மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

ஒரு ரூபாய் இட்லி: காலத்தை வென்ற கருணை மூதாட்டி!

ஒரு ரூபாய் இட்லி: காலத்தை வென்ற கருணை மூதாட்டி!

ஸ்விக்கி, ஜொமோட்டோவில் உணவை ஆர்டர் செய்து உண்ணும் நம் காலத்தில், இன்னமும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலா பாட்டியின் பண்பை போற்றும் விதமாக, அவருக்கு வீடு வழங்கி கெளரவித்திருக்கிறது அரசு.

கோவை மாவட்டம் பேரூர் பகுதியிலுள்ள வடிவேலாம்பாளையம் கிராமம், கடந்த சில நாட்களாக கமலாத்தாள் என்ற 80 வயது பாட்டியால் பிரபலமடைந்திருக்கிறது. கூகுளில் ‘ஒரு ரூபாய்’ என தமிழில் தட்டச்சு செய்து காத்திருந்தால், ‘ஒரு ரூபாய் இட்லி, ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ என வரிசையாக கீழே கூகுளின் பரிந்துரைகள் வந்து விழுகின்றது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அரவணைப்பில், உலகில் மிக சுவையான குடிநீர் மூலங்களில் ஒன்றாக கருதப்படும் சிறுவாணியின் தூய்மையான தண்ணீரை பயன்படுத்தி, ஆட்டுக்கல்லில் அரைத்த மாவு, அம்மிக்கல்லில் அரைத்த சட்னி என சூரியன் உதிக்கும் முன்பே விறகடுப்பை பற்ற வைத்து, இட்லிகளை அவிக்கத் துவங்குகிறாள் கமலாத்தாள் பாட்டி. இன்னும் இயற்கை மாறாத பண்டைய முறைப்படி பூப்பூவாய் தயாராகும் வெண்ணிற இட்லிகளை, சாப்பிட வருபவர்களுக்கு தேக்கு இலையில் தண்ணீர் தெளித்து, திண்ணையில் அமர வைத்து பரிமாறி பசியாற்றுகிறாள் இந்த பாசமிகு பாட்டி.

மதியம் 12 மணி வரைக்கும் இட்லி ஊற்றும் பாட்டி, தன் உழைப்புக்கு வாங்குவதோ வெறும் 1 ரூபாய் தான். 30 வருடங்களுக்கு முன், ஒரு இட்லி 50 பைசாவுக்கு என விற்க துவங்கியிருக்கிறார் கமலாத்தாள். அதன் பின்னர் தேசம் எவ்வளவோ விலைவாசி ஏற்றத்தை சந்தித்தாலும், 1 ரூபாய்க்கு மேல் இந்த பாட்டி விலை ஏற்றவில்லை.

50 பைசா தற்போது பயன்பாட்டில்(அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும்) இல்லாத நிலையில், குறைந்தபட்ச செல்லும் காசான 1 ரூபாயை இந்தப் பாட்டி தன் அதிகபட்ச விலையாக நிர்ணயித்து அதிசயிக்க வைக்கிறார்.

சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில், ஒரு ரூபாய் நாணயம் எத்தனையோ மாற்றங்களை சந்தித்தாலும், இந்த பாட்டி தரத்தையும் குறைக்காமல் விலையையும் ஏற்றாமல் ஒரே சீராக தனது கடையை இயக்கி வருவது இந்த பொருளாதார மந்தநிலையிலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் தான்.

பிட்டை இட்டு சிவனுக்கே பசியாற்றிய பாட்டி

ஒரு சமயம் பாண்டிய நாட்டில் பெருமழை பெய்தது. மழை, எங்கு நோக்கினாலும் மழை. இன்று அணையில் வரும் நீருக்காக காத்திருக்கும் வைகை ஆறு, அன்று பெய்து கொண்டிருந்த மழையால் வெள்ளம் வந்து பெருக்கெடுத்து ஓடியது. கரைகள் வலுவிழக்கும் அளவுக்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது.

எனவே பாண்டிய மன்னன் ஆற்றின் கரையை செப்பனிடும் பணியை மேற்கொள்ள ஆயுத்தமானார். உடைபட்ட கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வருமாறு பாண்டிய மன்னன் உத்தரவிட்டார். அப்படியிருக்க அங்கே வந்தி எனப் பெயருடைய பிட்டு(புட்டு) விற்கும் ஒரு மூதாட்டி தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில மண்ணை சுமந்து போட்டுக் கொண்டிருந்தார். முதுமையின் தள்ளாமையால் அவரால் மண்ணை சுமக்க முடியவில்லை. எனவே சிவனிடம் வந்தி தன் நிலை குறித்து முறையிட்டார்.

வந்தியின் நிலையை கண்ட ஈசன், ஒரு கூலியாள் வடிவில் அங்கே வந்து, கிழவியின் அருகே சென்று ‘தாயே உங்களுக்கு பதில் நான் இந்த மண்ணை சுமக்கிறேன். அதற்கு பதிலாக நீ எனக்கு என்ன கூலி கொடுப்பாய்?’ எனக் கேட்கிறார். அந்த பிட்டு விற்கும் பாட்டியோ, என்னிடம் கூலியாக கொடுக்க என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் உன் பசி போக்க இந்த பிட்டினை தருகிறேன் என்று கூறினார். அதற்கு இசைந்த ஈசன், அந்த கிழவியிடம் பிட்டை வாங்கி உண்டு தன் பசியாறியவுடன் மண்ணை சுமக்க ஆற்றை நோக்கிச் சென்றார்.

சமையல் வரலாற்றில், எப்போது உணவு காசுக்காக சந்தைக்கு வந்தது என திட்டவட்டமாக ஒரு வரையறைக்குள் வரமுடியாவிட்டாலும், பிட்டுக்கு மண் சுமந்த ஈசனின் கதை/புனைவின் மூலம் அதன் தொன்மையை நம்மால் உணர முடிகிறது.

ஈசனுக்கு புட்டு விற்ற வந்தி பாட்டியைப் போல, தனது தள்ளாத வயதிலும் தன்னால் இயன்ற இட்லி விற்கும் தொழிலைச் செய்து, அதை குறைந்த விலைக்கு கொடுத்து மக்களின் பசியாற்றி வருகிறார் இந்த கமலாத்தாள்.

இன்றைக்கு உணவு என்பது நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆகப் பெரும் தொழிலாக விருத்தி அடைந்து சாமானியனின் மாத சம்பளத்தை பதம் பார்த்து வரும் காலத்தில் இந்த பாட்டியின் கதை நம்மை சிந்திக்க வைத்திருக்கிறது.

ஒரு ரூபாய் பாட்டியின் கதையால் ஆங்காங்கே சில மாற்றங்களும் ஏற்பட்டு வருகிறது. திண்டிவனத்தில் ஸ்ரீ கணபதி மெஸ் என்ற உணவகம் ஒன்று இன்று(செப்டம்பர் 11) முதல் ஆரம்பமாகி இருக்கிறது. முதல் நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் காலை மற்றும் இரவு உணவுக்கு இட்லி, வடை, பொங்கல், தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து உணவு வகைகளும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இட்லி பாட்டிக்கு கிடைத்த அங்கீகாரம்

இன்று(செப்டம்பர் 11) கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, தனது அலுவலகத்திற்கு கமலாத்தாள் பாட்டியை வரவழைத்து நேரில் பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடியின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்’ கீழ் அவருக்கு புதிய வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும், அவருக்கு தேவையான உதவிகளை வழங்கவும் தான் தயாராக உள்ளதாக கூறியிருக்கிறார்.

ஆட்சியர் எவ்வளோ கூறியும் கூட, கமலாத்தாள் உதவிகளை மறுத்திருக்கிறார். பசியை போக்கும் மனம் பசியறியாது போலும். ஆனாலும், முப்பது வருடங்களுக்கும் மேல் லாபத்தை பிரதானமாகக் கொள்ளமால், உணவை பசியை போக்கும் கருவியாக நினைத்து சேவையாற்றி வரும் கமலாத்தாளுக்கு அரசு சார்பில் உதவி செய்யப்படவுள்ளது.

ஒரு புறம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடக்கும் செயல்கள் மறுபுறம் எவ்வாறான பாசிடிவ் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கும், ஒரு நன்மை எப்படி அர்த்தமுள்ள வழிகளை ஏற்படுத்துகிறது என்பதற்கும் கமலாத்தாள் அழகிய உதாரணம்.

ஆனால், இந்த புகழ்ச்சிகள் எதற்கும் அலட்டிக் கொள்ளாத கமலாத்தாள், “கடைசி காலத்துல என்னத்த கொண்டுபோகப் போறோம். எனக்கு 1 ரூபா போதும். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். சாகுற வரைக்கும் ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன்" என ரத்தின சுருக்கமாக நமக்கு பாடம் கற்பிக்கிறாள் கருணை மூதாட்டி.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019