மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பதற்றம்!

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் பதற்றம்!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, அவரின் மகன் நரா லோகேஷ் ஆகியோர் இன்று(செப்டம்பர் 11) காலை முதல் திடீரென வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியால் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி இன்று(செப்டம்பர் 11) மிகப் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்து 100 நாட்களைக் கொண்டாட இருக்கும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 8 பேர் பல்வேறு இடங்களில் கொல்லப்பட்டதாகவும், பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாகவும் சந்திரபாபு நாயுடு கட்சி குற்றம் சாட்டியது. மேலும், சுமார் 500 கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் கூறப்படுகிறது.

இதனால், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி இன்று உண்ணாவிரதப் போராட்டமும், ‘சலோ ஆத்மகூர்’ என்ற தலைப்பில் பேரணியும் நடத்த முடிவு செய்தது.

இதையொட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான முந்தைய அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், இன்று எதிர் அணிவகுப்பை நடத்த திட்டமிட்டது. வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆத்மகூர் மாவட்டம் மற்றும் பல்நாடு பிராந்தியத்தில் உள்ள மக்கள், முன் வந்து தங்கள் புகார்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஆளும் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதற்கு முந்தைய ஆட்சியில், தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் மீது தவறான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் ஆளும் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் முதலமைச்சரும், ஆளும் முதலமைச்சரும் அமராவதியிலிருந்து 240 கி.மீ தூரத்தில் உள்ள ஆத்மகூருக்கு இன்று காலை அணிவகுப்பு நடத்த கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலவத் தொடங்கியது.

இந்நிலையில், திட்டமிட்டபடி பேரணி நடத்த தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு மாவட்டங்களில் திரண்டனர். ஆனால் குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரா லோகேஷ் உண்டவள்ளியில் உள்ள தனது வீட்டிற்கு அருகே நடந்த போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவையும், அவரது மகன் நரா லோகேஷ் ஆகியோரையும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் வீட்டு முன்வாசல் கதவையும் போலீசார் அடைத்துள்ளனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீஸாரின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில், “இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல், ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டால் அடக்குமுறையை அரசு பயன்படுத்துகிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரின் அட்டூழியத்தை போலீஸார் கண்டுகொள்வதில்லை, ஆனால் தெலுங்கு தேசம் கட்சியினரை அடக்குகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நரா லோகேஷ் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.விற்கு அளித்த பேட்டியில், "ஆந்திராவின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எங்கள் தெலுங்கு தேசக் கட்சியின் கழுத்தை நெரிக்க முயற்சிக்கிறது. நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை ஜனநாயக முறையில் செய்து கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் முழு தலைமையும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தின் மீதான கொலை. இது சர்வாதிகாரம். தெலுங்கு தேசக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். காவல்துறை எங்கள் பக்கம் இருப்பதாகக் கூறி ஒய்எஸ்ஆர் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் எங்களை வெளிப்படையாக மிரட்டுகிறார்கள்” எனக் கூறினார்.

வன்முறையைத் தூண்டுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடு ஒரு தவறான கதையை உருவாக்குவதன் மூலம் ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் பதட்டம் நிலவுகின்றது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 11 செப் 2019