மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 நவ 2019

குழப்பும் அஜித் பவார்-கொந்தளித்த சரத் பவார்

குழப்பும் அஜித் பவார்-கொந்தளித்த சரத் பவார்

பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைத்து மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராகியிருக்கும் அஜித் பவார் தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸில்தான் இருப்பதாகவும், தன் தலைவர் சரத் பவார்தான் என்றும் சொல்லியிருக்கிறார்.

நவம்பர் 23 ஆம்தேதி காலை எட்டு மணிக்கு திடீரென பட்னவிஸோடு சேர்ந்து துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாரை அன்று மதியம் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் சரத்பவார். இந்நிலையில் இன்று (நவம்பர் 24) சரத்பவாரின் தூதுவர்கள் அஜித் பவாரின் வீட்டுக்குச் சென்று, ‘உங்களோடு எந்த எம்.எல்.ஏ.வும் வரப் போவதில்லை. எனவே மீண்டும் கட்சிக்கே வந்துவிடுங்கள். பவார் சாஹிப் உங்களை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்” என்று பேசிப் பார்த்தனர்.

இந்நிலையில் இன்று மாலை அஜித் பவார் தனது ட்விட்டரில் மௌனத்தை உடைத்துள்ளார்.

“கவலைப்பட எதுவுமில்லை. எல்லாமே நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் பொறுமையோடு இருங்கள். எனக்கு ஆதரவளித்த எல்லாருக்கும் நன்றி. நான் இப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். என்னுடைய தலைவர் சரத்பவார்தான். நமது என்சிபி-பிஜேபி கூட்டணி மகாராஷ்டிர மாநிலத்துக்கு வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரும். மக்களின் நலனுக்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்” என்று கூறியிருக்கிறார்.

இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல, சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அஜித் பவாரின் இந்த ட்விட்டுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனடியாக ட்விட்டர் மூலமாகவே பதில் கொடுத்திருக்கிறார்.

“பாஜகவோடு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறது. இந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும். இந்த நிலையில் அஜித் பவாரின் அறிக்கை தவறானது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, தவறான யூகங்களுக்கு இடமளிக்கும் திட்டத்தோடு அஜித் பவார் செயல்பட்டிருக்கிறார்” என்று பதில் அளித்துள்ளார் சரத் பவார்.

இந்தக் குழப்பங்களுக்கு விடையளிக்க அஜித் பவாரை கட்சியில் இருந்து நீக்குவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 24 நவ 2019