மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

ராஜாவுடன் முதல் பயணம்: விஷால் நெகிழ்ச்சி!

ராஜாவுடன் முதல் பயணம்: விஷால் நெகிழ்ச்சி!

விஷாலின் 15 வருடத் திரைப்பயணத்தில் இளையராஜாவுடன் முதன்முறையாக துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இணைகிறார்.

2004ஆம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷால். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் வெளியான சண்டக்கோழி, திமிரு ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெற்றிபெற முன்னணி நாயகர்கள் வரிசையில் தனக்கான இடத்தை பிடிக்கத் தொடங்கினார் விஷால். தேர்ந்தெடுக்கும் மசாலா சினிமாக்கள், ரசிக்கும்படியான ஆக்‌ஷன் காட்சிகள், உயரம், நிறம் என விஷால் எளிதாக மக்கள் மனத்தில் இடம்பெற்றார். மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்தமிழகப் பகுதிகளிலும் விஷாலுக்கான ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர்.

முதல் மூன்று படங்களுக்குப் பிறகு, விஷால் தேர்ந்தெடுத்த படங்கள் அவரது கேரியருக்கு வெற்றியையும், தோல்வியையும் சரி பாதி அளவிலேயே கலந்து கொடுத்துள்ளன. திருட்டி டிவிடி ஒழிப்பு, பைரசி, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என விஷால் சினிமாவையும் கடந்து அவரது செயல்பாடுகளால் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படும் நபராகவும் மாறி இருக்கிறார்.

இந்த நிலையில், நேற்றுடன் விஷால் (செப்டம்பர் 10) தனது திரைப்பயணத்தில் 15ஆவது வருடத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷெர்லாக் ஹோம்ஸ் பாதிப்பில் இயக்குநர் மிஷ்கின் எழுதிய கணியன் பூங்குன்றன் கதாபாத்திரத்தில் விஷால் துப்பறியும் நிபுணராக நடித்திருந்தார்.

விஷாலுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக நடிகர் பிரசன்னா, மனோகர் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். மற்ற கதாபாத்திரங்களில் வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், பாக்யராஜ், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தார்கள். அரோல் குரோலி இசையமைத்திருந்தார்.

இதன் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளதாக முன்னரே மிஷ்கின் அறிவித்திருந்தார். சமீபத்தில் இந்தப் படத்தின் திரைக்கதைப் பணிகள் நிறைவுற்றதையடுத்து, லொகேஷன் தேர்வு செய்யும் பணிகள் லண்டனில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தத் தருணத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார் விஷால்.

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த அற்புதமான நாளில், திரைத்துறையில் எனது 15ஆவது ஆண்டுக்குள் நுழைகிறேன். துப்பறிவாளன் 2 படத்திற்கான இசையமைப்பிற்காக இளையராஜா சாருடன் இணைந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது படத்துக்கு முதன்முறையாக ‘மேஸ்ட்ரோ’ இசையமைப்பதன் மூலம் எனது கேரியர் ஒரு முழுமையான வட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இது ஒரு நல்ல துவக்கம்” என பதிவிட்டுள்ளார்.

விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்‌ஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தப் படத்தின் ‘செகண்ட்-லுக் போஸ்டர்’ வெளியாகியது. இறுதிக் கட்டப் பணிகளில் ஆக்‌ஷன் படக்குழு இருக்கின்றது.

இதைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 தொடங்கவிருக்கிறது. முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷால் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019