மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

இன்று அதிமுக பொதுக் குழு! முக்கிய முடிவுகள் உண்டா?

இன்று அதிமுக பொதுக் குழு! முக்கிய முடிவுகள் உண்டா?

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்று அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான அதிமுகவின் முதல் பொதுக் குழு கூட்டம் 2016 டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நடைபெற்றது. அதில் கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சசிகலா முதல்வராக பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணி எனவும், பன்னீர்செல்வம் தலைமையில் புரட்சித் தலைவி அம்மா அணி எனவும் அதிமுக இரண்டாக உடைந்தது.

அடுத்த சில நாட்களில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி சசிகலா சிறை சென்றதால் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். இரண்டு மாதங்களில் அமைச்சர்கள் ஒன்றுசேர்ந்து சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து ஒதுக்கினர். அதன் பிறகு 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிமுகவின் பொதுக் குழு கூடியது. அதில், நியமன பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவதாகவும், பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு அர்ப்பணிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வருடத்துக்கு ஒருமுறை பொதுக் குழு நடைபெற வேண்டும் என்ற நிலையில், 2018ஆம் ஆண்டு அதிமுக பொதுக் குழு, கஜா புயல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (நவம்பர் 24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதில் சுமார் 3,000 பொதுக் குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அழைப்பிதழ் உள்ளவர்களை மட்டும் பொதுக் குழுவில் அனுமதிக்க வேண்டும் என்று கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது.

பொதுக் குழுவில் கட்சி ரீதியாகவும் அரசு ரீதியாகவும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதுபோலவே கட்சிக்கு அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்துவது, வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாகவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒற்றைத் தலைமை குறித்து விவாதம் எழுந்து அடங்கிய நிலையில், பொதுக் குழுவில் மீண்டும் அந்தப் பிரச்சினையை ஒருசிலர் எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக் குழுவுக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். சமீபகாலமாக பேனர் மற்றும் கொடிக்கம்பம் விழுந்ததால் உயிரிழப்பு மற்றும் விபத்துகள் நடைபெற்றதையடுத்து, இந்தக் கூட்டத்தில் பேனர் மற்றும் கொடிக்கம்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019