மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 நவ 2019

சந்தர்ப்பவாத அரசியல்: தமிழக தலைவர்கள் கருத்து!

சந்தர்ப்பவாத அரசியல்: தமிழக தலைவர்கள் கருத்து!

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து தமிழக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இன்று (நவம்பர் 23) காலை 8 மணியளவில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க இருந்த சூழலில், பாஜக ஆட்சியமைத்தது.

எனினும், அஜித் பவாரின் முடிவுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிர அரசியலில் தற்போது குழப்பமான நிலை நீடித்துக்கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? 'ஜனநாயகப் படுகொலை' என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ - நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? - பாஜக சித்து விளையாட்டு என்பதா?இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவுடன் இணைந்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா. காலை நாளிதழ் செய்திகளில் சிவசேனா ஆட்சி. காலை தொலைக்காட்சி செய்திகளில் பாஜக ஆட்சி. மராட்டியத்தில் சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “தேசியவாத காங்கிரசுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் பா.ஜ.க. தனது கோரமுகத்தை அரங்கேற்றியிருக்கிறது. ஒரு குடும்பத்துக்குள் நுழைந்து, அதன்மூலம் அதிகார பசியை போக்க முயற்சிப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் முதுகில் குத்திய ரத்தக்கறை அமித்ஷாவின் கைகளில் இருந்து போகாது” என்று சாடியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி என்பது அதிர்ச்சி அளிக்கும் செயலாக உள்ளது. இந்திய அரசியல் மதச்சார்பின்மையை காப்பாற்றுவது கடினமானது என்பதை மகாராஷ்டிரா காட்டியுள்ளது. மகாராஷ்டிரா அரசியல் ஜனநாயக நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

சனி 23 நவ 2019