மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

ஐ.நா: இந்தியா-பாகிஸ்தான் வார்த்தைப் போர்!

ஐ.நா: இந்தியா-பாகிஸ்தான் வார்த்தைப் போர்!

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தான் கூறியதையடுத்து, இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்ட அந்தஸ்தை(ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35A)மத்திய அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் அரசு அமெரிக்கா, சீனா போன்ற உலக நாடுகளிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆதரவு திரட்டி வருகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய தான் முன்வருவதாக கூறியிருந்தார். தொலைபேசியிலும் பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரிடம் இது குறித்து டிரம்ப் கலந்துரையாடினார். ஆகஸ்ட் 26ஆம் தேதி பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இது குறித்து டிரம்ப் மோடியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஆனால், துவக்கத்திலிருந்தே இந்தியா, காஷ்மீர் ஒரு இருதரப்பு(இந்தியா-பாகிஸ்தான்) பிரச்சினை என்றும், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் வேறு எந்த நாட்டையும் தொந்தரவு செய்ய இந்தியா விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவருகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் 42வது அமர்வு ஜெனிவாவில் திங்களன்று(செப்டம்பர் 9) துவங்கியது. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷேல் பேச்சிலெட் அவர்கள் காஷ்மீர் விவகாரம் பற்றி துவக்க நிகழ்வில் குறிப்பிடும் போது,“காஷ்மீர் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்து ஐ.நா சபையில் பாகிஸ்தான்

நேற்று(செப்டம்பர் 10) ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி, "காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஒரு தோற்றத்தை அளிக்க இந்தியா முயற்சித்து வருகிறது. ஆனால், அப்படி இயல்புநிலை திரும்பி இருந்தால், அரசு சாரா அமைப்புகளை, சர்வதேச ஊடகங்களை அங்கு அனுமதிக்க வேண்டியதுதானே?இதிலிருந்தே இந்தியா பொய் கூறுவது தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் போது, உண்மை வெளி உலகிற்குத் தெரிய வரும்.

இன்று(செப்டம்பர் 10), மனித உரிமைகள் தொடர்பான உலக மனசாட்சியின் களஞ்சியமான மனித உரிமைகள் பேரவையின் கதவுகளைத் தட்டுகிறேன். காஷ்மீர் மக்களுக்கு நீதி மற்றும் மரியாதையை கோருகிறேன்" என்று அவர் கூறினார்.

மேலும் ஷா மஹமூத் குரேஷி இந்தியாவை உடனடியாக ‘பெல்லட் குண்டுகளின் பயன்பாட்டை நிறுத்தவும், ஊரடங்கு உத்தரவை மாற்றியமைக்கவும், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தகவல்தொடர்பு இருட்டடிப்பை மாற்றியமைக்கவும், அடிப்படை உரிமையை சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும், மனித உரிமை பாதுகாவலர்களை குறிவைத்து தாக்குவதை நிறுத்தவும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் சர்வதேச சட்டப்படி இந்தியா மனித உரிமைகளின் கீழ் செயல்படவும்’ வலியுறுத்தினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த குரேஷி, ஜம்மு-காஷ்மீரை ஒரு “இந்திய மாநிலம்” என்று கூறினார். பாகிஸ்தான் இதுவரை ஜம்மு-காஷ்மீரை “இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர்” என்று தான் குறிப்பிட்டு வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த பதில்

ஐ,நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் ,"பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிற சட்டங்களைப் போலவே இந்த இறையாண்மை முடிவும் முற்றிலும் இந்தியாவுக்கு உட்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். எந்தவொரு நாடும் அதன் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஏற்காது. நிச்சயமாக இந்தியா அதற்கு இடம் அளிக்காது.

பயங்கரவாதத்தால் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய நேரமிது.

இந்த நடவடிக்கைகள் பாலின பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும். குழந்தைகளுக்கான உரிமைகளை பெற்றுத் தரும். மேலும், சமூக நீதி, கல்வி, தகவல் மற்றும் வேலைக்கான உரிமைகளை வழங்கும்” எனக் கூறியுள்ளர்.

மேலும் விஜய் தாகூர் சிங் "உண்மையில் அவர்கள்(பாகிஸ்தானை குறிப்பிடாமல்) குற்றவாளிகளாக இருக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அழுகிறார்கள்" என்று கூறினார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019