மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

டிஜிட்டல் திண்ணை: தமிழக பாஜக தலைவர் நியமனம்… தாமதம் ஏன்?

டிஜிட்டல் திண்ணை: தமிழக பாஜக தலைவர் நியமனம்… தாமதம் ஏன்?

மொபைல் டேட்டா ஆன் ஆகியிருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“செப்டம்பர் 1ஆம் தேதி முற்பகல் வேளையிலே தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் தனது பாஜக தலைவர் பதவியையும், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். சரியாக 11 நாட்கள் முடிந்துவிட்ட நிலையிலும் இன்னமும் தமிழக பாஜக தலைவர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை.

இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தி தமிழக பாஜக தரப்பிலிருந்து இன்னமும் சிலர் முயற்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளனர். பிரதமர் மோடியின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது. அதை ஒட்டி பாஜக சார்பில் செப்டம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை சேவை வாரமாக பாஜகவால் அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்து மாநில பாஜக நிர்வாகங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்து பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளதால், சேவை வாரம் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளை மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ வினாயகம் முன்னின்று நடத்துகிறார்.

பொதுவாகவே பாஜகவில் அமைப்புப் பொதுச்செயலாளர் என்ற பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தீவிர ஊழியர்தான் இருப்பார். பாஜகவுக்கு எனத் தலைவர் இருந்தாலும் இந்த அமைப்புப் பொதுச் செயலாளரின் ஆலோசனையும் பங்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் இப்போது பாஜக மாநிலப் பொறுப்புகளை கேசவ வினாயகம்தான் பார்த்து வருகிறார்.

அதேநேரம் தலைவர் பதவி நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தைப் பயன்படுத்தி மேலும் சிலரும் டெல்லியில் தங்கள் லாபியைத் துரிதப்படுத்தியுள்ளனர். இவர்களில் நயினார் நாகேந்திரன், நரேந்திரன் ஆகியோர் வேகமாக இருக்கிறார்கள். அதேநேரம் டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு நேற்று இன்னொரு சிக்னல் காட்டப்பட்டிருக்கிறது.

சத்குரு ஜகி வாசுதேவ் காவேரி கூக்குரல் என்ற பயணத்தை கர்நாடகம் முதல் தமிழகம் வரை நடத்துகிறார். நேற்று அவரது பயணம், தமிழகத்தில் தொடங்கியது. ஓசூர் அதியமான் கல்லூரியில் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தின் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளரும் கிருஷ்ணகிரி எம்.பி.யுமான செல்லகுமார் கலந்துகொண்டார். அதிமுக சார்பில் தம்பிதுரை கலந்துகொண்டார். பாஜக சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று ஈஷா சார்பில் பாஜக தலைமையிடம் கேட்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு யாரை பாஜக மேலிடம் பிரதிநிதியாக அனுப்புமோ என்று எதிர்பார்ப்பு மிகுந்த நிலையில், தமிழக பாஜக தலைவராகலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் தேசிய இளைஞரணித் துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தத்தையே காவேரி கூக்குரல் நிகழ்ச்சியின் தமிழக பாஜக பிரதிநிதியாக அனுப்பி வைத்திருக்கிறது பாஜக. இதுவே ஒரு சிக்னல்தான் என்கிறார்கள்

மோடியின் பிறந்தநாளுக்குள் தமிழக பாஜக தலைவரை நியமித்து தமிழகத்தில் மோடி பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பது அக்கட்சியின் திட்டம் என்கிறார்கள். ஏன் தாமதம் என்று விசாரிக்கையில் ஏ.பி.முருகானந்தம் பெயர் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், அவரது தேசிய இளைஞரணி துணைத் தலைவர், தேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆகிய முக்கியமான பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்ற ஆலோசனை டெல்லியில் நடந்துகொண்டிருப்பதாகவும் அதனாலேயே அறிவிப்பில் தாமதம் என்று சொல்கிறார்கள் பாஜகவின் ஒரு தரப்பில். ஆனாலும் இந்தத் தாமதத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி தலைவர் பதவிக்கான ரேஸில் இன்னும் சிலர் கடைசி வரை நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வியாழன் 12 செப் 2019