மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் பலி!

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் பலி!

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது சாலை அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் இன்று மதியம் பள்ளிக்கரணை பகுதியில் காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் போகும் பாதையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் இவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் படுகாயமடைந்திருக்கிறார். இந்த கோர சம்பவத்தை அடுத்து, உயிருக்குப் போராடிய நிலையில் சுபஸ்ரீ அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலன் இன்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். குடும்பத்துக்கு ஒரே பெண்ணான சுபஸ்ரீ பி.டெக் படிப்பு முடித்திருப்பதாகத் தெரிகிறது, மேற்படிப்புக்காக கனடா செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு திரும்பும் போது தான் இந்த கோரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் மகனின் திருமணத்துக்காக பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் பல பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பேனரில் ஒன்று விழுந்துதான் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேனர் விழுந்து 23 வயது பெண் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது அதிமுக முன்னாள் கவுன்சிலரின் திருமணத்துக்குப் பேனர் வைக்க யார் அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆளும்கட்சியே அதிக பேனர் வைக்கிறது

சட்டவிரோதமாகப் பேனர் வைப்பதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது, ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறியும் பேனர்கள் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார், இதுதொடர்பான வழக்கைக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் சென்னையில் ஆளுங்கட்சியினர்தான் அதிகளவு சட்டவிரோதமாகப் பேனர் வைப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது. மேலும் சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தவிர்க்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் திருப்தியில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் திருமணத்துக்கு வைக்கப்பட்ட பேனரால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019