மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

வெள்ளை அறிக்கை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

வெள்ளை அறிக்கை: ஸ்டாலினுக்கு எடப்பாடி பதில்!

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் தனது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தமிழகம் திரும்பினார். முதல்வரின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் என விமர்சனம் செய்தார். வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் இரண்டு நாட்களுக்குள் தமிழக மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார்.

இந்த நிலையில் சேலத்தில் நேற்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. எத்தனை முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. ஸ்டாலின் சொல்வது அனைத்தும் பொய்யான தகவல்கள். திமுக ஆட்சியில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பில்தான் தொழில் முதலீடுகள் வந்தன. ஆனால், அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில், ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. அதில், 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டின் மூலம் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 29 தொழில்கள் தொடங்கப்பட்டுவிட்டன. ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் மூன்று ஆண்டுகளாவது ஆகும். அது தெரியாமல் ஸ்டாலின் விமர்சனம் செய்துவருகிறார். நான் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் அரசைக் குறைசொல்வதுதான் ஸ்டாலினின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

“வெளிநாட்டுப் பயணத்தின்போது அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் 35,520 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்று குறிப்பிட்ட முதல்வர், ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருவதாகவும், உலக நாடுகளுக்குச் சென்று பார்வையிட்டால்தான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

பாராட்டு விழா குறித்த கேள்விக்கு, “ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என்பதால்தான் அரசு செயல்படுகிறதா என்ன? அவர் அரசை விமர்சனம் செய்யாமல் இருந்தாலே அது பாராட்டு போன்றதுதான். ஒரு தொழிலை உடனடியாக தொடங்கிவிட முடியாது என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். ஆனாலும் அவருக்குப் பாராட்ட மனமில்லை. குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின்” எனப் பதிலளித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019