?கொலை மாநிலமா தமிழ்நாடு?

public

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு, பிரச்சாரங்கள், மற்றும் பொதுக் கூட்டங்களில் தெரிவித்து வருகிறார். ஆனால், தேசிய குற்ற ஆவண பணியகம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் இந்தியாவில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடந்த மாநிலங்களில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6ஆவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றும், நாட்டில் உள்ள 19 மாநகரங்களில் 162 கொலைகள் நடைபெற்று, கொலைகள் நடந்த மாநகரங்களின் பட்டியலில் 4ஆவது இடத்தில் சென்னை உள்ளது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் பொய்யான அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு, தேசிய குற்ற ஆவண பணியகத்துக்கு மற்றொரு தகவலை அதிமுக அரசு அனுப்பியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 23) அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. சட்டமன்றத்தில், 2017ல் 1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசியக் குற்ற ஆவண பணியகத்துக்கு, அதே ஆண்டில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. அரசு தெரிவித்ததிலிருந்து. தமிழகச் சட்டமன்றத்திற்கே முதல்வர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுங்கட்சியினரின் சொல்படி, காவல்துறையில், ‘டிரான்ஸ்பர் அண்ட் போஸ்டிங்குகள்’, ‘ஒவ்வொரு வழக்கிலும் அதிமுகவினரின் தலையீடு’, ‘காவல் நிலையங்கள் எல்லாம் அந்தந்தப் பகுதியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது’ என்ற, நிலையில் ஆட்சியை முதல்வர் நடத்திக் கொண்டிருப்பதால், இன்றைக்கு ‘கொலைகள்’ அதிகம் நடக்கும் மாநிலத்தின் முதல்வர் என்ற ஐ.எஸ்.ஐ. முத்திரையை பழனிசாமி பெற்றிருக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

”’பிரகாஷ் சிங்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியான காவல் துறைச் சீர்திருத்தம், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் படு தோல்வியடைந்து, ‘வாக்கி டாக்கி ஊழல்’, ‘ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே டெண்டர் கொடுக்கும் ஊழல்’, ‘பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டவர்கள்’, ‘குட்கா ஊழலில் ஒரு டி.ஜி.பி. வீடே சி.பி.ஐ ரெய்டுக்குள்ளானது’ என்று, தமிழ்நாடு காவல்துறை, வரலாறு காணாத கடும் சுனாமியில் சிக்கி விட்டது.பொதுமக்களுக்கு சட்டத்தின் ஆட்சியை வழங்க முடியாமல், அ.தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கூட தத்தளித்து நிற்கிறார்கள்.

இதன் விளைவாக ‘கூலிப் படைகளின் அட்டகாசம்’ தலைதூக்கி, ‘எங்கு பார்த்தாலும் கொத்துக் கொத்தாகக் கொலைகள்’ என்ற பயங்கரமான நிலை தமிழகத்தில் நிலவி, இன்றைக்கு இந்தியாவிலேயே ‘ஆறாவது கொலை மாநிலம்’ என்ற அவப்பெயரை மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி தேடித் தந்திருக்கிறது.

பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலையில் 4ஆவது மாநிலமாகவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது எனும் தகவல், அம்மக்களுக்கும் இம்மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் (போஸ்கோ) பாதிக்கப்பட்டவர்களில் 8ஆவது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது. இந்தத் தோல்விகளுக்காக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சட்டமன்றத்திற்குத் தவறான தகவல் தந்ததற்காக முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்தக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைக்குப் பிறகாவது, அ.தி.மு.க. அமைச்சர்களின் தலையீடு இன்றி – முதலமைச்சர் அலுவலகத்தின் ‘அரசியல்’ உத்தரவுகளுக்கு அடிபணியாமல், தமிழகக் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *