மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஆக 2019

தமிழகத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: திருக்குறள் மாநாட்டில் தீர்மானம்!

தமிழகத்தின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: திருக்குறள் மாநாட்டில் தீர்மானம்!

தமிழகத்தின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டுமென திருக்குறள் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாடு சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராசர் அரங்கத்தில் முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது. ஒவ்வொரு அமர்விலும் பேசிய கருத்துரையாளர்கள், புலவர்கள் வீட்டு அலமாரிகளில் பூட்டிக்கிடந்த திருக்குறளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் பெரியார் என்று தெரிவித்தனர். திருக்குறள் குறித்து பெரியார் மீதான விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், ‘பெரியார்தான் முதல்முறையாக 1949ஆம் ஆண்டு திருக்குறளுக்கு மாநாட்டை நடத்தி சிறப்பித்தவர்’ என்று பேசினர். மேலும் திருக்குறள் எவ்வாறு வாழ்க்கையில் பொருந்திப் போகிறது என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

மதியத்திற்குப் பிறகு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மீஞ்சூர் அரசுப் பள்ளி மாணவர்கள் திருக்குறளின் 133 அதிகாரத்தையும் மேடையில் ஒப்புவித்தனர். அதன்பிறகு புத்தர் கலைக் குழுவின் பறையாட்ட நிகழ்வு நடந்தது. இறுதியாக மாநாட்டின் நிறைவரங்கத்தில் தலைவர்கள் உரையாற்றினர். திருக்குறளை இந்து நூல் என்று நிறுவ இந்துத்துவவாதிகள் முயல்வதாக சொல்லி அதற்கு மறுப்புரையும் வழங்கினர். தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் பொழிலன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டின் தீர்மானங்களை முன்மொழிந்து மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி பேசினார்.

திருக்குறளை இயக்கப்படுத்தி செயல்படுத்துவது, தமிழகத்தின் தேசிய நூலாக திருக்குறளை தமிழக அரசு அறிவிக்க வேண்டும், திருவள்ளுவரை உள்ளடக்கி தமிழகத்தின் இலச்சினையை மாற்றியமைக்க வேண்டும், குறள் விழா ஒன்றை தமிழர்கள் பண்பாட்டு விழாவாக கொண்டாட வேண்டும், வழிபாட்டு இடங்கள் ஒவ்வொன்றிலும் திருக்குறள் அறிவகம் என்ற பெயரில் நூலகம் அமைத்திட வேண்டும், உலக திருக்குறள் மாநாட்டை தமிழக அரசு நடத்த வேண்டும் முதலிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தான் தருண் விஜய்க்கு மறுப்பு கூற வேண்டுமென தெரிவித்திருக்கிறார். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வாலாசா வல்லவன், ‘ஒவ்வொருவராக பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். இதனால் டென்ஷனான வைகோ, உடனே கூட்ட அரங்கிலிருந்து வெளியேறிவிட்டார். அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்தி அழைத்துவந்தனர். பொழிலன் பேசி முடித்துவந்ததும் அவரிடம் கோபப்பட்டு பேசியுள்ளார்.

பின்னர் வைகோ, சுமார் 40 நிமிடங்கள் வரை திருக்குறள் குறித்து உரையாற்றினார். அவர் தனது உரையில் பொழிலனைப் பற்றி சிலாகித்து பேசினார். “திருக்குறளில் வாழ்வியல் நெறிகள் குறித்த அனைத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறளை உலக பொது மறையாக அறிவிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. மனுதர்மத்தை எதிர்க்க திருக்குறளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று தந்தை பெரியார் பல்வேறு மாநாடுகளில் அறிவுறுத்தினர். இதைத்தான் தற்போது பெரியார் உணர்வாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

நான், எட்டாம் வகுப்பு படிக்கும் போதே கலிங்கப்பட்டியில் திருக்குறள் கழகத்தை தொடங்கியவன். பல்வேறு தமிழ் அறிஞர்களை அழைத்து திருக்குறள் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பம் என்றாலும் எங்கள் வீட்டில் காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் உருவப் படங்கள் இருக்காது. திருவள்ளுவர் படம் மட்டுமே இருக்கும். திருக்குறளுக்கு நிகரான உரைகள் அடங்கிய புத்தகம் உலகத்திலேயே எங்கும் இல்லை” என்று தெரிவித்தார். மேலும் திருக்குறளின் ஒவ்வொரு பாலிலிருந்தும் ஒரு குறளை மேற்கோள் காட்டிப் பேசியவர், அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

“திராவிடர்களுக்கு கிடைத்திருக்கும் ஈடு இணையற்ற செல்வன் திருக்குறள். இது ஆரிய தர்மத்தையும் மனு தர்மத்தையும் மறுதலித்து ஒரு இடத்தில் கூட மூட நம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல் இருக்கும் காரணத்தால் திராவிடர்களுக்கு கிடைத்துள்ள பெரும் ஆயுதமாக இருப்பதாக பெரியார் குறிப்பிடுகிறார்” என்றும் தெரிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றும்போது, “மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுந்து சென்றவுடன் சலசலப்பு உண்டானது. அவர் மாநாட்டில் குறிப்பிட்டுள்ள தீர்மானங்களில் திருத்தம் சொல்வதற்காகத்தான் சென்றார்” என்று விளக்கினார்.

தொடர்ந்து, “தனித் தனியாக பிரிந்துகிடந்த பெரியாரிய உணர்வாளர்களெல்லாம் எப்போது ஒன்றிணைந்தார்கள் என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். எப்போதெல்லாம் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படுமோ அப்போதெல்லாம் நாங்கள் ஒன்றுபட்டுவிடுவோம். இந்துத்துவவாதிகளின் அக்கிரமங்கள் தொடரும் வரை இந்தக் கூட்டமைப்பும் தொடரும். திருக்குறளை ஏற்றுக்கொள்வது போன்று பேசி அப்படியே அழித்து விடுவது என்ற சூத்திரத்தை அந்த கும்பல் கையில் எடுத்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. திருக்குறளை இனி பரப்ப வேண்டாம். அதனை திரிபுவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தவர்,

“ஆர்.எஸ்.எஸின் குருவான கோல்வாக்கர் தனது ஞான கங்கை நூலில், ‘மகா பாரதம் காட்டும் இந்துக்களின் சமூக வாழ்க்கை முறையைத்தான் வள்ளுவரும் காட்டியுள்ளர். எனவே, திருக்குறள் இந்து எண்ணங்களை வலியுறுத்த இந்துக்களின் மொழி ஒன்றில் ஓர் இந்துவால் படைக்கப்பட்டதென்பதே உண்மை’ என்று குறிப்பிட்டுள்ளார்” என்று சொல்லி பெரியாரும், பாரதிதாசனும் அளித்துள்ள மறுப்பையும் அங்கு சுட்டிக்காட்டினார்.

கூட்டத்தின் இறுதியாகப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "வள்ளுவன் காலத்திலிருந்து இங்கு சனாதனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை போதிக்கும் நூல்தான் திருக்குறள். இதனை அறம், ஒழுக்கம் சார்ந்த நூலாகவே பார்க்கக் கூடாது. அரசியல் கோட்பாட்டு நூலாக பார்க்க வேண்டும். இது தமிழ் மண் என்றோ குறள் மண் என்றோ பெரியார் மண் என்றோ வெறுமனே வீராப்பு பேசினால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. ஏனெனில் நம்மை சனாதன, மனுதர்ம தீ சூழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஒரு பாதுகாப்பு ஆயுதமாக திருக்குறளை ஏந்துவதற்கு முயற்சிக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “திருக்குறளும் திருவள்ளுவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு அடையாளங்களும் ஒரு காரணம். திருவள்ளுவர் ஏதோ மயிலாப்பூரில் பிறந்ததாகக் கூறுகிறார்கள். இதுவரை அப்படித்தான் பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர் பிறந்தது திருவள்ளூரில் என்று அயோத்திதாச பண்டிதர் கூறுகிறார். திருவள்ளுவர் ஊர் என்பதுதான் உருப்பெற்று திருவள்ளூர் என்றாகியது. அங்கு வீர ராகுல விகாரம் என்ற பவுத்த விகாரம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அங்குதான் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த விகாரத்தில் சுற்றுச் சுவரில் பஞ்ச ரத்தின பாடல்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை உடைத்து நாசமாக்கிவிட்டார்கள். அந்த பாடலில் மாமதுரை என்னும் ஊரில் கச்சனுக்கும் உபதேசிக்கும் பிறந்தவர்தான் வள்ளுவ நாயனார் என்று எழுதப்பட்டுள்ளது. ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்தவர் அல்ல திருவள்ளுவர். ஆரணிக்கும் பாலாறுக்கும் இடைப்பட்ட பகுதிதான் கச்சநாடு. அந்த கச்சநாட்டின் மன்னன் கச்சன். அவருக்கு பிறந்தவர்தான் வள்ளுவ நாயனார். நாயனார் என்றால் தலைவர் என்று பொருள். மேற்சொன்ன விகாரத்தில்தான் 1333 குறள்களையும் அறங்கேற்றம் செய்துள்ளார். திரிபீடகத்தை உணர்த்தும் வகையில்தான் இது திரிக்குறள் என்றால் திருக்குறள் என்றானது. இதுதான் அயோத்திதாச பண்டிதர் சொல்வது. அயோத்திதாச பண்டிதரின் பாட்டனார்தான் திருக்குறள் ஓலைச்சுவடியை 1811ல் அப்போதைய சென்னை ஆட்சியர் எல்லீஸ் பிரபுவிடம் அளித்து அதனை நூலாக்குகிறார். நாம் பெருமைப்படுகிற திருக்குறளை பாதுகாத்து வழங்கிய அயோத்திதாச பண்டிதரின் பாட்டானரை சாரும். இது வரலாற்று உண்மை. இதனை ஏன் வெளியில் சொல்லத் தயங்குகிறோம். இந்த தயக்கம் எப்படி வருகிறது.

ஆதிதிராவிடர்கள் என்று தமிழக அரசால் 78 சாதிகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. அதில் வள்ளுவன் என்ற சாதியும் உள்ளது. வள்ளுவன் என்ற சாதிக்கும் வள்ளுவனுக்கு தொடர்பு உண்டா? அப்படியென்றால் இந்த வள்ளுவர் யார்? 78 சாதிகளுக்குள் அடங்கக்கூடிய ஒரு சாதியில் பிறந்தவர்தானா இவர்? என்ற கேள்விகள் எழுகின்றன. சாதி அடிப்படையில் ஆராய்ச்சி செய்வதற்காக இதனை நான் சொல்லவில்லை. இந்த சமூகத்தைச் சார்ந்தவன் என்ற அடையாளம் இருப்பதானாலேயே திருவள்ளுவன் புறந்தள்ளப்பட்டார். வள்ளுவன் படைத்த நூல் என்பதாலேயே திருக்குறளை மக்கள் புறந்தள்ளியுள்ளார்கள். இது ஆய்வுக்காக முன்வைத்த ஒரு கருத்து. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மூன்று வார்த்தைகள் சொல்லும் சாதி ஒழிப்பை திருக்குறள் மூலம் முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டு முடித்தார்.

திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போதே பார்வையாளர் பக்கம் அமர்ந்திருந்த ஒருவர், திருமாவளவனுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். இதனையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அடிக்க முற்பட்டனர். மேடையிலிருந்து திருமாவளவன், அவர்களை நோக்கி, “அவர் ஈக்குவாலிட்டி இல்லை என்றுதான் சொல்கிறார். அவரை அடிக்க வேண்டாம்’ என்று சொன்னார். இதனையடுத்து அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரங்கத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.


மேலும் படிக்க


கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?


சிவகார்த்தி படத்தால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி!


டிவி கொடுக்கும் ஜியோ!


இரட்டைக் குழல் துப்பாக்கி!


டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் நடத்திய பஞ்சாயத்து... வைகோ-அழகிரி காரசார மோதல்!


வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

செவ்வாய் 13 ஆக 2019