மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

‘நோ’ பார்லிமென்ட்? ஜான்சன் மீது நீதிமன்றம் காட்டம்!

‘நோ’ பார்லிமென்ட்? ஜான்சன் மீது நீதிமன்றம் காட்டம்!

பிரெக்ஸிட் விவகாரத்தில் பாராளுமன்றத்தை முடக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு சட்ட விரோதமானது என ஸ்காட்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மை மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, 2019 மார்ச் 29 ஆம் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

பிரெக்ஸிட்டை எதிர்த்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து, தெரசா மே புதிய பிரதமராக பொறுப்பு ஏற்று பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். பின்னர் ‘பிரெக்ஸிட்’ மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. ஆனாலும் இவ்விவகாரத்தில் எம்.பிக்களின் ஆதரவைப் பெற முடியாததால், தெரசா மே தனது பிரதமர் பதவியை கடந்த மே மாதம் ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் கெடு நீட்டிக்கப்பட்டது.

அதன் பின்னர், இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். தொடக்கக் காலத்திலிருந்தே பிரெக்ஸிட்டிற்கு ஆதரவு தெரிவித்து வரும் போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, உடன்படிக்கைக்கு ஆதரவிருந்தாலும் எதிர்ப்பிருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்திருந்தார்.

பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, வணிகத் துறை அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.யுமான போரிஸ் ஜான்சனின் தம்பி ஜோ ஜான்சன் ‘குடும்ப விஸ்வாசம், தேசிய நலன் ஆகிய இரண்டுக்கும் இடையில் இழுபடுவதாக கூறி’ பதவி விலகினார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார்.

இந்நிலையில், பிரெக்சிட் விவகாரத்தில், போரிஸ் ஜான்சன் அரசுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அதுவரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க ஒப்புதல் அளிக்கக் கோரி, ராணி இரண்டாம் எலிசபெத்திடம் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 14ஆம் தேதி வரை, பாராளுமன்றத்தை முடக்கி வைக்கப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். ஜான்சனின் முடிவை எதிர்த்து, ஸ்காட்லாந்து நீதிமன்றத்தில் 70க்கும் அதிகமான எம்.பி-க்கள் சில தினங்களுக்கு முன் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 11) ஸ்காட்லாந்து சிவில் நீதிமன்றம் அம்மனு தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பில், “ஐரோப்பிய யூனியனிலிருந்து, பிரிட்டன் விலக, இரண்டுமாதம் கூட இல்லாத நிலையில், பாராளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கியது சட்ட விரோதம்” எனக் கூறியது. மேலும், “இது குறித்த இறுதி முடிவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் எடுக்கும்” எனக் கூறியது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019