மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

பொன்முடி குடும்ப போட்டோ: திமுக எம்.எல்.ஏ தீர்மானம்

பொன்முடி குடும்ப போட்டோ: திமுக எம்.எல்.ஏ தீர்மானம்

திமுக நிகழ்ச்சிகள், நிர்வாகிகளின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது புகைப்படங்கள் தவிர வேறு யார் படங்களும் இடம்பெறக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் ஒரு திமுக எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற திமுக உறுப்பினரான வசந்தம் க.கார்த்திகேயன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது தொகுதி திமுக நிர்வாகிகள், தொண்டர்களைக் கூட்டி செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த வகையில் நேற்று (செப்டம்பர் 10) காலை வாணாபுரம் கூட்டுச் சாலை லட்சுமி திருமண மண்டபத்தில் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலையில் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் பக்கத்து மாவட்டமான விழுப்புரத்திலிருந்து அதிகபட்ச திமுக தொண்டர்களைக் கலந்துகொள்ள வைப்பது பற்றி ஆலோசிக்கத்தான் இந்தக் கூட்டம் என்றாலும், இந்தக் கூட்டத்தில் வேறு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

செப்டம்பர் 14ஆம் தேதி தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100-க்கும் மேற்பட்ட புதிய இளைஞர்களை உறுப்பினர்களாக, இளைஞரணியில் சேர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்னொரு முக்கியமான தீர்மானம், கழக நிகழ்ச்சிகள் கழக நிர்வாகிகளின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு அச்சிடப்படும் அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவற்றில் கலைஞர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களின் புகைப்படங்களைத் தவிர்த்து மற்றவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என ஊராட்சி கழகங்களுக்கு அறிவுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட்டும் கூட்டத்தில் இப்படி ஒரு தீர்மானம் ஏன் என திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“வசந்தம் கார்த்திகேயன் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடிக்கும் இவருக்கும் அவ்வளவாக ஆகாது. இப்போது ரிஷிவந்தியம் தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதி. ஆரம்பக் காலங்களில் விழுப்புரம் திமுகவில் பொன்முடி கோலோச்சியபோது மாவட்டத்தில் திமுகவினரின் வீட்டு நிகழ்ச்சி எது நடந்தாலும் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகியோரின் படம் போட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. சமீப ஆண்டுகளாக அது குறைந்திருந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்.பி.யாக கௌதகசிகாமணி நின்று வென்றதிலிருந்து மீண்டும் பழையபடி பொன்முடி, விசாலாட்சி, கூடவே கௌதமசிகாமணி ஆகியோரது போட்டோக்கள் திமுகவினரின் இல்ல நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் இடம்பெற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு நெருக்கடி தரப்பட்டது. கௌதமசிகாமணியின் எம்.பி அலுவலகத்தைக் கூட அவரது அம்மா விசாலாட்சி பொன்முடிதான் திறந்து வைத்தார். இதன் மூலம் மீண்டும் பழைய பொன்முடி குடும்ப ஆட்சி மாவட்டத் திமுகவில் தொடங்கிவிட்டதாகவே பேச்சு எழுந்தது.

இதனால் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, பொன்முடி, விசாலாட்சி பொன்முடி, கௌதமசிகாமணி என்று ஆறு பேர்களின் படங்கள் போட்டு அச்சடிக்க வேண்டியதாகிறது. இதைக் குறிப்பிட்டு வசந்தம் கார்த்திகேயனிடம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக நிர்வாகிகள் புலம்பியுள்ளனர். இதையடுத்தே கலைஞர், ஸ்டாலின், உதயநிதி தவிர யார் படமும் போடக் கூடாது என்று தைரியமாகத் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன். இந்தத் தீர்மானத்தின் உண்மையான அர்த்தம் யாரும் பொன்முடி, கௌதமசிகாமணி, விசாலாட்சி பொன்முடி ஆகியோரின் படங்களை அழைப்பிதழ்களில் போடக் கூடாது என்பதுதான். புதிதாக அறிவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக வசந்தம் கார்த்திகேயன் அறிவிக்கப்படலாம் என்ற பேச்சுக்கான முன்னோட்டமாகவே இந்தத் தீர்மானம் பார்க்கப்படுகிறது” என்று விளக்கம் கொடுத்தனர்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019