மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 அக் 2019

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றம்: விசாரணை கேட்கும் திமுக!

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றம்: விசாரணை கேட்கும்  திமுக!

நாங்குநேரி தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணனும் போட்டியிடுகின்றனர். பனங்காட்டுப் படை கட்சியைச் சேர்ந்த ஹரி நாடார் மற்றும் சுயேச்சைகள் உள்பட அங்கு 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு 6 நாட்களே உள்ளதால், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இருந்த 30 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக திமுக புகார் அளித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எழுதியுள்ள கடிதத்தில், “நாங்குநேரி இடைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முன்கூட்டியே அந்தத் தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அதில் 30 வாக்குப் பதிவு இயந்திரங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மீண்டும் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கே கொண்டுவந்து பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும்” என்றும் ஆர்.எஸ்.பாரதி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தேனியிலிருந்து மாற்றப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கடந்த மக்களவைத் தேர்தலின்போது கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து தேனி மக்களவைத் தொகுதிக்கு 50 வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டன. அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்திற்கு ஆதரவாகவே வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், இதுதொடர்பாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. அதில், “அரசியல் கட்சியினரிடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலிருந்து எந்த பகுதிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டுசெல்லக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

திங்கள் 14 அக் 2019