஏறினர். காட்பாடியிலிருந்து CMC மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர்.

அங்கு வைராலஜி துறைத் தலைவர் டாக்டர் ஜேக்கப் T ஜான் அவர்கள் இவர்களுக்கு ஜார்ஜ் பாபு, எரிக் சிமோஸ் என்ற இரண்டு ஜூனியர்களைத் துணைக்கு வேலை செய்ய கொடுத்தார். காலை 8.30 மணிக்கு ரத்த மாதிரிகளை ஆராயும் பணியை டாக்டர் நிர்மலா, டாக்டர் ஜார்ஜ் பாபு, டாக்டர் எரிக் சிமோஸ் தொடங்கினர்.

நம்ப முடியாத முடிவுகள்

வேலை நடந்துகொண்டிருக்கும்போது மதியம் மின்சாரம் போய் விட, சரி ஒரு டீ சாப்பிட்டு வரலாம் என்று மூவரும் சென்று மின்சாரம் வந்ததும் நிர்மலா மற்றும் ஜார்ஜ் இருவரும் வந்து திறந்து பார்த்தால் ஆறு சாம்பிள்கள் மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன. பின்னால் வந்த எரிக் சிமோசும் இதை ஆமோதித்தார். அவர்கள் யாராலும் அந்த முடிவுகளை நம்ப முடியவில்லை.

இருப்பினும் பாசிடிவ் என்று வந்த அந்தத் தகவலை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று வைராலஜி தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேரே சென்னை சென்று விட்டனர் கணவனும் மனைவியும். கூடவே ஜார்ஜ் மற்றும் சிமோசும் சென்றனர்.

நேராக துறைத் தலைவர் சுனிதி சாலமனிடம் விஷயம் கூறப்பட்டது. அடுத்த நாள் காலை சுனிதி நேராக ரிமாண்ட் ஹோமுக்குச் சென்று அந்த ஆறு பாசிடிவ் ரிசல்ட் வந்த ரத்த மாதிரிகளை கொண்ட விலைமாதர்களிடம் இருந்து மீண்டும் ரத்தம் எடுத்தார்..

அந்த மாதிரிகளைக் கையில் எடுத்துக்கொண்டு சிமோஸ் அவர்கள் உடனே அமெரிக்காவுக்குப் பறந்தார். அங்குதான் ஹெச்.ஐ.விக்கான கன்பர்மேசன் டெஸ்ட்டான Western Blot அப்போது இருந்தது.

அங்கு செய்யப்பட்ட வெஸ்டர்ன் பிளாட் டெஸ்ட் இந்தியாவுக்குள் எய்ட்ஸ் நோய் நுழைந்து விட்டதை உறுதி செய்தது. இந்த செய்தி உடனே ICMR (Indian council for Medical Research)க்குத் தெரிவிக்கப்பட, அங்கிருந்து செய்தி பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிறகு, தமிழக சுகாதார அமைச்சர் ஹண்டேவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

மே மாதம் நடந்த தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் இந்தக் கெட்ட செய்தியை ஹண்டே மக்களுக்குக் கூறினார். அப்போது டாக்டர் சுனிதியும் டாக்டர் நிர்மலாவும் சட்டமன்றத்தின் பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்தச் செய்தி வெளியிடப்பட்டதும் மக்கள் கொந்தளித்தனர் “என்னது தமிழ்நாட்டுல எய்ட்ஸா?“,

“ஒழுக்க பூமியான தமிழ்நாட்டுல எய்ட்ஸ் வாய்ப்பே இல்லை. இந்த டாக்டருங்க எடுத்த டெஸ்ட்லதான் தப்பு இருக்கும்”, “சுனிதி சாலமன் மஹாராஷ்டிராகாரவுங்க. தமிழ்நாட்டு மேல வீணா பொய் புரளி கிளப்புறாங்க” என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர்

இதுபோன்ற அத்தனை பேச்சுகளையும் தாண்டி தனது ஆராய்ச்சிக்குத் தேவையான 200 சாம்பிள்களை எடுத்துமுடித்து 1987இல் ஆராய்ச்சி கட்டுரையைச் சமர்ப்பித்தார். மேற்படிப்பை முடித்தார். 2010ஆம் ஆண்டு கிண்டி கிங்க்ஸ் தடுப்பூசி இன்ஸ்டிட்யூட்டில் வேலை செய்து ஒய்வு பெற்றார்.

இவர் கண்டுபிடித்த அந்த முதல் நோயாளிகளுக்குப் பிறகு இந்தியா எய்ட்ஸ் மீது கொண்ட பார்வை மாறியது. 2006 கணக்குப்படி 20 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் கொண்டு உலகில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடாக நாம் இருக்கிறோம்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவசமாக anti retro viral therapy கொடுக்கிறோம் இவை எல்லாவற்றுக்கும் விதை போட்டது டாக்டர் நிர்மலா, டாக்டர் சுனிதி சாலமன் ஆகிய இரு பெண்மணிகள். இத்தனை செயற்கரிய சாதனை புரிந்த டாக்டர் நிர்மலா அவர்களை கௌரவிக்கும் பெரிய விருதுகளோ, பரிசுகளோ அவருக்குக் கிடைக்கவில்லை.

அங்கீகாரத்தை விட மக்களே முக்கியம்

இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, “நான் கிராமத்தில் வளர்க்கப்பட்டவள். அங்கே யாரும் தாங்கள் செய்த விஷயங்களுக்காகத் துள்ளி குதிக்கவும் மாட்டார்கள் / சோர்ந்து போகவும் மாட்டார்கள். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. இதன் மூலம் சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடிந்ததே போதும்” என்று முடிக்கிறார் டாக்டர் நிர்மலா.

ஆசிரியரின் பேச்சை தட்டாமல் ஆராய்ச்சியை முன்னெடுத்த அவரின் முயற்சி / தைரியம் / உழைப்பு. சமூகம் தனக்கான அங்கீகாரத்தை வழங்காவிட்டாலும் அதற்காக நான் என்னால் முடிந்ததை செய்வேன் என்பது அவரின் எண்ணம்.

டாக்டர் சுனிதி சாலமன்... அதுதான் இந்தியாவின் பிற மாநிலங்களில் எய்ட்ஸ் இல்லை என்று வந்துவிட்டதே என்று ஒதுக்கிவிடாமல் தனது மாணவியை அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. அத்தோடு ஒதுங்கிக்கொள்ளாமல் மாணவியோடு கடைசி வரை நின்று உதவி செய்த அவரின் ஊக்கம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 4 டிச 2019