மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

எடப்பாடிக்காக தங்கமணி.... ஓ.பன்னீருக்காக முனுசாமி: பொதுக்குழுவில் வெடித்த பகிரங்க மோதல்!

எடப்பாடிக்காக தங்கமணி....  ஓ.பன்னீருக்காக  முனுசாமி: பொதுக்குழுவில் வெடித்த பகிரங்க மோதல்!

சென்னை வானகரத்தில் இன்று (நவம்பர் 24) நடந்த பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், துணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் அவர்கள் மூலம் நேரடியாக வெடிக்காமல்... அவரது ஆதரவாளர்கள் மூலமாக வெடித்திருக்கிறது.

எடப்பாடிக்காக அமைச்சர் தங்கமணியும், ஓ.பன்னீருக்காக கே.பி.முனுசாமியும் பொதுக்குழுவில் பகிரங்கமாகப் பேசி இருவருக்கு இடையிலான மோதலை வெளிப்படையாக விவாதிக்க வைத்திருக்கிறார்கள்.

அண்மைக் காலமாகவே அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் ஓ.பன்னீருக்கான முக்கியத்துவம் குறைந்துகொண்டே வருகிறது என்பதை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில் பல செய்திகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறோம். லேட்டஸ்ட் உதாரணமாக அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீரை வரவேற்க சென்னை விமான நிலையத்துக்கு எந்த அமைச்சர்களும் வரவில்லை. இத்தனைக்கும் மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் எல்லா அமைச்சர்களும் சென்னையில்தான் இருந்தனர். ஆனாலும் எவரும் பன்னீரை வரவேற்க வரவில்லை. ஓ.பன்னீரோடு தர்மயுத்தம் செய்த மாஃபா பாண்டியராஜன் மட்டுமே விமான நிலையத்துக்குச் சென்று அவரை வரவேற்றார். இதில் பன்னீர் பலத்த அப்செட் ஆகியிருந்தார். இதுபற்றி, ஓ.பன்னீரை வரவேற்ற ஒற்றை அமைச்சர் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இது ஒரு பக்கம் என்றால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் முழுக்க முழுக்க தனது ஆதரவாளர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி கட்சி முழுதும் தனது ஆதரவு அலையை உண்டாக்கி, அதன் மூலம் பொதுச் செயலாளராக ஆவதுதான் எடப்பாடியின் திட்டம். இதை, டார்கெட் பொதுச் செயலாளர் -எடப்பாடியின் ஏகன் பிளான்என்ற தலைப்பில் செய்தியாக மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில்தான் இன்றைய பொதுக்குழு கூடியது. இதில் பேசிய எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி உறவு கொண்டவரும் தீவிர ஆதரவாளருமான அமைச்சர் தங்கமணி, ‘அடுத்த முதல்வர் எடப்பாடிதான் என்றும், கட்சி அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும்’ என்பதையும் வெளிப்படையாகவே பேசினார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, “அதிமுக அரசு இத்தனை நாள்தான் இருக்கும் என் நாள் குறித்தவர்களுக்கு விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வெற்றி பதிலளித்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதும் அதிசயம் என்று கூறுகிறார்கள். எதிரி ஒருபக்கம், துரோகி ஒருபக்கம் அனைத்து சதிகளையும் முறியடித்து வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அவரது ஆளுமையே காரணம்” என்று தங்கமணி குறிப்பிட்டபோது ஓ.பன்னீர் ஆதரவாளர்கள், ‘இவர் துரோகி என்று நம்மைதான் குறிப்பிடுகிறார்” என்று பேசிக் கொண்டனர்.

தொடர்ந்து பேசிய தங்கமணி, “ மேலும், தமிழகத்தில் அதிசயம் நடக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். அதிசயம் கண்டிப்பாக நடக்கும் என்பது உண்மைதான். 2021 தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி தொடரும் என்பதுதான் அந்த அதிசயம். தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போதே ஒலிக்கத் துவங்கிவிட்டது. இதுதொடர்பாக கேள்விக்கு தூத்துக்குடியில் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “2021 ஆம் ஆண்டில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்” என்ற மழுப்பலான பதிலையே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என பொதுக் குழுவில் அவருடைய தீவிர ஆதரவாளரான தங்கமணி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

இதே பொதுக்குழுவில் இதன் பின் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் பேச்சு ஓ.பன்னீரின் மனக்குமுறலைக் கொட்டுவதாக அமைந்திருந்தது.

“கூட்டுத் தலைமையை கவனமாக பயன்படுத்த வேண்டும்,. கூட்டுத் தலைமை என்பது கூர்மையான கத்தி. அதை கவனமாக பயன்படுத்த வேண்டும்,. அதேபோல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் உரிய மரியாதையை சமமான முறையில் அளிக்க வேண்டும். அப்போதுதான் கட்சி இன்னும் பல வெற்றிகளைப் பெற முடியும். இரண்டு பேரும் இரண்டு தளபதிகள். இதில் ஒருவரை உயர்த்தவோ ஒருவரை உயர்த்தாமல் விடுவதோ கூடாது. இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம் தொண்டர்கள் அல்லர். நிர்வாகிகள்தான் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே தொண்டர்களுக்கும் உரிய மரியாதையை வழங்கிட வேண்டும்” என்று பேசியதன் மூலம் இரு செய்திகளை கே.பி.முனுசாமி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது கட்சியிலும் ஆட்சியிலும் ஓ.பன்னீருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறார். அதன் பின், ‘இந்தப் பொதுக்குழுவைத் தாண்டியும் கட்சியில் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை மதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டதன் மூலம் தொண்டர்கள் எல்லாம் ஓ.பன்னீர் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டியிருக்கிறார் கே.பி.முனுசாமி.

அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் பேச்சுகளை விட தங்கமணி, கே.பி. முனுசாமி பேச்சுகள்தான் அதிமுகவினரிடையே விவாதத்துக்கான விதையை தூவியிருக்கின்றன.

எடப்பாடி- பன்னீர் இருவருக்கிடையேயான ஆளுமை மோதல் இந்த பொதுக்குழுவின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019