மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஆக 2019

விமர்சனம்: சாஹோ

விமர்சனம்: சாஹோ

விழலுக்கு இறைத்த நீர் !

பாகுபலி இமாலய வெற்றிக்குப்பின் பிரபாஸ் தேர்ந்தெடுத்த படம், 350கோடி பட்ஜெட்டில் உருவான ஆக்‌ஷன் படம் என அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது சாஹோ.

யுவி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுஜித் எழுதி இயக்கியிருக்கிறார். பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்திரா பேடி, லால், டினு ஆனந்த் என பலர் நடித்திருக்கின்றனர். பின்னணி இசையமைத்திருப்பவர் ஜிப்ரான்.

உலக கேங்க்ஸ்டர்களின் தலை நகரமான வாஜி என்ற நகரத்தின் சக்கரவர்த்தி ராய்(ஜாக்கி ஷெராஃப்). அவர் தலைமை வகிக்கும் கேங்க்ஸ்டர்களின் சிண்டிகேட் அமைப்பை, சட்டபூர்வமாக மாற்றிவிட்டு மும்பை வரும் ராய் கொல்லப்படுகிறார். இதனால் 25 ஆண்டு காலம் ரகசியமாய் வளர்க்கப்படும் ராயின் மகன் அருண் விஜய் அடுத்த சக்கரவர்த்தியாக அரியணையில் அமர்கிறார். இது தேவராஜ் எனும் முன்னாள் டானின் மகனுக்குப் பிடிக்கவில்லை.

ராய் சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தமான 2 லட்சம் கோடி ரூபாய் பணம் அந்நகரத்தின் கரூவூலத்தில் இருக்கின்றது. அது ‘பிளாக் பாக்ஸ்’ எனும் கருவி இல்லாமல் திறக்காது. அது யாரிடம் இருக்கிறதோ அவர் தான் சக்கரவர்த்தி. அந்த பிளாக் பாக்ஸ் மும்பையில் இருக்கின்றது.

வாஜி நகரம் மும்பையை நோக்குகின்றது. அண்டர் கவர் ஆபிசரான பிரபாஸ், ஷ்ரத்தா டீம் மும்பை வங்கி கொள்ளையில் ஈடுபட்டவனை(நீல் நிதின் முகேஷ்) திட்டமிட்டு நெருங்க, அவனும் இதே ‘பிளாக் பாக்ஸை’ நோக்கிப் பயணிக்கிறான். திட்டமிட்டபடி கொள்ளையனுக்கு முன் பிளாக் பாக்ஸை கைப்பற்றுகிறார் பிரபாஸ்.

ஆனால், ஒரு ட்விஸ்ட். பிரபாஸ் அண்டர் கவர் ஆபிசரில்லை, அவர் தான் கொள்ளையன்; நீல் நிதின் தான் உண்மையான ஆபிசர்; முதல் பாதி முடிகின்றது. முதல் பாதியின் கேள்விகளுக்கு விடை இரண்டாம் பாதியில்.

சாஹோ சாதித்ததா?

பெரிதாக ஏதோ ஒன்றை சொல்லப்போகிறார்கள் என எதிர்பார்ப்புடன் தொடங்கும் சாஹோ, பல குழப்பங்கள் பல திருப்பங்கள் எனப் பார்வையாளனை திக்கு முக்காட வைக்கின்றது. சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு அரியணைக்கான போர் தான் சாஹோ. அதற்கான சாவி தான் அந்த பிளாக் பாக்ஸ். ஆனால், அதற்கு பிரதானம் அளிக்காமல் கதாநாயகனை மகிமைப்படுத்துவதிலேயே நேரத்தையும் பட்ஜெட்டையும் செலவிட்டதால், நம் நேரத்தையும் பட்ஜெட்டையும் வீணடித்து விடுகிறான் சாஹோ.

சமீபத்தில் ஒரு மெகா பட்ஜெட் படம் இவ்வளவு மோசமான எழுத்துடன் வந்ததாக நினைவில்லை. ஆடை வடிவமைப்பு, அரங்க வடிவமைப்பு, கிராபிக்ஸ் என அள்ளி இறைத்திருக்கும் படக்குழு, கதைக்கும் - திரைக்கதைக்கும் அதே உழைப்பை கொடுத்திருந்தால் சாஹோ கவனம் ஈர்த்திருப்பான். ஒரு கதைக்குள் நிறைய சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், கதை சொல்லும் முறையிலேயே சிக்கல் இருந்தால், அதன் விளைவு தான் சாஹோ. ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா தொடங்கி, தூம் 2, கேம் ஆஃப் திரோன்ஸ் சீரிஸ், மேட் மேக்ஸ் ஃபூரி ரோட் என பல படங்களின் காக்டெயில்(கதையிலும், காட்சி அமைப்பிலும்) போல அமைந்திருக்கிறது சாஹோ.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரம்மாண்டம் காட்சியில் மட்டுமிருந்தால் போதுமா? அதற்கேற்ற சுவாரஸ்யம், புதுமை, நம்பகத்தன்மை என எதுவும் வேண்டாமா? உண்மையான பிரம்மாண்டம் எப்போதும் கதை சொல்லும் முறை தான். அதற்கு பிரபாஸின் முந்தைய படமே சாட்சி.

கதை நிகழும் வாஜி உலகம் நம்முடன் ஒட்டாமலிருப்பது முதல் பலவீனம். அதன் பின்னர் கதாபாத்திரங்கள். அவ்வளவு கதாபாத்திரங்கள் இருந்தும் ஒருவர் கூட மனதில் பதியாதது துரதிருஷ்டமே. பிரபாஸ்-ஷ்ரத்தா கபூர் காதல் காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களின் நியாபகத்தை தூண்டுவதால் ஈர்க்கவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கம் போல மாஸ் காட்டும் பிரபாஸ், எமோஷன்களில் சற்று விலகியே இருக்கிறார். அருண் விஜய் பாத்திரத்துக்கு பொருந்தினாலும், உண்மையில் வீணடித்து விட்டார்கள்.

தொழில் நுட்ப ரீதியாக படம் சிறப்பாக வந்துள்ளது எனக் கூறலாம். மதியின் ஒளிப்பதிவு, சாபு சிரில் அரங்கு, கமலக்கண்ணனில் வி.எஃப்.எக்ஸ், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் என அனைவரும் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் சாஹோவில். படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத். நம்புவதற்கு சற்று கடினமாகத் தான் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளில் தனது அனுபவத்தை காட்டியுள்ள படத்தொகுப்பாளர், பல காட்சிகளின் நீளத்தை கறாராக நீக்கியிருக்கலாம்.

மோசமான எழுத்து, தேவைக்கும் அதிகமான ஆக்‌ஷன், பிரம்மாண்டம், ஓவர்-லோட் செய்யப்பட்ட ஹீரோயிசம், பார்வையாளனுடன் ஒட்டாத அந்நியத் தன்மை ஆகியவை சாஹோவை திரைக்கு வெளியே வந்தவுடனேயே மறக்கடித்துவிடுகிறது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை வசூல் எவ்வளவு தெரியுமா?


டிஜிட்டல் திண்ணை: ராஜ்ஸ்ரீ - சிதம்பரம்: சிபிஐயின் அடுத்த ஆட்டம்!


பாமக வாக்காளர் மாநாடு: அன்புமணி முப்படையின் அடுத்த திட்டம்!


அடுத்தது விஜய்தான்: சீமான் பேட்டி!


லண்டனில் எடப்பாடி போட்ட பித்தலாட்ட ஒப்பந்தம்!


ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 31 ஆக 2019