மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

இரண்டு நாட்களில் பதில்: எடப்பாடிக்கு ஸ்டாலின் கெடு!

இரண்டு நாட்களில் பதில்: எடப்பாடிக்கு ஸ்டாலின் கெடு!

தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலீடுகளைக் கவருவதற்காக 13 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை தமிழகம் திரும்பினார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வெளிநாட்டுப் பயணத்தின்போது அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் 35,520க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார்.

இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை எனச் சந்தேகம் எழுப்பியுள்ள ஸ்டாலின், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தைரியம் இருந்தால், அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு - செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை என்று வெளியிடத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாகவும், தன்னுடைய சவாலை ஏற்க முதல்வர் தயாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக்கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும்” என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019