மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 5

சிறப்புக் கட்டுரை: காட்டுவாசிகளிடம் கற்றவை - 5

நரேஷ்

“உடைமைகள் பொதுவாக இருக்கும் அமைப்புதான் பழங்குடிகளின் வாழ்வியல். உடைமைகள் பொதுவாக இருக்கும் வரை இயற்கைக்கு கேடில்லை.” - வி.பி.குணசேகரன்.

‘உடைமை’களை ஆதாரமாகக் கொண்டுதான் ‘போர்’கள் உருவாகின. உடைமைகளின்மீது பற்றுக்கொண்டுதான் பிரிவினைகள் வேர்விட்டன. காரல் மார்க்ஸைத் தொடர்ந்து மார்க்ஸிம் கார்க்கி, லிங்கன், லெனின் வரை உடைமைகளின் மீதான பற்றுதலின் விளைவுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்கள். தாய்வழி சமூகத்தில் உடைமை என்ற கருத்துக்குப் பொருளில்லை. எல்லாமும் எல்லோருக்கும் பொதுவாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் குடியேறிய பகுதியில் பொதுவான நிலத்தைத் தேர்ந்தெடுத்து விவசாயம் செய்வார்கள். விளைச்சல்களை மொத்த இனக்குழுவும் பகிர்ந்துகொள்ளும். அந்தக் குடியிருப்புக்கான பொது கொள்கலனில் உணவு உற்பத்திப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். வேட்டையாடும்போதுகூட குழுவாகக் காட்டுக்குள் சென்று, கிடைக்கும் உணவு, பொது மாடத்தில் வைத்து பங்கிட்டு உண்டு வாழ்ந்தவர்கள் தாய்வழி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த அறத்தொடர்ச் சங்கிலியின் கடைசி எச்சங்களாக நிற்பவர்கள் பழங்குடிகள். உடைமையின் மீது பற்றில்லாமல், பொதுவான நில, நீர் வளங்களுடன் இனக்குழுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாம் சென்றடைந்த விளாங்கொம்பையும் விதிவிலக்கல்ல. அங்கே கனியும் ஒவ்வொரு சீதாப்பழமும் அவ்வூரின் அனைத்து குழந்தைகளுக்குமானது. அங்கே சொட்டும் ஒவ்வொரு துளி நீரும் இன்னப்பிற உயிரினங்களைச் சேர்த்து எல்லோருக்குமானது. எனவே இடங்களையும் வளங்களையும் சுத்தமாக வைத்திருப்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள் இப்பழங்குடிகள்.

“இந்த ஆத்துத் தண்ணிய நம்ம மட்டுமா குடிக்கிறோம்? ஆணை, பிலி, மானு, மட்டனு எல்லாமும் குடிக்குது. அப்போ அதை சுத்தமா வெச்சிகோனுமில்ல? சுத்தமாயில்லீனா எப்பிடி குடிக்குறது? கீழ பாரு டிச்சா (சாக்கடை) ஓடுது. அதுக்குப் பக்கத்துலையே தண்ணி புடிச்சுக்கிறீங்க. வீட்டு வாசல்லையே டிச்சா ஓடுது. அப்புறம் நோய்நொடி வராம என்ன செய்யும்? எவ்ளோ பேசுறீங்க? ஓர் ஆத்தை சுத்தமா வெச்சுக்க முடியுதா? ஆனா, இங்க பாருங்க. எவ்ளோ சுத்தமா இருக்கு.. அங்குன இங்குன எல்லாம் குப்பை போட மாட்டோம். சுத்தமா இல்லன்னா சாப்பிடவே மாட்டோம். நீங்க குப்பையும் போட்டுட்டு, அதனால நோவு வந்தா ஆஸ்பத்திரிக்கும் போயிட்டிருக்கீங்க. நம்ம சுத்தமா இருந்தா ஆஸ்பத்திரி எதுக்கு? நாங்கென்ன தெனோம் ரெண்டு மாத்தரை போட்டுக்குட்டா சோறு உங்குறோம்? காட்டுல கிடைக்கிறதத்தான் உங்குறோம். ஆத்து தண்ணியத்தான் குடிக்கிறோம். நீங்கதான் ஃபில்டரு, அது இதுன்னு சுத்தம் பண்ணி தண்ணி குடிக்கிறீங்க. ஆனா, ஏன் நோவு வருது? எந்த தண்ணிய குடிக்கிறோம்ங்கறது முக்கியமில்ல. சுத்தியிருக்க எடத்தை எப்படி வெச்சிருக்கோம்ங்கிறதுதான் முக்கியம்” என்றார் லட்சுமி.

‘வழிச்சலுக்கு நேரமாச்சு’ என்றவர் சாணியும் குடமுமாக வீட்டுக்குள் சென்றார். எல்லா திங்கட்கிழமையும் அவர்களுக்குத் தூய்மைக்கான நாள். தினமும் இல்லத்தை இலைதழை இல்லாமல் சுத்தமாகக் கூட்டிவிடுகிறார்கள். வாரத்தின் எல்லா திங்கட்கிழமைகளிலும் வீட்டையும் வீட்டின் முற்றத்தையும் சாணி கொண்டு மொழுகி விடுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளும் திங்கட்கிழமைகளில் குளிப்பாட்டப்படும். மேலும், திங்கட்கிழமைதோறும் வயல்வெளிகளில் ஊர் மக்கள் ஒன்றுகூடி வேலை செய்வார்கள். விதைத்திருந்தால் களை எடுப்பார்கள். வளர்ந்திருந்தால் வாய்க்கா எடுப்பார்கள். நிலம் பொதுவானது என்பதால், பேதமின்றி அனைவரும் உழைப்பைச் செலுத்துவார்கள்.

ஆனால், கடந்த மூன்று வருடங்களாக விளாங்கொம்பை மக்கள் விவசாயம் செய்யவில்லை. பருவநிலை மாற்றம் மிகப்பெரிய காரணம் என்றாலும், காடுகளின் பரப்பளவுச் சுருக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரிய உயிரினங்களின் சூழ் வருகை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களின் ஓரங்களில் இருக்கும் காடுகள் அதீத வேகத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன. கிராம மக்கள் விவசாயத்துக்காகக் காடுகளை அழிக்கிறார்கள். நகர மக்கள் வீடுகளுக்காகக் காடுகளை அழிக்கிறார்கள். அப்படியான தவறுகளை மின்வேலியிட்டு பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதனால் பாதை மாறிவிடும் பெரிய விலங்குகள், பாதுகாப்பற்ற பழங்குடிகளின் நிலங்களையும் வளங்களையும் விழுங்கிவிடுகின்றன.

விளாங்கொம்பைக்கும் இதே விதிதான். மூன்று வருடங்கள் விவசாயம் செய்யாமல் விடப்பட்ட பொது நிலம், மனத்தாலும் தன்மையாலும் இறுகிவிட்டது. பண்பட்ட நிலத்தில் கால்நடைகளைக்கொண்டு உழுது பயிர் செய்யலாம். பண்படாத நிலத்தை மனித உழைப்பைச் செலுத்தி மீட்டுவிடலாம். பண்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்த நிலம் கைவிடப்பட்டால், அதன் இறுக்கத்தைத் தளர்த்த இயந்திரங்கள் தேவைப்படுகிறது.

“மழை பொய்ச்சு போனதால மூணு வருஷமா விவசாயம் செய்யல. மண்ணு இறுகிடுச்சி. இந்த வருஷம்தான் மழை நல்லா எட்டிப்பாக்குது. ஒரு ரெண்டு உழவு பெய்யுற சமயத்துல, யாராவது ஏதாவது டிராக்டர் கொண்டாந்து ஒரு தடவ உழுது குடுத்தா நல்லா இருக்கும். அடுத்த முறையிலிருந்து கெட்டியா பாத்துப் புடிச்சுக்கிறோம். படம் புடிக்க பேட்டியெடுக்க வர்றவுங்க இதுக்கு எதுனா தோது பண்ணி குடுத்தா புண்ணியமா இருக்கும்!” என்ற ஊர் மூதாட்டியின் குரல், ஒட்டுமொத்த ஊரின் வேண்டுதலாக இருந்தது. மழை லேசாக தூற ஆரம்பித்தது. அப்போது குழந்தைகள் பாட ஆரம்பித்தனர்..

மண்ணை நம்பி ஏலேலோ விதை இருக்கு..

ஐலசா ஐலசா..

விதைய நம்பி ஏலேலோ செடி இருக்கு..

ஐலசா ஐலசா..

(பயணம் தொடரும்...)

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019