மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 செப் 2019

கிறிஸ்துவத்தில் தமிழ் இசை! - பகுதி 1

கிறிஸ்துவத்தில் தமிழ் இசை! - பகுதி 1

சென்னை வாரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தரமணி பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் சிறப்பு நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் நிவேதிதா லூயிஸ், கிறிஸ்துவத்தில் தமிழ் இசை என்னும் தலைப்பில் உரையாற்றினார். உரையின் இடையே தமிழிசைப் பாடகி ஜாஸ்மின் வில்சன் கிறிஸ்துவப் பாடல்கள் பாடினார்.

‘தமிழ் இசை என்பது தமிழ் மொழியில் இயற்றப்பட்டு, பாடப்பட்ட தமிழரின் இசையான நாட்டுப்புறப் பாடல்களும் தமிழ் பண்ணுமே', என்ற முன்னுரையுடன் நிகழ்வு தொடங்கியது. கிறிஸ்தவ மதம் தமிழ்நாட்டிற்குள் எப்பொழுது வந்தது என்ற கேள்வி, ஒரு விடை தெரியாத புதிராக மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது. மதம் சார்ந்த நம்பிக்கை என்பது வேறு; வரலாறு என்பது வேறு. வரலாறு எப்போதும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே பேசப்படும். கிறிஸ்துவம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் தமிழ் நிலப்பரப்பில் பொது ஆண்டு 9ஆம் நூற்றாண்டு முதல் தான் கிடைக்கின்றன.

பொது ஆண்டு 849ல் வாய்மொழியாக சொல்லப்பட்டவை ஆங்கிலோ சாக்சன் கிரானிக்கில்ஸ். ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தை அழிக்க வைக்கிங்குகள் படையெடுத்து வந்து தாக்கியதாகவும், அந்தப் போரில் வெற்றிபெற்ற மன்னன் ஆல்பிரடு நன்றிக்கடனாக இரண்டு தூதுவர்களிடம் இந்தியாவில் உள்ள தோமையார் சமாதிக்கு பொருள்கள் அனுப்பி வைத்ததாகவும் இந்த நாட்டுப்புறக் கதைகளில் வழிவழியாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது. வாய்வழியாக வந்த இந்தக் கதை 13ஆம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெறுகிறது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் 9ஆம் நூற்றாண்டில் தமிழக மேற்குக் கடற்கரை ஓரம் தரிசப்பள்ளி செப்புப் பட்டயங்கள் பொரிக்கப்பட்டன. தரிசப்பள்ளி என்ற கிறிஸ்துவ தேவாலயத்தை அமைத்துக்கொள்ள கேரளாவின் கொல்லம் பகுதியின் ஆட்சியாளர் ஐயன் அடிகள் சிரிய இன கிறிஸ்துவர்களின் தலைவரான மார் சபிர் இசோவுக்கு அனுமதியும் கொடையும் வழங்கியதைக் குறிக்கும் பட்டயம் அது. பஹ்லாவி, கூஃபிக் மற்றும் எபிரேய மொழியில் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட்டு உள்ளனர் சிரிய வம்சாவழியினர். கிழக்கு எபிஸ்கோபல் தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த ஆதாரம் அது. இவர்கள் தோமைக் கிறிஸ்துவர்கள் என்றும் வழங்கப்பட்டனர்.

தோமை கிறிஸ்துவர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் குழப்பமாகவே கூறப்படுகிறது. சென்னையில் தோமா மலை அதாவது செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் ஒரு தேவாலயம் இருந்தது என்ற முதல் தகவலை இத்தாலியப் பயணி மார்கோ போலோ பதிவு செய்தார். அவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் சென்னையில் வரும்போது தாமஸ் மவுன்ட்டுக்கு வந்து சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே போன்று செயின்ட் தாமஸ் தேவாலயம் மிகவும் இடிந்த நிலையில் இருப்பதாகவும், பழைமையான தேவாலயம் என்றும் பதினான்காம் நூற்றாண்டில் இங்கு வருகை தந்த துவார்த்தே பர்போஸா என்னும் போர்ச்சுகீசியரும் பதிவு செய்துள்ளார்.

ஆக ஒன்பதாம் நூற்றாண்டு முதலே இங்கு இருந்த கிறிஸ்துவ மதத்தில் வழிபாட்டுப் பாடல்கள் சிரிய சால்திய சான்ட் (மந்திரம்) போல பாடப்பட்டன. ஆவ்வாறு பாடப்பட்ட "மறையோர் பாவே" இன்றும் கேரள கினனாய கிறிஸ்துவர்கள் திருமணச் சடங்குகளில் பாடப்படுகிறது. அதே பாடல் பண் கொண்டு இன்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில தேவாலயங்களில் பாடப்படுகிறது மறையோர் பாவே. ரோமை கத்தோலிக்க மதத்தில் இசை எப்படி இருந்தது என்பது குறித்து வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். 1829ஆம் ஆண்டு அவர் எழுதிய கடிதத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இசை பலமான இசை என்று குறிப்பிட்டுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முற்காலம் வரையிலும் வலிமையான இசைக்கருவிகளே கத்தோலிக்க இசைக் கலைஞர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.தமிழ் இசை 'இறைப்பற்று' இல்லாததாகவும், தேவாலயங்களுக்குள் பாடும் செறிவற்றதாகவும் ஐரோப்பியர்களால் கருதப்பட்டு வந்தது என்று தன் "நேட்டிவ்ஸ் ஆஃப் டிரிவாங்கூர்' புத்தகத்தில் எழுதுகிறார் சாமுவேல் மடியர் என்ற மதப் பரப்புரையாளர். ஆனால், தாய்மொழியில் பாடுவது தமிழரிடையே இறைப்பற்றை அதிகரிக்கச் செய்ததைக் கண்டுகொண்ட ஐரோப்பியர், அதை வரவேற்று தேவாலயங்களில் பாட அனுமதித்தனர் என்றும் அவர் எழுதுகிறார்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமிழிசை, தேவாலயங்களின் உள்ளே வருவதற்கு அடிப்படையாக இருந்தவர் சீகன்பால்கு ஐயர். தமிழ் கற்றுணர்ந்த ஐயர், மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டார். ஜெர்மானிய லத்தின் மொழி பாடல்களை அதே 'மீட்டரில்' தமிழிலும் பாட வேண்டும் என்பதற்காக அவற்றை தமிழாக்கம் செய்தார். அவை பாமாலைகள் ஆயின. சிரிய மொழிப்பாடல்கள், அதன் பின் ஜெர்மானிய, லத்தீன் மொழிப் பாடல்கள், ஏதோ பண்ணில், சுரத்தில் இருந்தவை, குறைந்த பட்சம் தமிழில் பாடப்பட்ட முன்னெடுப்பு சீகன்பால்கு ஐயர் எடுத்ததன் காரணமாக அமைந்ததே! அதன் பின் வந்த மிஷனரிகள், மதம் மாறிய தமிழ்க் கிரிஸ்துவர்கள் என்று தன்னாட்சி தேவாலயங்களின் தாக்கம் இசையை மாற்றியமைத்தது எனலாம்.

மொழிபெயர்ப்புப் பாமாலைப் பாடல்களே பின்னாளில் வந்த கீர்த்தனை பாடல்களுக்கு அடித்தளமாக அமைந்தன. கிறிஸ்தவ மொழியில் தமிழ் இசையின் வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் ‘வீரமாமுனிவர்’ மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். பல்லவி, அனுபல்லவி, சரணம், பண் என்று முழுக்க முழுக்க தமிழிசைச் சாயலில் கீர்த்தனைப் பாடல்களை முதலில் வடிவமைத்தது இவரே. இவர் இயற்றிய "ஜகநாதா குருபரநாதா" கீர்த்தனை மிக முக்கியமான மாற்றத்தைக் கொணர்ந்தது எனலாம்.

‘கிறிஸ்துவ மதத்தில் தமிழ் இசை’ என்பது குறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் நிவேதிதா லூயிஸ் ஆற்றிய உரையின் முதல் பாகத்தின் முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 11 செப் 2019