மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 செப் 2019

தமிழ்நாட்டுக்கே 370 சட்டப் பிரிவு வேண்டும்: சீர்காழியில் தொடங்கும் போராட்டம்!

தமிழ்நாட்டுக்கே 370 சட்டப் பிரிவு வேண்டும்:  சீர்காழியில் தொடங்கும் போராட்டம்!

சீர்காழி என்றதும் நமக்கு சட்டென நினைவுக்கு வருவது அந்த மண்ணின் கணீர் குரலுக்குரிய, சீர்காழி கோவிந்தராஜன் தான். இன்னும் பலருக்கும் சீர்காழியைச் சுற்றியுள்ள கோயில்கள்தான் நினைவுக்கு வரும்

ஆனால், சீர்காழி வர்த்தகர் நல சங்க தலைவர் கோபு வெளியிட்டிருக்கும் துண்டுப்பிரசுர, விளம்பர அறிக்கையைப் பார்த்தால் சீர்காழியின் கண்ணீர்தான் கண் முன் வருகிறது.

அந்த விளம்பரம் இதுதான்...

’சீர்காழி நகரில் அடகு வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்த மார்வாடிகள் மற்றும் வெளிமாநிலத்தவர் இன்று அனைத்து தொழில்களிலும் ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், மின் பொருட்கள், உணவுத் தொழில், கல்வி நிலையங்கள், நிதி நிறுவனம், விவசாய நிலம் வாங்குதல் என அனைத்து தொழில்களிலும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டனர். இனியும் இவர்களை நாம் அனுமதித்தோம் என்றால் நம் நில இழப்பு என்பது தாயக இழப்பாகும். எனவே நம் மண்ணை விட்டு அகலும் நிலை ஏற்படும்..

மேலும் சீர்காழி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காத்திட சீர்காழி நகரில் வெளிமாநிலத்தாருக்கு கடையோ, வீடோ, விற்பனைக்கோ, வாடகைக்கோ கொடுக்கமாட்டோம் என்று சீர்காழி நகர பகுதி மக்களும், சீர்காழி வர்த்தகர் நல சங்கமும் உறுதியேற்போம். மேலும் வெளிமாநிலத்தார் கடைகளிலும் நிறுவனங்களிலும் நம் மக்கள் எந்த வித வர்த்தகமும் செய்ய மாட்டோம் என்றும் உறுதியேற்போம்” என்று சீர்காழி முழுதும் விளம்பரம் செய்து வருகிறார் கோபு.

இந்த விளம்பரத்தைக் கண்டு அதிர்ந்து போன நாம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பில் கோபுவிடம் பேசினோம்.

“நாங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல்தான் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறோம். சீர்காழியில் தமிழ் வர்த்தகர்கள் எந்த தொழிலையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக மின்பொருட்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை எல்லாம் அவர்கள் வேறு எங்கிருந்தோ வாங்கிவந்து மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு வழங்குகிறார்கள்.இதனால் நம்மூர் மெக்கானிக்குகளே அவர்களிடம்தான் போய் சரக்கு வாங்குகிறார்கள். வட இந்தியர்களின் ஆதிக்கத்தால் வேறு தொழில் ஏதும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கப் போன வர்த்தகர்களையும் எனக்குத் தெரியும். அதனால்தான் இனியும் தாங்க முடியாமல் இப்படி ஒரு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறோம்” என்றார்.

சீர்காழியில் வட இந்தியர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த அனுபவமுள்ள தபெதிக நாகை மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வத்திடம் பேசினோம்.

“சீர்காழியில் வட இந்தியர் ஆதிக்கத்தை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். சீர்காழி தாலுகாவில் மார்வாடிகள் மட்டுமே 300 குடும்பங்கள் இருக்கின்றன. இது தவிர தொழிலாளர்கள் குடும்பங்கள் 200 உள்ளன. தொழிலுக்காக வந்த அவர்கள் இப்போது, சீர்காழி தாலுகாவில் சுபம் வித்யாயலா பள்ளிக் கூடம் திறந்துவிட்டார்கள். அடகு பிடிக்கப்பட்டு தமிழர்களால் மீட்க முடியாத விவசாய நிலங்களில் அவர்களே விவசாயமும் செய்து வருகிறார்கள். சீர்காழியில் தமிழர்கள் சிறுபான்மையினராகி வருகின்றனர். .

ஏழெட்டு வருடம் முன்பு வாய்க்கால் கரை தெரு என்பதை ஜெயின் தெரு என்று மாற்றினார்கள். அதன் பின் போராட்டம் நடத்தியதும் பழைய பெயரையே சூட்டினார்கள். இதே நிலை தொடர்ந்தால் சீர்காழியின் பெயரையும் விரைவில் மாற்றிவிடுவார்கள். இங்கே இருக்கும் விக்ரமராஜா தலைமையிலான வர்த்தகர் சங்கம் வட இந்தியர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. வெள்ளையன் தலைமையிலான வர்த்தகர் நல சங்கம் அவர்களை எதிர்த்துப் போராடுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கும் 370 சட்டப் பிரிவு வேண்டும் என்பதைத்தான் சீர்காழியில் இப்போது நடக்கிற சம்பவங்கள் சொல்கின்றன” என்கிறார் பெரியார் செல்வம்.

ஆரா

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வியாழன் 12 செப் 2019