மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

காவேரி கூக்குரல்: காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வியும் சத்குருவின் பதிலும்!

காவேரி கூக்குரல்: காங்கிரஸ் எம்.பி.யின் கேள்வியும் சத்குருவின் பதிலும்!

காவேரிக் கரையில் 242 கோடி மரங்கள் நடப்படவேண்டும் என்ற இலட்சியத்தோடு தலைக்காவேரியில் இருந்து காவேரி கூக்குரல் என்ற பெயரில் பயணம் செய்து வரும் ஈஷா யோக மைய சத்குரு ஜகி வாசுதேவ், கர்நாடகத்தைக் கடந்து இன்று (செப்டம்பர் 11) காலை தமிழகத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறார்.

ஒசூரில் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையின் அதியமான் கல்லூரியில் காவேரி கூக்குரல் தொடக்க நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் கல்லூரி நிறுவனர் தம்பிதுரை, கிருஷ்ணகிரி எம்பி. டாக்டர் செல்லகுமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரோடு பாஜக சார்பில் தேசிய இளைஞரணித் துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லகுமார் பேசும்போது சத்குருவுக்கு சில கேள்விகளை முன் வைத்தார். சத்குரு பேசும்போது அதற்கு விளக்கமும் அளித்தார்.

செல்லகுமார் பேசுகையில், “சத்குரு முன்னணி நட்சத்திரங்களோடு பேசி பார்த்திருக்கிறேன். எவ்வகை எதிர்மறையான கேள்விகள் கேட்டாலும் அவற்றுக்கு பதில் அளிக்கும் திறமை கண்டு பிரமித்துப் போனேன். இன்று தமிழக, கர்நாடக மக்களின் ஜீவாதார பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறார் சத்குரு.

நாம் ஓசூரில் மரங்கள் வளர்ப்பதற்காக இன்று கூடியிருக்கிறோம். ஆனால் மும்பையில் இருக்கும் ஆரே ஃபாரஸ்ட் பகுதியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 646 மரங்களை வெட்டி மெட்ரோ ரயில்வே நிலைய கார் பார்க்கிங் அமைக்க முயற்சிக்கிறது அம்மாநில அரசும் மாநகராட்சியும். 8 லட்சம் மக்கள் இதை எதிர்த்து போராடுகின்றனர். இந்நிலையில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் கர்நாடக அரசு வாகன நெருக்கடிக்காக 456 மரங்களை வெட்டி இருப்புப் பாதை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டது. அதில் 200 மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் சுற்று சூழல் ஆர்வலர்களின் குரலுக்கு மதிப்பளித்து அந்த திட்டத்தையே ரத்து செய்தது அரசு” என்று பாஜக அரசுக்கும், காங்கிரஸ் அரசுக்குமான வேறுபாட்டை சுட்டிக்காட்டி அரசியல் பேசினார்.

தொடர்ந்த செல்லகுமார், “மும்பைக்கு சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கவில்லை. சத்குருவை வரவேற்கும் நிலையில் உள்ள வேதனையோடு சொல்கிறேன். இந்த எளியவனுக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. காவிரி நதிக்கரையில் மரம் நடுவதை முழுமையாக ஏற்கிறேன். கரைகளை பலப்படுத்துவதோடு மண் தண்ணீரால் அடித்து இதனால் செல்லப்படுவது தடுக்கப்படும். கரை ஓரத்தில் அத்திமரத்தை நடுவோம் என்றால் அதற்கு ஆணிவேரும் இருக்கிறது. சல்லிவேரும் இருக்கிறது. அதனால் மண்ணை இறுகப் பிடித்துக் கொள்கிறது. காவேரி கரையிலே வரிசையாக அத்தி மரத்தை நட்டால் ஒரு மரம் முப்பது அடி சுற்றளவுக்கு மண்ணைக் காப்பாற்றும் வெட்டி வேர் என்ற ஒன்றை நம்மில் பலரும் மறந்துவிட்டோம். வெட்டி வேரை கரையிலே பயிர் செய்வோம் என்றுசொன்னால், அந்த கரை எவ்வளவு காட்டாற்று வெள்ளம் வந்தாலும் தடுக்கப்படும்

நீங்கள் 242 கோடி மரங்கள். நடுவதாக சொல்கிறீர்கள். உங்கள் எண்ணத்தை மதிக்கிறேன். என் ஐயப்பாடெல்லாம், காவேரி ஓடி வருகிற கரையிலேதான் தஞ்சையிலே இரு கரையிலே நெல் விவசாயம் நடந்துகொண்டிருக்கிறது. நெல் பயிரிடுவதை விட மரம் நடுவதே வருமானம் என்றால்... அதை செய்து விவசாயத்தை விட்டுவிட மாட்டார்களா? 242 கோடி மரங்களுக்கு 42 ரூபாய் என்று ஒருலட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது. உலகம் முழுதும் பலர் உங்களுக்கு உதவுகிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்த பின், யாரோ ஒரு இலுமினாட்டி கம்பெனி, எங்கோ ஒரு செல்வந்தர் இந்த மரத்தையெல்லாம் வெட்டி எடுத்து நாளை வியாபரம் ஆக்குவதற்கு நாம் அடித்தளமாகிவிடக் கூடாதல்லவா?” என்று கேட்ட செல்லகுமார் தொடர்ந்து,

“உங்களுடைய ஒரு கூக்குரலுக்கு ஒருலட்சத்து 16 ஆயிரம் கோடி தர காத்திருக்கிறார்கள். இந்த மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை ஒன்று இருக்கிறது. ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசின் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கிறேன். 1500 கோடி ஆகும் என்று சொல்கிறார்கள். சத்குரு அவர்கள் ஒரு கண்ணசைவு காட்டினால் இந்த ரயில் பாதைக்கான 1500 கோடி ரூபாய் எளிதில் கிடைத்துவிடும்.அதற்கும் அவர் வழி செய்ய வேண்டும்” என்று முடித்தார் செல்லகுமார்.

இதன் பின் பேசிய சத்குரு, “இது இன்னொரு மரம் வைக்கும் இயக்கம் அல்ல. இதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டின் பிரச்சினை என்னவென்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பிரச்சினை என்ன, அதன் தீர்வு என்ன, அதில் நம் பங்கு என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த இருபது வருடத்தில் 3 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். லோன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று செய்திகளில் போடுகிறார்கள். அது உண்மையல்ல... மண் வளமாக இருந்தால், தேவையான நீர் இருந்தால் அவன் தற்கொலை செய்துகொள்வானா? அவனுக்குள் எவ்வளவு வேதனை இருந்தால் உயிரை மாய்த்துக் கொள்வான். இந்த 70 வருடங்களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போர்களில் இரு பக்கமும் கூட 3 லட்சம் பேர் சாகவில்லை. ஆனால் இருபது வருடத்தில் 3 லட்சம் விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.காவேரி வளையத்தில் 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சில பேர் என்னை கேட்கிறார்கள், உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று? நமக்கு உணவு கொடுப்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை விட இன்னும் வேறு என்ன நடக்க வேண்டும்?

நமக்கு நீரின் மூலம் மழைதான். கடந்த 100 ஆண்டுகளில் தோராயமாக ஒரே அளவு மழைதான் பொழிந்துள்ளது. சில வருடங்களில் குறைந்திருக்கலாம். நம் பிரச்சினை என்னவென்றால் பெய்த மழையெல்லாம் மண்ணில் இறங்காமல் மேலேயே ஓடி விடுகிறது. காவேரிக் கரையில் 80% நிலம் விவசாயிகளிடம் தான் இருக்கிறது. 16 முதல் 17% தான் அரசிடம் இருக்கிறது. விழுந்த மழை கீழ் நோக்கி இழுக்கப்பட வேண்டும். காவேரி வளையத்தில் 87% மரங்களை வெட்டியாயிற்று. அதற்காகத்தான் விவசாயிகளை நாடிச் செல்கிறேன். விவசாயிக்கு இது சூப்ப்ர் உதவி செய்கிறாது. எப்படியெல்லாம் மரம் வளர்க்க முடியும், இருக்கிற பயிர்களுக்கு மத்தியில் எப்படி மரம் வளர்க்க முடியும் என்பதையெல்லாம் நமது தன்னார்வலர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று விவசாயிகளோடு உரையாடி, சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இரு நாள் முன் டெல்லியில் நடந்த பாலைவனமாதல் மாநாட்டுக்கு நான் சென்றபோது வெளிநாட்டினரெல்லாம் காவேரி கூக்குரல் பற்றி என்னிடம் கேட்டுப் பாராட்டுகிறார்கள். அவர்களுக்குப் புரிகிறது நமக்கு ஏன் புரியவில்லை? இன்னொருத்தர் பண்ணட்டும் என்று சும்மா இருக்கிறோம். நான் அதுபோல இருக்க விரும்பவில்லை” என்று பேசினார் சத்குரு.

காங்கிரஸ் எம்பியின் கேள்விகளுக்கு விளக்கமாகவே அவரது இன்றைய உரை அமைந்தது.

கூக்குரல் என்றால் குயிலின் குரலா?

நிகழ்வில் பேசிய தம்பிதுரை, கூக்குரல் என்றால் குயிலின் குரல் என்று அர்த்தம். கூ கூ என்று குயில்தான் கூவும். அதனால்தான் சத்குரு போர்க்குரல் என்பதை விடுத்து மென்மையான கூக்குரல் என்று பெயரிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல உடையும் குயிலின் நிறம் போலவே உடுத்தியிருக்கிறார் என்று பேச கல்லூரி மாணவர்கள் தலையிலடித்துக் கொண்டார்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019