மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஜூலை 2019

நதிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் உதவாது: ஸ்டாலின்

நதிநீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் உதவாது: ஸ்டாலின்

நதிநீர் பிரச்சினையை தீர்க்க ஒரே தீர்ப்பாயம் எந்த விதத்திலும் உதவாது எனவும், தண்ணீர் கிடைக்கவும் பயனளிக்காது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ற முகவுரையுடன், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் அமைக்கும் சட்ட மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செயல், உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள காவிரி இறுதித் தீர்ப்பிற்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது என்று எச்சரிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அப்போதே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் அதை எதிர்த்தன. ஆனால் விடாப்பிடியாக அதே மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த மசோதாவில், “நடைமுறையில் உள்ள நதி நீர் நடுவர் மன்றங்கள் எல்லாம் கலைக்கப்படும்” என்றும், “அந்த நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் தாவாக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாச் சட்டத்தில், “நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்” என்று இருந்த விதி, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இப்போது புதிதாக தாக்கல் செய்யப்படும் மசோதாவிலும் அதேபோல் இருந்தால் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எழுவது தவிர்க்க முடியாததாகும். மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதைத் தட்டிக் கேட்கவும் இயலாமல் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக தயங்கி நிற்கிறது.

அப்படியிருக்கையில் நடுவர் மன்றத் தீர்ப்பையே அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்பது எவ்விதத்திலும் நதி நீர்ப் பிரச்சினைய தீர்க்கவும் உதவாது, தண்ணீர் கிடைக்கவும் பயன்படாது என்பதை, மத்திய பாஜக அரசு ஏனோ உணரத் தவறியிருப்பது வேதனையளிக்கிறது. ஆகவே “ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம்” என்ற போர்வையில்,காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கலைத்து உருக்குலைப்பதற்கு ஒரு கருவியாக மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி விடக்கூடாது. அப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தாது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.

திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதா தாக்கலாகும் போது எச்சரிக்கையாக இருந்து, தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக உறுதியுடன் எடுத்து வைப்பார்கள் என்பதைத் தெரிவிக்கும் அதே வேளையில், தமிழக அரசும் உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு ‘ஒரே நதிநீர் தீர்ப்பாயம்’ அமைக்கும் மசோதா, காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எந்த விதத்திலும் ஊறுவிளைவித்து விடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து, அதற்கான உறுதிமொழியை மசோதா நிறைவேறும் முன்பு மத்திய அரசிடம் பெறவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்சார விநியோகம், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகச் சொல்லிக் கொண்டு அனைத்தையும் மத்திய அரசிடம் மையப்படுத்தும் முயற்சி. இதெல்லாம் சரியானதுதானா என சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

வியாழன் 11 ஜூலை 2019