மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!

ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி.க்கள் மோதல்!

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் எம்.பி.க்கள் கூட்டமும், சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டமும் நடத்துவது கட்சிகளின் வழக்கம். அந்தந்த கூட்டத் தொடர்களில் உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று விவாதிக்கப்படும்.

ஆனால் ஆச்சரியகரமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்து சில வாரங்கள் ஆன நிலையில், ஆகஸ்டு 29 ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் கூட்டம் அறிவாலயத்தில் நடந்திருக்கிறது.

திடீரென ஏனிந்த எம்.பி.க்கள் கூட்டம்? இந்தக் கேள்விக்கு, அக்கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

“இதுவரையில் நாடாளுமன்றத்தில் ஆற்றியிருக்கக் கூடிய பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி விவாதித்தோம். வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் பணியை மேற்கொண்டு, மக்கள் அளிக்கும் மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்” என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.

இந்த அறிவுரையை சொல்வதற்கு ஒரு கூட்டம் போடப்பட வேண்டுமா? ஸ்டாலின் வைத்திருக்கும் திமுக எம்.பி.க்கள் வாட்ஸ் அப் குரூப்பில் போட்டாலே அனைவருக்கும் சென்று சேர்ந்துவிடும். அப்படியென்றால் இதையும் தாண்டிய ஒரு சிறப்புக் காரணம், இந்த எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுவதன் பின்னால் இருந்திருக்க வேண்டும். ஆமாம், இருந்திருக்கிறது.

அண்மையில் ஸ்டாலினோடு அறிவாலயத்தில் பேசிக் கொண்டிருந்த திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “இந்திய அளவுல மூணாவது பெரிய கட்சியா பார்லிமென்ட்ல இருக்கோம். ஆனா நம்ம எம்.பி.க்களுக்குள்ள ஒத்துமையே இல்ல. இதப் பத்தி நாம பேசியாகணும்” என்று சொல்லியிருக்கிறார். மேலும், “ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கும் சேர்த்து 50 கமிட்டிகள் அமைக்கப்படும். இந்த முறை நாம தேர்டு லார்ஜஸ்டு பார்ட்டிங்குறதால பல கமிட்டிகள்ல சட்டப்படி நமக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டியிருக்கு. நம்ம கட்சிக்கு கிடைக்கும் சேர்மன் வாய்ப்புகள் யாருக்குங்கறதையும் பேசியாகணும்” என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்துதான் எம்.பி.க்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

உதயசூரியன் சின்னத்தில் நின்று 23 எம்.பி.க்கள் ஜெயித்திருந்தாலும் அதில் 4 பேர் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், மதிமுக கணேசமூர்த்தி, ஐஜேகே பாரிவேந்தர், ஏ.கே.பி. சின்ராஜ் கொமதேக ஆகிய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களா கருதப்படும் போதிலும் அவர்கள் வேறு கட்சி என்பதால் அவர்கள் நீங்கலாக 19 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். புதிதாக ஜெயித்து எம்.பி.யாகியிருக்கும் கதிர் ஆனந்ந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதேநாளில் டெல்லியில் நாடாளுமன்றம் சென்று அங்கே போட்டோக்கள் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துகொண்டிருந்தார் கதிர் ஆனந்த். மக்களவை எம்.பி.க்களோடு மாநிலங்களவை எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு சொன்னதுபோலவே திமுக எம்.பி.க்களின் ஒற்றுமையின்மையே வெளிப்பட்டது. இதுபற்றி அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.

கூட்டத்தில் காரசாரமாக விஷயங்கள் பேசப்பட்டன. எத்தனை எம்.பி.க்கள் தொகுதிக்கு நன்றி சொல்லப் போய் எத்தனை சட்டமன்றத் தொகுதிகளை முடித்திருக்கிறீர்கள் என்று ஸ்டாலின் கேட்டார். சிலரை வேகமாக நன்றி சொல்லும் பணிகளை மேற்கொள்ளும்படி கடிந்துகொண்டார்.

கூட்டத்தில் பேசிய தயாநிதிமாறன், “ஜூனியர் எம்.பிக்கள் சீனியர் எம்.பி.களை மதிப்பதே இல்லை” என்று கூற, திடீரென துரைமுருகன், “என்னது வன்னியர் எம்.பி.க்கள் யாரையும் மதிக்கறதே இல்லையா? என்னய்யா பேசுறாரு. ஜாதிப் பிரச்சினைய கெளப்புறாரா?” என்று ஆவேசமாக பேசிவிட்டார். அப்புறம்தான், “அண்ணே.. அவர் சொன்னது வன்னியர் எம்.பி.க்கள் இல்லை. ஜூனியர் எம்.பி.க்களை” என்று அவரிடம் சிலர் எடுத்துச் சொல்ல, சிரிப்போடு முடிந்தது அந்தப் பிரச்சினை.

அதன்பிறகு நாடாளுமன்ற கமிட்டி தொடர்பான ஆலோசனை நடந்தது.

கமிட்டி சேர்மனுக்கு என்று பல சலுகைகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் தனி அலுவலகம், சிறப்பு ஊழியர்கள், விமான டிக்கெட் சலுகைகள் என்று கிடைப்பதால் கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் பலரும் தங்களை சிபாரிசு செய்யும்படி பல வகைகளில் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். கட்சியின் சீனியர் எம்.பி.க்கள் என்று பார்த்தால் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், ஆ.ராசா முதலானோர் இருக்கிறார்கள். இவர்கள் கமிட்டி பதவிகளை எதிர்பார்த்துக் காய் நகர்த்தி வருகிறார்கள்.

இதுமட்டுமல்ல மக்களவை திமுக குழுவின் பொருளாளராக இப்போது பழனிமாணிக்கம் இருக்கிறார். மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளின் உறுப்பினர்களின் கூட்டுக் குழுவுக்கும் தானே பொருளாளர் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் பழனிமாணிக்கம். அந்த பதவியை ஜெகத்ரட்சகனுக்கு தரலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். அதைக் கூட்டத்தில் ஸ்டாலின் சொல்ல, பழனிமாணிக்கம் அதற்கு பதிலளித்து, “நான் தானே சீனியர். நிதியமைச்சராவும் இருந்திருக்கேன். ட்ரஷரர் பொறுப்பு என்கிட்ட இருந்தா என்ன?” என்று கேட்டிருக்கிறார். அப்போது ஜெகத்ரட்சகன் ஏதோ சொல்ல வர, அவரை நோக்கி... “ஏங்க... உங்க தொழில்ல இன்கம்டாக்ஸ் பிரச்சினை வந்தப்ப நிதித்துறை இணையமைச்சரா இருந்த நான் தானே காப்பாத்தினேன்?” என்று கேட்க ஜெகத்ரட்சகனின் முகம் மாறிவிட்டது.

உடனடியாக, “ஆமாம்... உதவி பண்ணீங்க. சொந்தக் கட்சிக்காரன்னு சும்மாவா பண்ணிக் கொடுத்தீங்க?” என்று எதிர்க்கேள்வி கேட்க, ஸ்டாலினுக்கே தர்ம சங்கடம் ஆகிவிட்டது. பழனிமாணிக்கமும் அமைதியாகிவிட்டார்.

இப்படியாக தொடர்ந்த கூட்டத்தில் நாடாளுமன்ற நிர்வாகிகள் குழு தொடர்பாகவோ, கமிட்டிகள் குழு தொடர்பாகவோ ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று கூறி முடித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஸ்டாலின், “ஒவ்வொரு எம்பி.க்களும் நேராக தொகுதிக்குப் போய் நன்றி சொல்லும் பணியில் ஈடுபட வேண்டும். விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் அப்புறம் எல்லாரும் அங்கே போக வேண்டியிருக்கும். அதனால் அவரவர் தொகுதியில் விரைவாக நன்றி சொல்லி முடியுங்கள்” என்று அறிவுறுத்திக் கூட்டத்தை முடித்தார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்!


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


“நீங்க ஸ்டேட் ஃபிகராயிட்டீங்க”- தங்கத்தை உருக்கிய ஸ்டாலின்


மாநிலக் கட்சி அந்தஸ்தை இழக்கிறதா பாமக?


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019