மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

அபராதம்: போலீஸ் டார்கெட் - வாகன ஓட்டிகள் அவதி!

அபராதம்: போலீஸ் டார்கெட் - வாகன ஓட்டிகள் அவதி!

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகம் முழுக்க கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் போலீசார் இரவும் பகலுமாக சாலையில் நின்றுகொண்டு மோட்டார் வாகன வழக்குகளை பதிவுசெய்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் செய்து வருகிறார்கள். லைசென்ஸ், ஹெல்மெட், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், சீட் பெல்ட் போடாமல் கார் ஓட்டுபவர்கள் என சாலை விதிகளை கடைப்பிடிக்காத அனைவரையும் வழியில் தடுத்து சம்பவ இடத்திலேயே மின்னணு இயந்திரம் மூலமாகவும், நேரடியாகவும் அபராதம் விதித்து பணத்தை வசூல் செய்கிறார்கள்.

மாவட்டத்தில் ஒருநாள் வசூலாகும் அபராத விவரங்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுகிறது. தினந்தோறும் அபராதம் விதிக்கப்படுவதால் எப்போது நமது வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சத்துடனேயே வாகன ஓட்டிகள் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பண்ருட்டியைச் சேர்ந்த வெற்றிவேலன். “நான் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். திருமணத்திற்கு நகை எடுக்க பண்ருட்டியிலிருந்து கடலூர் திருப்பாதிரிபுலியூர் சென்றேன். பண்ருட்டியில் ஓர் இடத்தில் தடுத்து வழக்கு போட்டு அபராதம் விதித்தார்கள். அங்கிருந்து கடலூர் செல்லும் வழியில் நெல்லிக்குப்பம் லிமிட்டில் ஒரு வழக்கு. அதைத் தாண்டி கடலூருக்குள் நுழைந்ததும் புதுநகர் காவல்நிலையம் லிமிட்டில் ஒரு வழக்கு. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் லிமிட்டில் ஒரு வழக்கு. இப்படியாக பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் 25 கிலோமீட்டர் தூரத்திற்குள் நான்கு வழக்கு போட்டுவிட்டார்கள். இப்படி செய்தால் வாகன ஓட்டிகள் எப்படி நிம்மதியாக வாகனங்கள் ஓட்ட முடியும்” என்று ஆதங்கப்பட்டார்.

அதேவேளையில் காவல் துறையினரின் பாடும் திண்டாட்டம்தான் என்கிறார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சப்-இன்ஸ்பெக்டர்கள், எஸ்எஸ்ஐக்கள், தலைமைக் காவலர்கள் அனைவருக்கும் ஏரியா பிரிக்கப்பட்டு யார் யார் எத்தனை வழக்குகளை போட வேண்டும் என்று பிரித்துக்கொண்டு பரிதாபமாகத் திரிகிறார்கள். டார்கெட்டை முடிக்க வேண்டும் என்பதற்காகப் பொதுமக்களின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டியிருப்பதாகக் கூறுகிறார் காவலர் ஒருவர்.

டார்கெட் எப்படி முடிவு செய்யப்படுகிறது என்ற விசாரித்தோம். இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல் அதிகாரிகள், “காவல் துறை ரீதியாக மாநகரங்கள் உள்பட 37 மாவட்டங்கள் கணக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களும் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 3,000 வழக்குகள் போட்டு அபராத தொகை வசூலித்து அதுகுறித்த தகவல்களை அன்றாடம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அந்தத் தொகை டிஜிபி அலுவலகம் மூலமாக அரசின் கருவூலத்திற்குச் சென்று சேரும்” என்கிறார்கள்.

மேலும், “ஒரு மாவட்டத்திற்கு 3,000 மோட்டார் வாகன வழக்குகள் டார்கெட் என வைத்துக்கொள்வோம். 37 காவல் துறை மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 11 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். ஒரு வழக்குக்கு சராசரி 300 ரூபாய் என்றால்கூட நாள் ஒன்றுக்கு 3 கோடியே 33 லட்சம் ரூபாய் அபராதமாகவே வசூல் செய்யப்படும். இப்படியாகக் காவல் துறையின் மூலம் மாதம்தோறும் சராசரி நூறு கோடி ரூபாய் வரை அபராதம் என்ற பெயரில் வசூல் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும்” என்றும் கூறுகிறார்கள்.

தமிழக அரசுக்கு வருவாய், பத்திரப் பதிவு மற்றும் வணிகவரி உள்ளிட்ட துறைகள் மூலமாகத்தான் அதிகமான வருவாய் வந்துகொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு வணிகவரித் துறை மூலமாகக் கிடைத்த வருவாயும் பெருமளவில் தடைபட்டது. போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது

தற்போது டாஸ்மாக் மூலமாகவும் வருவாய்த் துறை மூலமாகவும் மட்டும் வருமானம் வருகிறது. காவல் துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துக் கழகம் ஆகியவை சேவைத் துறைகளாகச் செயல்பட்டு வருவதால் அதிலிருந்து வருவாயை எதிர்பார்க்க முடியாது. இந்த நிலையில்தான் அபராதம் மூலமாகக் காவல் துறையிலிருந்து அரசுக்கு வருமானம் செல்வதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 12 செப் 2019