மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

பிரதமர், நீட், திமுக: அதிமுகவின் பொதுக் குழு தீர்மானங்கள்!

பிரதமர், நீட், திமுக: அதிமுகவின் பொதுக் குழு தீர்மானங்கள்!

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று (நவம்பர் 24) காலை 11 மணிக்குத் துவங்கியது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வாஜ்பாய், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மனோகர் பாரிக்கர், ராம்ஜெத் மலானி, டி.என்.சேஷன், கிரேசி மோகன் உட்பட 246 பேருக்கு இரங்கல் தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மொத்தமாக 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு தீர்மானத்தையும் முக்கிய நிர்வாகிகள் தனித்தனியாக முன்மொழிய, பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டி பெருமைப் படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட செயல்பாடுகளில் தலையிடாத ஆட்சிமுறை, அறிவாலும் ஆற்றலாலும் நாட்டுக்கு உழைக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறை என்ற பாதையில் தமிழகம் பயணிக்கும் எனவும், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வெற்றியை பெற்றுத் தந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், தமிழகத்தை தொழில்வளம் மிக்க மாநிலமாக மாற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும், உலக நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், புதிய மாவட்டங்களை உருவாக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், சுற்றுச் சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்து வரும் பிளாஸ்டிக்குகளை தடை செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு சங்க கால தமிழர்களின் வாழ்க்கை சிறப்பினை உலகறியச் செய்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும், இலங்கையில் வாழும் தமிழர்கள் துன்பம் நீங்கி அவர்கள் சம உரிமை பெற்ற குடிமக்களாக அங்கு வாழ்வதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியும், நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் ஒன்றிணைந்து பணியாற்றி வெற்றி பெறவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோலவே தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுகவை விமர்சித்துத் தீர்மானம்

திமுகவை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போலவே அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும், திமுகவை தலைதூக்க முடியாமல் பணியாற்றும் பாங்கினைக் கண்டு, தங்களுக்கு இனியும் எதிர்காலம் இல்லை என்பதை திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது கட்சியினரும் உணர்ந்துகொண்டுவிட்டனர்.

பதவி ஆசையை பொது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு தமிழகத்தை தங்களது குடும்பத்தின் வேட்டைக்காடாக்கிய திமுக தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் திமுக முன்னணியினர், தமிழக அரசின் சாதனைகளை மறைக்க முயற்சித்து நடத்தி வரும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு பொதுக் குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019